Friday, June 13, 2014

மதநம்பிக்கைக்கு எதிரானதா மதச்சார்பின்மை?

                                                                                                                க. கனகராஜ்


 


மதச்சார்பின்மை கூடுதல் முக்கியத்துவம் பெறுவது சமீபத்திய நிகழ்வாக இருக்கலாம். ஆனால் மதச்சார்பின்மையின் வேர்கள்மதம் தோன்றிய காலம் தொட்டே உள்ளன. மதச்சார்பின்மை மத விரோதமான கொள்கையல்ல. தன் மதத்தை, தன் கடவுளை நேசிப்பதற்கு எதிரானதுமல்ல. மாறாக, பிற மதங்களை இழிவுபடுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் எதிரானது. பிற மதத்தினரை துன்புறுத்துவதை தடுப்பது. இது மதச்சார்பின்மையின் சமூகக் கொள்கை. அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலும் செயல்படாதிருப்பதே மதச்சார்பின்மையின் அரசியல் கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் (மோடியும் லிபரல்களின் தோல்வியும் - இந்து 23.5.2014) அவர்களும் மற்றும் சிலரும் திரிக்க முயல்வதுபோல எல்லாமதங்களின் அடிப்படையிலும் செயல்படுவதல்ல. அரசும், அரசியலும் பொதுவானது. மதநம்பிக்கையும், கடவுள் வழிபாடும் தனிநபர் சார்ந்தது. 

இந்திய அரசியல் சட்டப்படி தான் இந்தியர் வாழ வேண்டுமென்று சட்டம் நிர்ப்பந்திக்கும். ஆனால் ஒரு மதத்தின் அடிப்படையில் வாழ வேண்டுமென யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மதச்சார்பின்மை எந்தவொரு மத நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. கேலியும் செய்வதில்லை. எந்தவொருமதமும் அரசுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறது. அரசு நடவடிக்கையிலிருந்து ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று கோரி நிற்கிறது.எந்த மதமும் ஒற்றைக் கடவுளையும், ஒரே மாதிரி சடங்கு சம்பிரதாயங்களையும் கொண்டதாக இல்லை. இந்து மதத்தில் சைவம், வைணவம் (அதிலும் கூட வடகலை, தென்கலை) நாட்டார் தெய்வங்கள் போல, இஸ்லாத்தில் சன்னி, ஷியா, அலவி, வஹாபி, சுஃபி போல,கிறிஸ்துவத்தில் கத்தோலிக்கர், புரோட்டஸ்டன்ட், பாப்திஸ்து, லுத்ரன், பெந்தகோஸ்தே போல ஏராளமான பிரிவுகள் உள்ளன. இதரமதங்களிலும் கூட இப்படித்தான் இருக்கிறது. 

தெய்வங்களும், வழிபடு முறைகளும் ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்குள்ளேயே வேறுபாட்டுடன் இருப்பதை காண முடியும். ‘அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வலியுறுத்தினாலும் அரியை வணங்கி, சிவனை வெறுப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன்’ என்பது கூட தமிழில் உள்ள வழக்குதான்.
சிலுவையை வணங்குவோர் - மறுப்போர், மேரி மாதாவை வணங்குவோர் - மறுப்போர், ஷியா, சன்னி முஸ்லீம்களுக்கிடையிலான வேறுபாடு இவையெல்லாம் நாம் அறியாததல்ல. பூணூல் போடுவோரும் இல்லாதோரும் இந்துக்கள்தான். தாலிகளிலும், சடங்குகளிலும் எத்தனை பன்மைத்தன்மை. ஒரே மதத்திற்குள்ளும் ஒரே சாதிக்குள்ளும் கூட ஏராளமான வேறுபாடுகள் இணங்கியும், முரண்பட்டும் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. எல்லா பன்மைகளும் ஒற்றைகளின் சேர்க்கையே. எல்லா ஒற்றைகளும் பன்மைகளின் பகுதியே. இதை உணராதோர் மட்டுமே சகிப்புத் தன்மையற்றவராக இருக்கிறார்கள். மதநம்பிக்கையுடையவர் மதச்சார்பற்றவராக இருக்க முடியும். ஏனெனில் மதச்சார்பின்மை அரசு மற்றும் பொதுவெளி சார்ந்ததே அன்றி தனி மனித நம்பிக்கை பற்றியதல்ல. 


பாரதியைவிட காளி பக்தன், பராசக்தி பக்தன் உண்டா?, காந்தியை விட இந்து மதத்தின் மீதான பிடிப்பும், காதலும் கொண்டவர் உண்டா?, ஏன் விவேகானந்தர் இந்து துறவி தான். இவர்களை எவரேனும் மதவெறியர் என்று சொல்லத் துணிந்தது உண்டா? ஆனால் முகமது அலி ஜின்னா முஸ்லீம் மத பழக்கவழக்கங்களை கடைபிடித்தவரல்ல. சொல்லப்போனால் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி திளைத்தவர். அவரது அரசியல்கொள்கை மதச்சார்பற்றது என்று சொல்ல முடியுமா?. எனவே அரசியல் நோக்கத்திற்காக மதத்தை பயன்படுத்துவதும், அரசியல் கொள்கைகளில் ஒரு மதத்திற்கு இடமளிப்பதுமே மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் ராகு காலம் பார்த்து வேலைக்கு வரும் ஒரு விஞ்ஞானியை கேள்விகேட்கக் கூடாது என்கிறார்.
ஒருவர் விஞ்ஞானியோ, அரசு ஊழியரோ அவர் வீட்டு எந்தவிழாக்களையும் ‘நல்ல நேரத்தில்தான்’ கொண்டாடுவேன் என்று சொல்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால், அலுவலகத்திற்கு ராகு காலம் கழித்து தான் வருவார் என்பதை எப்படி ஏற்க முடியும்?. ராகு காலத்தில் வேலைக்கான நேர்முகத் தேர்வு வந்தால் போகாமல் இருந்துவிடுவார்களா?, எனது கடவுளுக்கு இந்தக்கிழமைதான் உகந்த நாள். எனவே அந்த தினத்தில் நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்வதை அனுமதிக்க முடியுமா?. 

