Tuesday, June 10, 2014

தேர்தல் முடிவுகள் – ஒரு தொழிற்சங்கத்தின் பார்வையில்



பதினாறாவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழ் “இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் ஜூன் 2014 இதழின் தலையங்கம்.




இருளைக் கிழிக்கும் தீப்பந்தமாய் ... ...
போராட்டம் எனும் ஆயுதம் கைகளில் ... ...


தமிழாக்கம் : தோழர் எம்.கிரிஜா,
                இணைச்செயலாளர்,
                அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்


நடந்து முடிந்துள்ள 16வது மக்களவை தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது.  பதிவான மொத்த வாக்குகளில் 31 சதவீத வாக்குகளைப் பெற்று, 282 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.  பாஜகவும் அதன் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 35 சதவீத வாக்குகளைப் பெற்று 336 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளன.  1984ம் ஆண்டுக்குப் பிறகு, தனிப் பெரும்பான்மையோடு ஒரு அரசியல் கட்சி வெற்றி பெற்றிருப்பது இதுவே முதன் முறையாகும்.  வாக்காளர்களின் தீர்மானகரமான இத்தீர்ப்பினை நாம் மதிக்கிறோம்.  வெற்றி பெற்றவர்களுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  அதே நேரத்தில், மக்களின் இத்தகைய தீர்மானகரமான தீர்ப்பின் அடிப்படையில் பதவி ஏற்றிடும் பிரதமர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமாகத் திகழும் நீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடிப்படையில் தனது அரசினை செயல்படுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு இயல்பானதேயாகும்.

பாஜகவின் பிரமிக்கத்தக்க இத்தகைய வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு.  ராகுல் காந்திக்கு எதிராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி ஒரு நாட்டின் அதிபருக்கான தேர்தல் வடிவத்தில் பிரச்சாரத்தினை பாஜக மேற்கொண்டது. அத்தகையதொரு வடிவத்திலேயே பிரச்சாரத்தினை காங்கிரஸ் கட்சியையும் மேற்கொள்ள செய்வதில் பாஜக வெற்றி கண்டது.  இதன் காரணமாக, இந்திய தேசத்தின் எதிர்காலம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள கொள்கைகள் குறித்த பிரச்சாரமாக இத்தேர்தல் பிரச்சாரம் அமையவில்லை.  மாறாக, தனிநபர்களைப் பற்றிய பிரச்சாரங்களாகவே அமைந்தன.  இரண்டாவதாக, ஆர்எஸ்எஸ் அமைப்பானது பிரச்சாரப் பணியினை ஒட்டுமொத்தமாக தனது கைகளில் எடுத்துக் கொண்டது.  பல ஆயிரக்கணக்கான  பிரச்சாரகர்களை களத்தில் இறக்கிவிட்டு மக்களை மத அடிப்படையில் பிரித்திடும் வகையில் திறமையாக தனது பிரச்சாரத்தினை மேற்கொண்டது.  நவீன தாராளவாதக் கொள்கையால் பெருமளவில் பயனடைந்துள்ள உயர்தர, மத்தியதர மக்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தயக்கத்துடனேயே செயல்படுத்தப்பட்டதாக கருதினர்.  எனவே, சமூக வலைத்தளத்தில் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டு தங்களது ஒட்டுமொத்த ஆதரவை மோடிக்கு இவர்கள் வெளிப்படுத்தினர்.  கார்ப்பரேட் நிறுவனங்களும் மோடியை முழுமையாக ஆதரித்தன.  அவரது பிரச்சாரத்திற்கு பெருமளவில் நிதியளித்தன.  மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஊடகங்கள், தலைசிறந்த நிர்வாகியாக மோடியை முன்னிறுத்தின.   

