Monday, March 21, 2011

ஆஸ்பத்திரிக்கா போறே? கொண்டே புடுவேன்!

மத்தியரசு ,இவ்வாறு சொல்லாமல்  சொன்னதாக கொந்தளிக்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவமனைகளுக்கு  சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதைக்  கண்டிக்கிறார்கள். ஆளுநர் மாளிகை முன்பாக 
ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. பெங்களூர் நாராயண ஹிருதயலாயா 
மருத்துவமனையின்  தலைவர் டாக்டர் தேவி  பிரசாத் ஷெட்டி  இது தொடர்பாக எழுதிய கடிதமும்  மின்னஞ்சல்களில் சூடாக உலாவின. 
டாக்டர் தேவி  பிரசாத்  ஷெட்டி  என்ன சொல்கிறார்.  மருத்துவத்திற்காகவும் சுகாதாரத்திற்காகவும்  ஒட்டு மொத்த உற்பத்தியில் ஒரு சதவிகிதத்திற்கும்  குறைவாக செலவிடுகிற  அரசாக  இந்தியா உள்ளது,அரசு செய்யத்தவருகின்ற  பணியைத்தான் தனியார் மருத்துவமனைகள் செய்வதாகவும்,  இதய அறுவை சிகிச்சை, சிறு நீரக மாற்று சிகிச்சை ஆகியவைக்கு பத்தாயிரம் முதல்  பதினைந்தாயிரம் வரை கூட ஆகும்  என்றும் புற்று நோய் சிகிச்சைக்கு  இருபதாயிரம் வரை 
கூடுதலாகும்  என்று அவர் கூறியுள்ளார். 

அது மட்டுமல்ல, இந்த சேவை வரி  நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு  மட்டும் பொருந்தும், பணக்காரர்கள் மட்டுமே 
பாதிக்கப்படுவார்கள்  என்று  அரசு சொல்வது தவறு என்று மறுக்கிற 
அவர், அனைத்து  அறுவை சிகிச்சை அறைகளும்  ரத்த வங்கிகளும் 
சட்டப்படியும் சரி, தொழில் நுட்ப தேவையின் அடிப்படையிலுமே 
குளிர்சாதனம்  செய்ய வேண்டிய  கட்டாயம் உள்ளது. எனவே இந்த 
சேவை வரி அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்றும் 
அவர் கூறுகின்றார். 

இதய, சிறு நீரக, மூளை, அறுவை சிகிச்சைகளையும் இவ்வரி மூலமாக
ஒட்டு மொத்த மக்கட்தொகையில்  பத்து சதவிகிதம்  மட்டுமே சிகிச்சை
பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும்  இதனால் அதிகமான 
விதவைகளை  உருவாக்கக் கூடிய நாடாக இந்தியா மாறி விடும் என்றும்
அவர் கூறுகின்றார். இந்த சேவை வரிக்கு துயர வரி (Misery Tax) என்றும் 
பெயர் சூட்டி  இதற்கு எதிராக போராட முன்வருமாறு  அவர் அழைத்துள்ளார்.

அரசு செய்யத்தவறிய கடமைகளை  சுட்டிக்காட்டியுள்ளது சரியானது. 
மருத்துவ சிகிச்சைக்கான  கட்டணம் உயரும்  என்பதும் சரியானது. 
சேவை வரி அகற்றப்பட வேண்டும் என்பதும் அதற்காக போராட வேண்டும்  என்பதும் மிகச்சரியானது.  துயர வரி என்ற பெயர் மிகவும் 
பொருத்தமானது. 

ஆஸ்பத்திரிக்கா போறே? கொண்டே புடுவேன்  என்று மிரட்டுவது 
மத்தியரசு மட்டும்தானா?  மருத்துவமனைகள்  தங்களிடம் வருகின்ற
நோயாளிகளை மிரள வைப்பதே கிடையாதா?  
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியும்  மருத்துவமனைகளின் 
மறுபக்கம்  எவ்வாறு  உள்ளது? மருத்துவக்கட்டணங்கள்  உயருவதற்கு
வரிகள் மட்டுமே காரணம்  என்று சொல்வது எவ்வளவு தூரம் 
சரியானது? 

மத்தியரசு  என்றுமே ஏழைகளுக்கு எதிரானது. அவர்களின் துயர 
வரியை கண்டிப்போம், அகற்று  என்று குரல் கொடுப்போம்.
அதே நேரம் பகட்டான மருத்துவமனைகளின் பகற்கொள்ளையைப்
பற்றியும் அறிந்து கொள்வோம். 
நாளை தொடரும் ...      

 
  

No comments:

Post a Comment