Saturday, March 19, 2011

அராஜகத்திலிருந்து தப்பிக்க அரைக் கம்பத்தில் கொடி



தேர்தல் கமிஷன் கொண்டுள்ள நடத்தை விதிகளில் பல அவசியமானவை. சில அதீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அபத்தமானவையும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு அபத்தம்தான் கொடிகளை அகற்றுவது என்பது. அரசியல் கட்சிக்கொடிக்கும் தொழிற்சங்கக் கொடிக்கும்  வித்தியாசம் தெரியாத  கொடுமை பற்றி நேற்று  எழுதியிருந்தேன். கொடிக்கம்பத்தை பாதுகாத்த  ஒரு பழைய அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளவே  இந்த பதிவு. 

1991 ல்  நான் நெய்வேலியில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். 
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அந்த கொடிய இரவன்று நானும் அப்போது
நெய்வேலி கிளைச்சங்கத்தின்  தலைவராக இருந்த தோழர் ராமலிங்கமும்  அந்த இரவன்று  நெய்வேலி அமராவதி திரையரங்கில் 
வீர பாண்டிய கட்டபொம்மன்  திரைப்படம்  இரண்டாவது காட்சிக்கு 
சென்றிருந்தோம்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணிக்கு படம் முடிந்தது. 
அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் டீ சாப்பிட்டு விட்டு சிகரெட் 
பிடித்து விட்டு வீட்டிற்கு வருகையில் இரண்டு மணி இருக்கும். 

தானியங்கிக் கதவானதால் ஒரு சாவி கையில் இருக்கும். யாரையும் 
தொந்தரவு செய்யாமல்  உள்ளே போய் தூங்கி விட்டேன். பொதுவாக 
இரண்டாவது ஆட்டம் சினிமா போனால் எட்டு மணிக்கு முன்பு 
எழுப்ப மாட்டார்கள். ஆனால் அன்றோ காலை ஐந்து மணிக்கெல்லாம் 
என் அப்பா எழுப்ப தூக்க கலக்கத்தில் நைட்டு சினிமா போனது 
தெரியாதா? என்று அவரிடம் எரிந்து விழ டேய் ராஜீவ் காந்தி செத்துப் 
போயாச்சாம் என்று அவர் சொல்ல பிறகுதான் விபரங்கள் 
தெரிந்தது. நள்ளிரவு இரண்டு மணிக்குக் கூட அவரது மரணம் 
பற்றிய தகவல்கள் பரவியிருக்கவில்லை. 
காலை சற்று விடிந்ததும், தோழர் ராமலிங்கத்தையும் எழுப்பி அவரையும்
கூட்டிக் கொண்டு ஊழியர் குடியிருப்புக்கு அடுத்து இருந்த அலுவலக 
வாசலில் இருந்த சங்கக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டோம். 
மரியாதை என்று சொல்ல மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. உள்ளுணர்வின்  உந்துதலில் செய்யப்பட காரியம் அது. 

கிட்டத்தட்ட ஏழு மணி போல அராஜகம் தொடங்கியது.  காங்கிரஸ் 
அதிமுக கட்சியினர்  கும்பல் கும்பலாக   கெட்ட  கெட்ட  வார்த்தைகளில்
கருணாநிதியை திட்டிக் கொண்டு  கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து
நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். திமுக சுவரொட்டிகள், தட்டிகள், 
துணி பேனர்கள் எல்லாம்  கொளுத்தப் பட்டது. கொடிக்கம்பங்கள் 
வீழ்த்தப்பட்டு  கொடிகளையும்  எரித்தார்கள். திமுக, கம்யூனிஸ்ட் 
கட்சிகள், ஜனதா தளம் என்று கட்சிக்கொடிகள், தொமுச, சி.ஐ.டி.யு  
சங்கக்கொடிகளும்  தப்பவில்லை.  அந்தத் தேர்தலில்  முதல் முறையாக
களமிறங்கிய வன்னியர் சங்காக இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற  பாட்டாளி மக்கள் கட்சியின்  கொடிக்கம்பங்களை மட்டும் அதிமுக,
காங்கிரஸ் கும்பல்  நெருங்கவேயில்லை. வன்னியர் வாக்கு பற்றிய 
அச்சமாகக் கூட இருக்கலாம். 

பாட்டாளி மக்கள் கட்சி தவிர அன்று தப்பித்த ஒரே கொடி 

அரைக் கம்பத்தில் பறந்த  எங்கள்  சங்கக் கொடி.  

No comments:

Post a Comment