இந்திய தேசத்தின் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்த்திடவோ அல்லது மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பரிசாக அளித்திடவோ துளிக்கூட தயக்கம் காட்டாத மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியால் பயனடைந்தவையே இக்கார்ப்பரேட் நிறுவனங்கள்.  இத்தேசத்தின் அனைத்து துயர்களையும் துடைத்தெறிந்திட தெய்வீகத்தன்மையுடன் அனுப்பப்பட்டுள்ள இறைதூதரே மோடி என்ற மாயத்தோற்றத்தை இவை ஏற்படுத்தின.  இத்தேசத்தை வழிநடத்திட கடவுளால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கங்கை தாயின் அழைப்பின் பேரிலேயே தான் வாரணாசியிலிருந்து தேர்தலில் போட்டியிடுவதாகவும் மோடி கூறினார்.  இவ்வாறெல்லாம் கூறிடுவதன் மூலம் மோடியும் தன்னை இரட்சகனாக முன்னிறுத்திக் கொண்டார்.

ஆனால், மோடியின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியானது மிகப் பெரிய பங்களிப்பினை செலுத்தியது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்திய பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின.  மக்களின் முதுகுகளின் மீது தாங்கொணா சுமையை ஏற்றிய பணவீக்கத்தை கட்டுப்படுத்திடவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் ஐமுகூ அரசு தவறியதால் அதன் எதிர்காலம் பாதிக்கப்பட்டது.  இன்றைக்கு இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மூன்றில் இருபகுதியினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவர்.  இவர்களில் பெரும்பாலானோர் தங்களது எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்.   

இவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி அளித்த வாக்குறுதியால் இவர்கள் சுலபமாக ஈர்க்கப்பட்டனர்.  மக்கள் தங்களது வாழ்க்கையிலும், வாழ்வாதாரத்திலும் எதிர்கொண்ட பிரச்சனைகளை சமாளித்திட காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் முழுமையாகத் தவறின.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, ஊழல் நடவடிக்கைகளை மிக மென்மையாக அணுகியது. அதே நேரத்தில் சலுகைசார் முதலாளித்துவத்தை (Crony capitalism) தங்குதடையின்றி ஊக்குவித்தது.  எனவே, காங்கிரசை மக்கள் கோபத்துடன் நிராகரித்துள்ளனர்.  முன்னெப்போதும் இருந்திராத அளவிலான மிகக் குறைவான இடங்களிலும், மிகக் குறைவான சதவீத வாக்குகளையும் பெற்று காங்கிரஸ் கட்சியானது வரலாறு காணா தோல்வியைத் தழுவியுள்ளது.  மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது தாங்கள் செயல்படுத்திய நவீன தாராளவாதக் கொள்கைகளே தங்களது தேர்தல் தோல்விக்கு காரணம் என்பதனை ஒப்புக் கொள்ள காங்கிரஸ் கட்சி தற்போதும் மறுத்து வருவது வியப்பளிக்கிறது.     

ஊடகத்தின் உதவியுடன் பாஜகவால் செய்யப்பட்ட வலுவான பிரச்சாரமானது, வளர்ச்சிக்கான வாக்குறுதியை கொண்டதாகவும், அவர்களது முக்கியமான நிகழ்ச்சி நிரலான இந்துத்துவாவை உறுதி கூறுவதாகவும் அமைந்திருந்தது.  இத்தகைய பிரச்சாரத்தின் வாயிலாக, நவீன தாராளவாதக் கொள்கையை இவர்கள் முழுமையாக ஆதரிப்பதையும், 1998 முதல் 2004 வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னர் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இவர்களது ஆட்சியிலும் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதை சாதுர்யமாக மூடி மறைத்து விட்டார்கள்.  சலுகைசார் முதலாளித்துவத்தை ஊக்குவித்திடவே பாஜகவும் உறுதி பூண்டுள்ளது. குஜராத் அரசின் ஆதரவு இல்லாதிருந்தால் அதானியால் தனது மாபெரும் சாம்ராஜியத்தை நிர்மாணித்திருக்க முடியாது.  இது குறித்தெல்லாம் எந்த கேள்வியையும் எழுப்பிட ஊடகங்கள் மறுத்துவிட்டன.  இதன் வாயிலாக பாஜகவின் பிரச்சாரம் கேள்விக்கு உள்ளாகாமல் இருக்க ஊடகங்கள் உதவி புரிந்தன.  இவர்களது இத்தகைய பிரச்சார அலையில் தமிழகம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் தவிர இதர மாநிலங்களின் பெருமளவிலான பிராந்திய கட்சிகள் அடித்துச் செல்லப்பட்டன.   

