Saturday, March 12, 2011

உயிர்த்தெழுவாய் சகோதரா!

ஜப்பான்  சந்தித்துள்ள பேரழிவு கற்பனை கூட  செய்ய முடியாதது. 
புகைப்படங்களும் தொலைகாட்சிப் படங்களும்  ஜப்பானின்  கட்டமைப்பு
எந்தளவிற்கு மோசமாக  சிதைந்துள்ளது  என்பதைக் காண்பிக்கிறது. 
நில நடுக்கம்,   சுனாமி, தற்போது அணு ஆலை  வெடிப்பு  என்று  தொடர்ச்சியான  தாக்குதல்களை  சந்தித்துள்ளது.  

ஜப்பானின்  பெருமையாக உள்ள  போக்குவரத்துக் கட்டமைப்பு, தொலை
தொடர்புக் கட்டமைப்பு மற்றும்  மின்சாரம்  ஆகியவை  முற்றிலுமாக 
நிலைகுலைந்து போய்விட்டது.  டோக்யோவின்  தெருக்களில்  லட்சக்கணக்கானவர்கள்  திரியும்  நிலை  மிகவும்  மோசமானது.

இப்பேரழிவு  ஏற்படுத்தியுள்ள  சேதத்தின்  மதிப்பு  என்ன  என்பதை  
இன்னமும்  கணிக்கவில்லை.  ஆனால்  மறு காப்பீட்டு  நிறுவனங்கள்  
கவலை  அடைந்துள்ளன  என்பதையும்  பங்குச்சந்தை  சரிவடைந்துள்ளது
என்ற  செய்திகள்  மட்டும்  இன்று  வெளிவந்துவிட்டது.  ஜப்பான் இயல்பு
நிலைக்கு எப்போது திரும்பும்  என்று  சாதாரண  மக்கள்  கவலைப்படும் 
போது  தங்களின் பாலன்ஸ் ஷீட்  பற்றி  மட்டுமே  முதலாளிகள்  
கவலைப்படுகின்றனர்.  

இன்று  உலக மக்கள்  செய்ய வேண்டியது  ஒன்றுதான்.  

ஜப்பான்  நாட்டு மக்களுக்கு  நம்பிக்கை  அளிப்பதுதான்.  

இரண்டாவது  உலகப்போரில்  உன்னை  நிர்மூலமாக்கியது  அமெரிக்கா
இனி உந்தன்  மண்ணிலிருந்து  ஒரு புல் பூண்டு கூட முளைக்காது  என்று 
முடிவு  செய்தது மொத்த உலகமும். அணு சக்தி பாதிப்பின்  விளைவால் 
நோயாளிகளின்  தேசமாகிப் போகும்  என்ற  எதிர்பார்ப்பு  மருந்துக் 
கம்பெனிகளுக்கு.  திருவோடு  ஏந்தி வருவார்கள், கைகளில்  நிதி அளித்து
கால்களில்  அடிமைச்சங்கிலி  மாட்டி விடலாம்  என்று திட்டமிட்டது உலக வங்கி. 

அத்தனை  எதிர்பார்ப்புக்களையும்  தோற்கடித்து, தன்னம்பிக்கை என்றால்
ஜப்பான்  மக்கள்  என  பள்ளிகளில் பாடம் எடுக்கும்படி  உயிர்த்தெழுந்து 
வந்த பீனிக்ஸ் பறவை நீ.  

ஆதரவுக்கரம்  அளிக்க  யாருமே  இல்லாத  நாற்பதுகளிலேயே  உயிர்த்தெழுந்து  வந்த  ஜப்பானிய  சகோதரனே, இன்றோ  உலகமே 
உன்னோடு.  மீண்டு வா, மீண்டும் வா,  அடுத்த ஆண்டு  பாடப்புத்தகத்தில்
உன் அனுபவத்தை நாங்கள் இணைக்க வேண்டும்.  
 

2 comments:

  1. அழிவிலிருந்து மீண்டு வர மனப்பூர்வமான பிரார்த்தனைகள்.

    ReplyDelete