Tuesday, June 3, 2014

முகநூலில் அரசியல் பேசக்கூடாதா?



ஒரு தோழர் எழுதியிருந்த அரசியல் பதிவிற்கு ஒருவர் இட்டிருந்த கமெண்ட் “பல நல்ல விஷயங்களுக்காகத்தான் முகநூல் இருக்கு. அரசியல் பண்ணறதுக்கு இல்லை”.

அரசியல் பேசாதே என்று சொல்வதை விட மிகப் பெரிய அரசியல் வேறு எதுவும் இல்லை.

எனக்கு ஒரு பழைய விஷயம்தான் நினைவிற்கு வருகிறது.

ஒரு காலத்தில் (எண்பதுகளின் துவக்கத்தில் என்று நினைக்கிறேன்) காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் “மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, இளைஞர்களுக்கு அரசியல் அவசியமில்லை. பெண்களும் தொழிலாளர்களும் விவசாயிகளும் கூட அரசியலை விட்டே விலகி நிற்க வேண்டும் என்று இந்த தேசத்து மக்களுக்கு  உபதேசம் சொன்ன போது “மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளர்களும் பெண்களும் விவசாயிகளும் அரசியலை நாடக்கூடாது என்றால் அரசியல் என்ன திருடர்கள், பொறுக்கிகள், கடத்தல்காரர்கள், பதுக்கல் பேர்வழிகளுக்கு மட்டும் சொந்தமானதா என்று எங்கள் சங்கத்தின் மகத்தான தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் சுனில் மைத்ரா சூடாக பதிலளித்தார்.

அது போல சிலர் வெறும் வெட்டிப் பொழுதுபோக்குக்காக முகநூலை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு அரசியல் எட்டிக்காயாக கசக்கிறது. சில சமயம் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் வருகிறபோது அவற்றுக்கு பதில் சொல்ல இயலாத கையாலாகததனமும் கூட அரசியல் வேண்டாம் என்று சொல்ல வைக்கிறது.

வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போவோம் என்றுள்ளவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசியல் கண்ணுக்கே தெரியாமல் முழுமையாக கலந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவில்லை. தங்களை பாதிக்கும் அரசியல் கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமலும் அதனிடமிருந்து மீள்வதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப் படவேண்டியுள்ளது.

அப்படிப்பட்டவர்களை அறியாமையிலேயே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவர்கள்தான் அரசியல் வேண்டாம் என்று சொல்வார்கள். காங்கிரஸ் முன்பு சொன்னதும் அந்த அடிப்படையில்தான்.

சரி அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் முகநூலில் அப்படி என்ன நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்? சினிமாவைப் பற்றியும் கிரிக்கெட்டைப் பற்றியும் பேசுவதை விடவா அரசியல் பேசுவது மோசமானது? மார்க்கே ஒப்புக்கொள்ள மாட்டாருப்பா....
  

No comments:

Post a Comment