ஏமாற்றமளிக்கக் கூடிய வகையில் இடதுசாரிகள் பெற்றுள்ள குறைவான எண்ணிக்கையானது உழைக்கும் வர்க்கத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.  இடதுசாரிகள் திரிபுராவில் தங்களது பலத்தை கெட்டிப்படுத்தியுள்ளனர்.  கேரளத்தில் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.  ஆனால், ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அவர்களது தற்போதைய நிலை கவலையளிப்பதாகவே உள்ளது.  தேசத்தின் மனசாட்சியை பிரதிபலிப்பவர்களாக இடதுசாரிகளையே இத்தேசத்து உழைக்கும் வர்க்கம் கருதி வருகிறது.  பொருளாதார மற்றும் சமூக நீதிக்கான இவர்களது உறுதியான நிலைபாடு இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கு ஊக்கம் அளிப்பதாக இருந்து வந்தது.  வாக்குச் சாவடி கைப்பற்றுதல் மற்றும் பெருமளவில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பது சரியே.  ஆனால், ஏமாற்றமளிக்கின்ற வகையிலான இடதுசாரிகளின் குறைவான எண்ணிக்கையிலான வெற்றிக்கு இவை மட்டுமே காரணமாக இருந்துவிட முடியாது.  இத்தகைய நிலைக்கான காரணங்களை இடதுசாரியினர் இதயசுத்தியோடு ஆய்வு செய்து, இத்தேசத்தின் உழைப்பாளி மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக தேவைப்படும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.   

இடதுசாரிகளின் இத்தகைய நிலையால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள நவீன தாராளவாத கொள்கையினை ஆதரிப்பவர்கள், அவசர அவசரமாக இடதுசாரிகளுக்கு இரங்கற்பா பாடி வருகின்றனர்.  எனினும், இத்தகைய எதிர்மறையான சூழலிலும் கூட, மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரியினருக்கு கிட்டத்தட்ட 30 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.  எனவே, இடதுசாரியினர் குறித்து இவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்பதனை மீண்டும் நிரூபித்திடுவார்கள்.  இடதுசாரியினருக்கு எதிர்காலம் இல்லை எனில் ஏழைகள், உடைமைகள் ஏதுமற்றோர் மற்றும் உழைப்பாளி மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற தெளிவான புரிதலுடன் இடதுசாரிகள் குறித்த இவர்களது பேச்சுக்களை பிதற்றல்கள் என உழைக்கும் வர்க்கம் கருதிட வேண்டும்.  இடதுசாரி என்பது சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் மற்றும் நீதி குறித்த சிந்தனையாகும்.  இத்தகையதொரு சிந்தனை, உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்துக் கொண்டே இருக்கும்.  எனவே, இடதுசாரி சக்திகளை வலுப்படுத்திட வேண்டிய பொறுப்பு உழைக்கும் வர்க்கத்திற்கே உள்ளது.  மேலும், வர்க்க புரிதலின் அடிப்படையிலான போராட்டங்கள் மூலம் இடதுசாரி சக்திகள் தாங்கள் வலுவாக உள்ள இடங்களைத் தாண்டி பிற இடங்களிலும் தங்களை விரிவுபடுத்திக் கொள்ளவும் உதவிட வேண்டும். 

