நாடாளுமன்ற மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேறி ஒரு
வருட காலம் முடிந்து விட்டது. மக்களவையில் நிறைவேற்றுவது பற்றி
அரசுக்கு சிந்தனையே இல்லை. உள் ஒதுக்கீடு இல்லாமல் மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தால் நடப்பதே வேறு என்று முலாயம், லாலு, சரத் யாதவ் கட்சி ஆட்கள் வழக்கம் போல மிரட்ட, அவர்களது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து அரசு நடக்க வேண்டும் என பிஜேபி யின்
சுஷ்மா ஸ்வராஜ் சொல்ல, அதுதான் சாக்கு என பிரணாப் முகர்ஜி,
பொதுக்கருத்தை உருவாக்க முயற்சிக்கிறோம் என்று சொல்ல மகளிர்
மசோதா மீண்டும் அதன் வரலாற்று இருப்பிடமான குப்பைத்தொட்டிக்கே
சென்று விட்டது.
அது என்ன மகளிர் மசோதாவிற்கு மட்டும் பொதுக்கருத்து வேண்டும்
என அரசுகள் கதைக்கிறார்கள்? முன்பு வாஜ்பாய் கூட இதே பல்லவியைத் தான் பாடிக்கொண்டிருந்தார். அனைத்து விஷயங்களுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் அரசுகள்
இதே பொதுக்கருத்து என்ற அணுகுமுறையை கையாள்கின்றார்களா?
அணுசக்தி ஒப்பந்தத்தில் பொதுக்கருத்து உருவாக்க முயற்சிக்கவே இல்லையே! ஆட்சி கவிழாமல் குதிரை பேரம் நடத்தினார்களே தவிர
பொதுக்கருத்து என்ற சிந்தனை இருந்திருந்தால் அந்த உடன்பாடே
உருவாகியிருக்காதே!
ஆள் தூக்கி பொடா சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு
அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தினார்கள். பொருளாதாரப்
பிரச்சினைகள் என்று வருகிறபோது முதலாளிகளுக்கு சாதகமாக
என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறார்களே தவிர நியாயமான
எதிர்ப்பிற்கு என்றைக்கு மரியாதை கிடைத்துள்ளது?
இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்காதே என்று இத்தேசத்தின் ஒரு கோடியே ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்கள்
கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது. அதை விட சிறந்த
பொதுக்கருத்து இருக்க முடியுமா? அதை உதாசீனம் செய்து விட்டு
தனியார் கம்பெனிகளுக்கு நடைபாவாடை விரித்தார்கள்.
இப்போது கூட இன்சூரன்ஸ் துறை தொடர்பான மசோதாக்களை
நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் பதினெட்டு
லட்சம் பேர் பிரதமருக்கு அஞ்சலட்டை அனுப்பியுள்ளார்கள். இந்த
பொதுக்கருத்தை அரசு ஏற்கப் போகின்றதா அல்லது பன்னாட்டுக்
கம்பெனிகளின் கட்டளைகளுக்கு அடிபணியப் போகின்றதா என்பதையும்
நாம் பார்க்கத்தானே போகின்றோம்!
கடந்தாண்டு மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேறியதே
அப்போது பொதுக்கருத்து எங்கே இருந்தது? கலாட்டா செய்தவர்களை
வெளியேற்றி விட்டுத்தானே மசோதா நிறைவேறியது. இப்போது மட்டும்
ஏன் மாற்றிப் பேசுகின்றார்கள்.
இந்த மசோதா நிறைவேறுவதில் காங்கிரஸ் கட்சிக்கும் விருப்பம் இல்லை. பாஜக கட்சிக்கும் விருப்பம் இல்லை. லாலு வகையறா
கிளப்பும் எதிர்ப்பில் இவர்கள் குளிர்காய்கின்றனர். எனவே பொதுக்கருத்து என்பதெல்லாம் வெறும் நாடகமே.
No comments:
Post a Comment