இத்தனை ஆண்டுகள் எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது, திடீரென ஏன் இப்படி? குழப்பாகவுமும் இருந்தது, தெளிவாகவும் உள்ளது.
எனக்கும் என் மனைவிக்கும் தகராறு முற்றிப் போய்விட்டது என்பது
தெளிவு, ஏன் இவ்வளவு முற்றியது என்பதில்தான் குழப்பம்.
அடுத்த மாதம் பதிமூன்றாம் தேதி எங்கள் திருமண நாள். அதனை எப்படி
கொண்டாடுவது என்பதில் தொடங்கிய விவாதம் பட்டுப்புடவை வாங்குவதில் போய் முடிந்தது. ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்றால் அவள். 4800 ரூபாய்க்குத்தான போன முறை
வாங்கின? அதே ரூபாய்க்கு இப்பவும் வாங்கு என்றேன். போன முறை
2400 ரூபாய்க்கு சொந்தக்காரர்களுக்கு குடுத்த பரிசுப் பொருள் இப்ப
வாங்க வேண்டாமே, அந்த பணம் மிச்சம்தான, அதை கொடுக்க வேண்டியதுதான எனறாள். விச்சுவிற்கு 1000 ரூபாய் குடுத்தனே மறந்துட்டீயா என்றேன். விச்சு எனது சொந்தக்காரன். அவனுக்கும்
என் மனைவிக்கும் எப்பவும் தகராறுதான் உங்க முகத்துக்காகத்தான்
அவங்க இந்த வீட்டுல இருந்தாலும் நானும் இந்த வீட்டில இருக்கேன்
என்று அடிக்கடி சொல்வான். அந்த அக்கப்போர் எதுக்கு இப்ப?
4800 , 5000 , 5500 , என்று படிப்படியாக உயர்ந்து கடைசியில் 6000 க்கு
பட்டுப்புடவை வாங்கிக் கொள்வது என்று முடிவாக அவளும்
நான் எங்க அம்மாவோட போய் புடவை வாங்கிக்கிறேன்னு புறப்பட்டு
போயாச்சு. அதுக்கப்பறம்தான் போன் வருது. 6000 பத்தாது, 6300
வேண்டும் அப்டின்னு. அது மட்டுமல்ல நான் சில டிசைன் சொல்லியிருந்தேன். அதில எல்லாம் நான் தலையிடக்கூடாதாம்
அது மட்டுமல்ல திருமண நாள் விருந்துக்கு என் நண்பர்கள் 20 பேர்
வந்தா அவங்க நண்பர்கள் பத்து பேர் வருவாங்களாம், சாப்ப்பாடு
மெனுவ நான் மட்டும் முடிவு பன்னக்கூடாதாம். அவங்களுக்கும்
உரிமை உண்டாம்.
எனக்கு கடுப்பாயிடுச்சு, 6000 க்கு மேல பைசா உயர்த்த முடியாது. வேற
எந்த கண்டிஷனுக்கும் ஒத்துக்க முடியாது னு ஸ்டிராங்கா சொல்லிட்டு
6000 ரூபாயை வந்து வாங்கிக்க னு போன் வேற பண்ணிட்டேன். ஆளும்
வரல, தகவலும் வரல. நானும் ஒரு நாள் பார்த்தேன், இரண்டு நாள்
பார்த்தேன். கிணத்துல போட்ட கல்லு மாதிரியே இருந்தது. பையன
விசாரிக்க சொன்னா 6300 க்கு தம்பிடி குறைஞ்சாலும் அத ஏத்துக்க
முடியாதுனு அம்மா சொல்லிட்டாங்க. பாட்டி வேலைதான் இது
என்று பத்த வைச்சுட்டும் அவன் போயிட்டான்.
நான் நினைச்ச மாதிரியே இது டெல்லியிலிருந்த மாமியார் வேலைதான்னு புரிஞ்சுது. ஒரு காலத்துல மாப்பிளை, மாப்பிளை
அப்டின்னு உருகினவங்க, இரண்டு வருஷம் முன்னாடி நான் டெல்லி
போன போது ரொம்ப அலட்சியப்படுத்தினாங்க. போன மாசம் கூட
அவங்க வீட்டுக்கு வரேன்னபோது இப்ப வா, அப்ப வா னு அலக்கழிச்சு
கடைசியில அவங்க பேசினதை விட அவங்க பையன் அலட்சியமா
பேசினதுதான், அதுவும் என்கிட்டே ஹிந்தியில, அதிகம். இப்ப நான்
என்ன சொன்னாலும் அப்படியே கேட்கிற என் மனைவி 6300 ரூபாய்
புடவை, அதிலயும் அவளோட இஷ்டப்படியே னா , நான் என்ன
கிறுக்கனா?
குட்ட குட்ட குனியாதடா னு வீரப்பன் அண்ணா சொன்னாரு. நீ மட்டுமே
தனியா திருமண நாள் கொண்டாடு னு பசங்க சொன்னாங்க. விச்சுக்கு வேற படு குஷி. அப்பத்தான் நான் சொன்னேன், நான் சொல்வதை கேட்க
தயாராக இலாதா என் மனைவியை டைவர்ஸ் செய்யப்போகிறேன்.
