Wednesday, June 25, 2014

அவர்களுக்குத்தான் அதிக ஊதியம் அளிக்கப்பட வேண்டும்



கடந்த வாரத்தில் ஒரு நாள் துயர நிகழ்வு. ஒரு அகால மரணம். இறந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. பிரேதப் பரிசோதனை தொடங்கும் முன்பு சடலத்தை அடையாளம் காட்ட உறவினர்கள் அழைக்கப்பட்ட போது நானும் உடன் சென்றேன்.

முப்பது வினாடிகள் கூட அங்கே இல்லை. மேஜையில் கிடத்தப்பட்ட சடலங்கள், தரையில் கிடத்தப்பட்ட சடலங்கள் என்று அங்கே வீசிக் கொண்டிருந்த துர்நாற்றத்தை அந்த முப்பது நொடிகள் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. அன்று முழுதுமே உணவு எடுத்துக் கொள்ள முடியாதபடி அதன் தாக்கம் இருந்தது.

ஆனால் நாள் முழுதுமே இந்த பிணவறையில் இருந்து கொண்டு, பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவர்களுக்கு உதவுவது, அறுப்பது, தைப்பது, சுமந்து கொண்டு அமரர் ஊர்தியில் ஏற்றுவது போன்ற பணிகளை எல்லாம் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்கள்தான் செய்கின்றனர்.

இந்த பணி என்பது மட்டுமல்ல, பொதுவாக துப்புறவுப் பணிகள் அதிலும் குறிப்பாக கழிவறை சுத்தம் ஆகியவற்றை செய்வது ஒடுக்கப்பட்ட மக்களில் அடி மூட்டையாக இருக்கிற அருந்ததிய இன மக்கள்தான். வேறு யாரும் செய்ய முன் வராத, செய்ய தயாராக இல்லாத இந்த வேலைகளை செய்பவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கிறதா?

சொல்லப்போனால் நாற்றத்திலும் அசுத்தத்திலும் நாள் முழுதும் உழன்று கொண்டிருக்கிற இந்த உழைப்பாளிகளுக்கு மற்றவர்களுக்கு அளிப்பதை விட கூடுதலான ஊதியம் அளிக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவாக ஊதியம் பெறுவது என்னமோ இவர்கள்தான். இந்த நிலை மாறிட வேண்டும்.

இவர்களின் வாழ்நிலையை மாற்றிட உள் ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மற்ற அருந்ததியர் அமைப்புக்களோடு இணைந்து நடத்தியதால் மட்டுமே 3 % உள் ஒதுக்கீடு என்பது வந்தது. மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் இந்த சமுதாயத்தினரும் படிப்பதற்கான வாசலை இந்த உள் ஒதுக்கீடே உருவாக்கியது.

கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான சட்டம் வந்துள்ளது. அதன் அமலாக்கம் தேவைப்படுகிறது. இந்த தேசத்தின் மிகப் பெரிய திறந்த வெளி கழிவறையாக ரயில்வே பாதைகள் இருப்பது மிகப்பெரிய அவலம். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அளவிற்கு முன்னேறிய தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நாட்டில் இன்னும் பாதாள சாக்கடையில் இறங்கிய துப்புறவாளர்கள் இறந்து போகும் கொடுமையும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

வைர நாற்கர ரயில்பாதையை உருவாக்கும் முன்னம் மத்தியரசு முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினை ரயில்பாதையில் உள்ள கழிவுகளை அகற்றுவதுதான்.

ஆனால் துப்புறவுப் பணி கடவுளுக்கு செய்கிற பணி என்று பாறாங்கல் ஐஸ்ஸை தலையில் வைத்து விட்டு பிரச்சினையை திசை திருப்புகிற மோடி போன்றவர்கள் இதிலெல்லாம் அக்கறை செலுத்துவார்களா என்ன?





No comments:

Post a Comment