இப்போதைய ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பது கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர்களின் நடைமுறை. அதைத்தான் பின்பற்றி வருகிறோம். ராகு காலம் பார்ப்பதை பணிநிமித்தம் அனுமதிக்க முடியாது என்றால் அதனால் அவர் நிர்ப்பந்திக்கப்படுவதாக கருதினால் அவரை மாற்ற வேண்டுமே தவிர நடைமுறைகளை மாற்றிக் கொள்ள முடியாது. மதமாற்றம் குறித்து பேசப்புகுந்த ஷிவ்விஸ்வநாதன் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் மட்டும் மதமாற்றம் செய்வது போலவும், அதன் காரணமாக மதநம்பிக்கை உள்ள மத்திய தர வர்க்க இந்துக்கள் மோடிக்கு ஆதரவாக நின்றதாகப் பேசுகிறார். இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே மதமாற்றம் துவங்கிவிட்டது. நாடு முழுவதும் புத்த மதம் பரவியிருந்ததும் நான்கு திசைகளிலும் சென்று மனிதர்களையும், மன்னர்களையும் இந்து மதத்திற்கு ஆதிசங்கரர் மாற்றியதையும் மதமாற்றக் கணக்கில் இல்லாமல் எப்படி பார்ப்பது? கூன் பாண்டியன் சமண மதத்தை துறந்துவிட்டு சைவத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவரும், இஸ்லாமியருமா காரணம். 

எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டது யாரால் என்பதை இலக்கியங்கள் பதிவு செய்துதானே வைத்திருக்கின்றன. ஒரு மதத்தை பின்பற்றுவதும், இன்னொரு மதத்திற்கு மாறுவதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மேலும் மதமாற்றத்தை தடுப்பது சட்டங்களால் ஆகாது.சனாதன இந்து மதத்தில் இருந்த கொடூரமான சாதிய பாகுபாடுகள்தான் அடித்தட்டு மக்கள் மதமாறுவதற்கு காரணமாக இருந்தது என்று சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் போன்றவர்களே குறிப்பிட்டுள்ளனர். சாதியின் பெயரால் பெரும்பகுதி மக்கள் கல்வி பெறுவது கூட தடுக்கப்பட்ட பின்னணியில்தான் மதமாற்றங்கள் நிகழ்ந்தன.

இன்றைக்கும் கூட நீடிக்கும் கோயிலுக்குள்ளும், பொதுப்பாதைகளிலும் நுழைவதை கூட தடுக்கும் நந்திகள் உடைத்து நொறுக்கப்பட வேண்டும். ஆனால் மதம் மாறுவதால் மட்டுமே இழிவுகள் ஒன்றும் மாறிவிடவில்லை என்பதையே மீனாட்சிபுரங்களும், தலித் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையும் வலியுறுத்தி நிற்கின்றன. இந்து மதத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11 சிகாகோவில் உரையாற்றுகிற போது, “பிரிவினைவாதத்தாலும், மதவெறியாலும் இந்த அழகிய உலகு நீண்ட நாட்களாக திணறிக்கொண்டு இருக்கிறது. இந்த பூமி முழுவதும் மதவெறி நிரம்பிக் கிடக்கிறது. உலகை மீண்டும், மீண்டும் அது ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. நாகரிகத்தை அழித்தது. எத்தனையோ நாடுகளை சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த கொடியஅரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்திருக்கும்.”ஷிவ் விஸ்வநாதன் மதச்சார்பற்றவர்கள் குறித்து சொல்லியிருப்பவை பலவும் மதவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் புளுகுமூட்டைகளே.
அதை அவரும் வழிமொழிந்திருப்பது வருத்தத்திற்குரியது. 

மதச்சார்பின்மையின் தோல்வி நிரந்தரமானால் அது மனித குலத்தின் தோல்வியாகவே முடியும். மதச்சார்பின்மை திரிக்கப்பட்டிருந்தால் அதை சரிபடுத்துவதும் வெற்றி பெற வைப்பதுமே மனித குல முன்னேற்றத்திற்கான பிரதானமான முன்நிபந்தனையாக இருக்கும்.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

நன்றி - தீக்கதிர் நாளிதழ் 11.06.2014

1 comment:

  1. ///மதச்சார்பின்மையின் தோல்வி நிரந்தரமானால் அது மனித குலத்தின் தோல்வியாகவே முடியும். ///
    சத்தியமான வார்த்தைகள்

    ReplyDelete