Saturday, March 12, 2011

சுடுகாட்டில் நின்று பேரம் பேசும் அற்ப ஜன்மங்கள்

ஜப்பான்  மிகப் பெரிய   அழிவை   சந்தித்துள்ள  வேளையில்  சில  பழைய 
சம்பவங்கள்  வந்து  மனதில்  மோதுவதை  தவிர்க்க இயலவில்லை.  இன்று நாளிதழ் செய்திகளில்  இடம் பெற்ற  இரு  செய்திகள்  நினைகளைக் கிளறி விட்டது.  

ஒன்று   -   மறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின்  கலக்கம்
மற்றொன்று  -  பங்குச்சந்தையின்  வீழ்ச்சி,

அது என்ன  மறு  இன்சூரன்ஸ் ?  காப்பீட்டு  நிறுவனங்கள்  அது  ஆயுள் காப்பீடாக  இருந்தாலும்  சரி,  பொதுக் காப்பீடாக  இருந்தாலும்  சரி, 
அவை  தனி நபர்கள், நிறுவனங்களை   காப்பீடு  செய்யும். காப்பீட்டுத் 
தொகை  அதிகமாகும்போது  அதனை  அந்த காப்பீட்டு நிறுவனங்கள்  
மறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம்  (Re Insurance )  காப்பீடு செய்து கொள்ளும்.

இதன் மூலம் பெரும் இழப்பு ஏற்படும் நேரங்களில்  காப்பீட்டு  நிறுவனங்களின்  இழப்பு  என்பது  கட்டுக்குள்  இருக்கும்.  ஆனால்  அது 
போன்ற சந்தர்ப்பங்கள்  குறைவு  என்பதால்  மறு இன்சூரன்ஸ்  நிறுவனங்களின்   லாபம்  அபரிமிதமாகவே  இருக்கும்.  இது போன்ற 
பேரழிவு  நேரங்களில்தான்  மறு இன்சூரன்ஸ்  நிறுவனங்கள்  தங்கள் 
பர்சை  திறக்கவேண்டியிருக்கும். அப்போதும்  கையில்  பூதக்கண்ணாடியை  வைத்துக்கொண்டு  தாங்கள்  அளிக்க வேண்டிய  
தொகையை  ஏதோதோ  சட்ட நுணுக்கங்களைச்சொல்லி  குறைத்து 
விடுவார்கள்.  
ஜப்பானில்  என்ன  நிகழப்போகின்றது  என்பதை  பொறுத்திருந்தே  
பார்க்க வேண்டும். 

ஆனால்  அதற்கு  முன்பாக  இரண்டே  உதாரணங்கள் .

உலகைக் குலுக்கிய செப்டம்பர் பதினொன்று  நிகழ்வை  யாரால்  மறக்க 
முடியும்? 

அப்போது   ட்வின்  டவர்ஸ்  இடிந்து  ஏராளமான  உயிர்ச்சேதம். விமானங்கள்  விபத்துக்குள்ளானது.  விமான  சேவைகள்  தற்காலிகமாக 
நிறுத்தப்பட்டது.  அப்போது  விமான  நிறுவனங்களும்   காப்பீட்டு 
நிறுவனங்களும்  இழப்பை  சந்திக்க வேண்டியிருந்தது.  அவை  அமெரிக்க
அரசை மிரட்டின. அரசு  நிதியுதவி  வழங்காவிட்டால்  கடும் விளைவுகளை  சந்திக்க வேண்டும்  என்று  கிட்டத்தட்ட  பிளாக்மெயில்  
செய்தது. ஜார்ஜ் புஷ் அரசு  பல மில்லியன் டாலர்கள்   அரசு கஜானாவிலிருந்து   அளித்தது.  

அதே நேரம்  இந்தியாவை  சுனாமி தாக்கிய  அந்த மோசமான வேளையில்  பொதுத்துறை  எல்.ஐ.சி  உயிரிழப்பு  ஏற்பட்ட குடும்பங்களை  தேடி, தேடி 
இறப்புரிமம்  வழங்கியது.  சுனாமி  தாக்கிய  பகுதிகளில் இருந்த  கிளைகளில்   இருபத்தி நான்கு மணி நேர சேவை மையம்  செயல்பட்டது. 
ஆனால்  எல்.ஐ.சி  யோ  அல்லது  பொதுத்துறை  பொதுக்காப்பீட்டு  நிறுவனங்களோ   அரசாங்கத்திடமிருந்து  ஒரு  பைசா  கூட  உதவி 
பெறவில்லை. 

இப்படிப்பட்ட எல்.ஐ.சி யை  பேரழிவில் கூட  பேரம் பேசும் தரம் கெட்ட 
தனியார்  பன்னாட்டு நிறுவனங்களுக்காக  அரசே  அழிக்கப்பர்க்கிறது. 
என்ன கொடுமை சார் இது?


 
  


   
 

3 comments:

  1. நல்ல பதிவு.
    நமது அரசியல்வாதிகள் முடிந்தால் நமது நாட்டையே யாருக்காவது விற்று விட்டு போய் விடுவார்கள். அவர்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை.
    நன்றி.

    ReplyDelete