ஜனநாயகத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்திட தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசரத் தேவை குறித்து நீண்ட காலமாக நாம் பேசி வருகிறோம்.  இன்றைய தேதியில் இவ்விஷயம் மிகத் தேவையான ஒன்றாக மாறியுள்ளது.  பதிவு செய்யப்படும் மொத்த வாக்குகளில் அதிகமான வாக்குகளுடன் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்கப்படுகிற தற்போதைய நடைமுறை (first past the post system) குறைவான சதவீத வாக்குகளையே பெற்றபோதும் அக்கட்சி ஆட்சியதிகாரத்தில் அமைந்திட உதவிடுகிறது.  அதனால்தான், தற்போது 69 சதவீத வாக்காளர்கள் பாஜகவிற்கு எதிராக தங்களது வாக்குகளைப் பதிவு செய்தபோதும் அவர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிட முடிந்துள்ளது.  நாடு தழுவிய அளவில் பதிவான வாக்குகளில் அதிக சதவீதத்திலான வாக்குகளைப் பெற்ற மூன்றாவது கட்சியாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி (BSP) இருந்தபோதும் அக்கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கிடையாது.  ஆனால் அதே நேரத்தில், குறைவான சதவீத வாக்குகளையே பெற்ற கட்சிகளின் சார்பில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் வாயிலாக தற்போதைய நடைமுறையிலுள்ள இத்தகைய குறைபாடுகள் களையப்பட வேண்டும். 
 
இத்தேர்தல்களில் பணபலத்தின் அநாகரீகமான பங்கினை தெளிவாகக் காண முடிந்தது.  ‘இத்தேர்தல்களில் 30,000 கோடி ரூபாய்களுக்கும் அதிகமானதொரு தொகை பெரும்பான்மை கட்சிகளால் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்கள் ஊடகங்களில் மட்டும் செலவிடப்பட்டுள்ளது என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.  ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது (பிசினஸ் ஸ்டேண்டர்ட் 15-5-2014).‘  15வது மக்களவையில் 305 கோடீஸ்வரர்களே இடம் பெற்றிருந்தனர்.  ஆனால், 16வது மக்களவையில் 449 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  ஆக, 15வது மக்களவையை விட கூடுதலான எண்ணிக்கையில் கோடீஸ்வரர்களை கொண்டுள்ள தனிச்சிறப்பை 16வது மக்களவை பெற்றிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை.  இந்திய மக்களின் ஆண்டு சராசரி வருமானம் கிட்டத்தட்ட 75000 ரூபாய்களாக இருக்கிறபோது, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களின் சராசரி மதிப்பு கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய்கள் ஆகும்.  தேர்தல்களில் பணபலம் கோலோச்சியுள்ளது என்பதும், இன்றைக்கு இந்திய அரசானது செல்வந்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.  

 தேர்தல் செலவுகளுக்கான நிதியை அரசே அளிப்பதன் வாயிலாக தேர்தல்களில் பணபலம் அதிகாரம் செலுத்துவதனை முற்றிலுமாக அகற்றிட தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனையே இத்தகைய நிலை வலியுறுத்துகிறது.  இவ்வாறு தேர்தல் செலவுகளுக்கான நிதியை அரசே அளிப்பதன் வாயிலாக அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-கார்ப்பரேட்டுகள் இடையிலான பிணைப்பை கட்டுப்படுத்திட இயலும்.  ஆனால், இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களை இத்தகைய சக்திகள் விரும்பிட மாட்டார்கள்.  எனவே, இப்பிரச்சனை மக்கள் இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் வாயிலாக பொருளாதாரத்தில் கிராக்கியை உருவாக்கிடுவது ஆகியவற்றிற்கான உடனடி நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.  அதுமட்டுமின்றி, மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்திட வழிகோலும் வகையில் சமூக மற்றும் மதநல்லிணக்கத்தை அரசு உத்திரவாதம் செய்திட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.  மக்களின் நம்பிக்கையைப் பெறாத நவீன தாராளவாதக் கொள்கையின் பாதையில் பயணித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அடைந்த படுதோல்வியிலிருந்து உரிய பாடத்தைக் கற்றுக் கொண்டு, புதிய அரசானது மாற்றுக் கொள்கைகளை கடைப்பிடிக்குமா என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகும்.  