நாளைக்கே போய் வக்கீல் நோட்டீசை கொடுத்துட்டு அங்க இருக்கிற
உன் பெட்டி, துணிமணிகளை எடுத்துக்கிட்டு வந்துடு னு பையனுக்கு
ஆர்டர் போட்டேன். அப்பா நான் இப்பவே போகட்டுமா னு அவன் கேட்டான். டெல்லிக் குளிரும் ஹிந்தியும் வேலை செஞ்சாகனும் என்கிற
நிலையம் எப்பவுமே புடிக்காத அவனுக்கு ஒரே குஷி. மகள் முகத்துலதான் வாட்டம். என்ன பண்றது?
வக்கீல் நோட்டீசோடு பையன் டெல்லி போன தகவல் தெரிஞ்சு அக்கம்
பக்கமே பரபரப்பாச்சு. வெறும் முன்னூறு ரூபாய்க்கா டைவர்ஸ் மாய்ந்து மாய்ந்து கேட்டார்கள். அதுவும் ஒரு காரணியாக இருக்கலாம் என கம்பீரமாக பதில் சொன்னேன். புதிய உறவு ஏதாவது வருமா என ஒருவர் கேட்க, அந்த வாய்ப்பையும் பரிசீலிப்பேன் என வாயில் வழிந்த
எச்சிலை துடைத்துக் கொண்டே சொன்னேன்.
வெறும் முன்னூறு ரூபாய்க்காக நீங்க இரண்டு பெரும் பண்றது அக்கிரமம்
என ஒருவர் சொல்ல நான் அமைதியாய் கேட்டுக்கொண்டேன். மாமனார்
வீட்டு பூர்வீக சொத்தை விற்கும் பொறுப்பை என்னிடம் கொடுக்க அதிலே மாமியாரிடம் பேருக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு
மிச்சத்தையெல்லாம் நானே சுருட்டிக்கொண்டேன்.
அதை வச்சுத்தான் மிரட்டறாங்க அப்டிங்கற உண்மையை வெளியில
சொல்ல முடியுமா என்ன? டைவர்ஸ் பண்ணா என்னென்ன ஆகுமோ
என்ற பயம் அடிவயிற கலக்கினாலும் வீரன் மாதிரிதான வேஷம்
போட வேண்டியிருக்கு .
டெல்லிக்கு போய் பையன் போன் பண்ணினான், என்ன சார் ஆச்சு
- பக்கத்து வீட்டுக்காரங்க தொல்லை தாங்கமுடியலப்பா! நாளை
விடியலில் நாட்டிற்கு செய்தி கிடைக்கும் என்று சொல்லிட்டு வேகம்
வேகமா கதவ அடைச்சேன். வேற என்ன பண்ண?
மறுநாள் காலை பால்காரன் என்று கதவைத்திறந்தால் மகனும் மனைவியும் வெளியே நிக்கிறாங்க. அப்பா உங்க பர்சிலருந்து
நூறு ரூபாய், சித்தப்பாக்கள் இரண்டு பேரிடமும் ஆளுக்கு ரூபாய்
வாங்கி 6300 ரூபாய் அம்மாவிடம் கொடுத்தாச்சு. அம்மாவும் பெருந்தன்மையா வீட்டிற்கு வந்துட்டாங்க என்று அவன் சொல்லும்போது மனைவியின் முகத்தில் ஆணவச்சிரிப்பு.
வசமா குடுமி மாட்டினதால இப்படி மோசம் போயிட்டேனே என்று
புலம்ப என்ன மோசம் போயிட்டீங்க னு கையில காபி தம்ப்ளரோடு
மனைவி வர அட இதெல்லாம் கனவு என்று அசட்டுச்சிரிப்போடு காபியை கையில் வாங்கி பேப்பரை கையில எடுத்தேன்,
எதிர்த்த பிளாட்டில் கூட ஒரே பிரச்சினை. புதிசா வந்த விருந்தாளிக்கு
கொடுக்கற மரியாதைய வீட்டிலேயே உள்ளவங்களுக்கு தராது கிடையாது என்றெல்லாம் புகைச்சல். அதை வேகப்படுத்த முடியுமா னு
யோசிக்கிற போது பின்னாடியே ஒரு குரல் வருது.
எப்ப பாரு இப்டி டி.வி, பேப்பர், இன்டர்நெட்டு னு உக்காந்தா
டைவர்ஸ் டைவர்ஸ்தான்
பின்குறிப்பு : இதைப்படித்து விட்டு திமுக காங்கிரஸ் உடன்பாடு,
ஸ்பெக்ட்ரம். ராசா, சோனியா காந்தி, கருணாநிதி என்று யாராவது
கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.
ஏனென்றால்
ஆங்கிலத்தில் தோழர் சி.டி.சுரேஷ்குமார் அற்புதமாக எழுதியிருந்ததை
தமிழில் கொடுத்துள்ளேன் / சீர்குலைத்துள்ளேன்
அவ்வளவுதான்.
போற்றல் அங்கேயும் தூற்றல் இங்கேயும் வருவதுதான் சரியாக இருக்கும்
//டெல்லிக் குளிரும் ஹிந்தியும், வேலை செஞ்சாகனும் என்கிற நிலையம் எப்பவுமே புடிக்காத அவனுக்கு ஒரே குஷி. //
ReplyDeleteஅருமையான குத்தல்.