 இது தவிர, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை இரத்து செய்வது போன்ற தங்களது முக்கியமான விஷயங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்துத்துவா சக்திகள் விரும்பிடும்.  அத்தகைய திசையிலேயே புதிய அரசு செயல்படும் என்பது வங்காள மொழி பேசிடும் இஸ்லாமியர்கள் பற்றி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வலியுறுத்தியது உட்பட, தேர்தல் சமயத்தில் மததுவேஷத்துடன் செய்யப்பட்ட பிரச்சாரங்களிலிருந்து தெளிவாகிறது.  மோடி அரசு செயல்படுத்திட வேண்டிய வர்க்க ரீதியிலான நிகழ்ச்சி நிரலை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும் அளித்துள்ளனர். பொருளாதாரத்தில் உத்வேகத்தைத் தூண்டிடத் தேவையான உடனடி நடவடிக்கைகளை அவர்கள் கோரியுள்ளனர்.  அரசின் சமூக செலவினங்களில் வெட்டு, அரசுப் பணியிடங்களை குறைப்பது மற்றும் நீக்குவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் தொழிலாளர் சட்டங்களை திருத்துவது போன்றவற்றையும் அவர்கள் கோரியுள்ளனர்.

தேர்தல் முடிவுகளால் இன்சூரன்சு ஊழியர்கள் முன்னுள்ள சவால்கள் அதிகரித்துள்ளன. இன்சூரன்சு சட்ட (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கூக்குரல் ஏற்கனவே ஒலிக்கத் துவங்கிவிட்டது.  இந்நிலையில், இன்சூரன்சு துறையை பாதுகாத்திட, ஒரு நல்ல ஊதிய உயர்வினை வென்றெடுத்திட, மற்றும் ஓய்வூதியத்திற்கான மற்றொரு வாய்ப்பினை பெற்றிட நாம் இன்னமும் பல்வேறு தியாகங்களை புரிந்திட வேண்டும் என்பதனை நாம் தெளிவாக உணர்ந்திடுவோம்.  நமது வெற்றிகரமான இயக்கத்தின் மீது முழுமையான நம்பிக்கையுடன், தேவைக்கேற்ப இத்தகைய தியாகங்களை புரிந்திட இன்சூரன்சு ஊழியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

குஜராத் மாடல் பாதையில் இந்த அரசு பயணிக்கும் எனில், ஒரு நீண்ட கால போராட்டத்திற்கு உழைப்பாளி வர்க்கம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனெனில், குஜராத் மாடல் என்பது தீவிரமான நவீன தாராளவாதத்தையும், மதரீதியிலான மக்கள் திரட்டலையும் உள்ளடக்கியதாக இருக்கும்.  ஆனால், இத்தகைய நிலை கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை.  விரக்தியடைந்திட வேண்டியதில்லை.  இருளடைந்திருந்த காலங்களில் கூட, வெளிச்சத்தை நோக்கிய போராட்டத்திற்கான அதிகாரம் நம்மிடம் இருந்தது.  தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் ஆதரவான, நாட்டில் அதீதமான அளவில் காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வையும், அசமத்துவ சொத்து பங்கீட்டினையும் குறைத்திட உதவிடும் வளர்ச்சிக்கான மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களையும், முற்போக்கு சக்திகளையும் ஒன்று திரட்டி, இத்தகைய போராட்டத்தினை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  இதுவே இன்றைய தருணம் நம் முன் விடுத்துள்ள அறைகூவல் ஆகும்.  இந்த அறைகூவலை நாம் உரத்த குரலில், மனத்துணிவுடன், கொள்கை பிடிப்புடன் உணர்வுபூர்வமாக நிறைவேற்றிடுவோம்.  

No comments:

Post a Comment