Saturday, March 26, 2011

குடும்பத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவி,


எனது முந்தைய  பதிவுகளில்  கார்ப்பரேட் மருத்துவமனைகள் பற்றியும் 
'ரமணா' திரைப்படக்காட்சி  மிகையல்ல, எனக்கே  அது போன்ற  ஒரு 
அனுபவம்  உண்டு  எனக் குறிப்பிட்டிருந்தேன்.  அது பற்றிய  பகிர்வு இது.

ஒரு அதிகாரி, சென்னைவாசி, பதவி உயர்வில் வேலூர் வந்திருந்தார். 
இங்கே தனியாக அறை  எடுத்து இருந்திருந்தார். ஒரு சனிக்கிழமை 
காலை அவருக்கு பக்க வாதம் வந்து  அவர் தங்கியிருந்த வீட்டின் 
உரிமையாளர்  அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து விட்டு ஆட்டோவில்
சி.எம்.சி   மருத்துவமனையில்  சேர்த்தார். நடந்து வந்த அவர் நிலை படிப்படியாக மோசமாகி  நினைவிழந்து போனார். சி.எம்.சி யில்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து  உடனடியாக சில சோதனைகள் செய்தார்கள். 

மூளையில்  ரத்த நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மிகவும் 
மோசமான நிலைக்கு செல்லாததால்   விரைவில்  குணமாக வாய்ப்பு 
உள்ளதாகச்சொல்லி  நரம்பியல் அவசரப் பிரிவிற்கு மாற்றினார்கள். 
காலை பத்து மணிக்கு முன்பாகவே  அவரது குடும்பத்திற்கு தகவல் 
கொடுத்தாலும்  மாலை ஆறு மணிக்குத்தான்  வந்தார்கள்.    

வந்த உடனேயே எப்போது டிஸ்சார்ஜ்  செய்யலாம், சென்னைக்கு அழைத்து  போகலாம்  என்று பரபரத்தார்கள்.  இப்போது பயணம் 
செய்வதற்கான உடல்நிலையில்  அவர் இல்லை. அப்படி செய்வது 
இன்னும் மோசமாக மாறி விடும்  என்று மருத்துவர்கள் சொன்னார்கள். 
அதெல்லாம்  கேட்க அவர் தம்பி தயாராக இல்லை.  அவரது மனைவியால்  வாய் திறந்து  பேச முடியவில்லை.  ஒரு மணி நேரம் 
இருவருக்கும் விளக்கமாகப் பேசி மருத்துவமனையில்  ஒருவர் 
இருந்தால் போதும், மற்ற பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
என்று தைரியம்  சொல்லி விட்டு வந்தோம். 

இரவு பதினோரு மணிக்கு முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் 
செயலாளர் தோழர் கேசவன் தொலை பேசி செய்து சி.எம்.சி வாருங்கள் 
என்று கூப்பிட்டார்.  வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருந்தது.  என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே 
சென்னை போகின்றோம்  என்று பிடிவாதம் பிடித்தார். என்ன சமாதானம் சொன்னாலும்  கேட்க தயாராக இல்லை. மருத்துவர்கள் கடுப்பாகி 
விட்டனர். அப்போது சாலையும் மிகவும் மோசமாக இருந்தது. 
இந்த நிலையில் பயணம் என்பது அவர் உயிரைப் பறிப்பதற்கு 
சமம் என்று கூறினார். யார் சொல்வதையும் கேட்க அந்த மனிதன்
தயாராக இல்லை. 

மருத்துவ ஆலோசனைக்கு மாறாக எனது சொந்த விருப்பத்தில் சொந்த 
பொறுப்பில்  டிஸ்சார்ஜ் செய்கிறேன்  என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு  டிஸ்சார்ஜ்  செய்தார்கள். நானும் தோழர் கேசவனும் 
சாட்சிக் கையெழுத்து போட்டோம். இரவு ஒரு மணிக்கு ஆம்புலன்ஸ் 
ஏற்பாடு செய்து கொடுத்து  அனுப்பி வைத்தோம். ஒரு நான்கு நாட்களுக்கு
தகவலே இல்லை. 

பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாக 
தகவல் வந்தது. ஒரு வண்டி வைத்துக்கொண்டு  சென்னை விரைந்தோம். 
சென்னைக்கு அழைத்துப்போன பிறகு கூட சரியான ஒரு மருத்துவ மனையில்  அவரை அந்த படுபாவிகள் சேர்க்கவில்லை.  ஏதோ ஒரு 
சாதாரண மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கே எந்த வசதியும் 
இல்லாமல் நிலைமை முற்றிப் போனதும் அப்பல்லோவில் சேர்த்துள்ளனர்.  

அப்பல்லோவில்  ஒன்றரை  லட்ச ரூபாய் பணம் கட்டச்சொல்லி 
கூறியுள்ளார்கள்.  கட்ட வேண்டுமா என்ற விவாதம் ரொம்ப நேரம் 
ஓடிக்கொண்டிருந்துள்ளது . எல்.ஐ.சி யில் மருத்துவ சிகிச்சைக்கு 
முன் பணம் தருவார்கள்  என்று சொல்லி மருத்துவமனை அளித்த
விபரங்கள், செலவின எஸ்டிமேட்டை  வேலூர்ருக்கு  ஃ பாக்ஸ் 
அனுப்பி விட்டு அப்போதிருந்த முது நிலைக் கோட்ட  மேலாளருக்கு
தொலைபேசி செய்து அட்வான்ஸ் உடனே சாங்க்ஷன் செய்யுங்கள். 
மண்டல அலுவலகத்திற்கு சொல்லி அவர்களை காசோலை கொண்டு 
வரச்சொல்லுங்கள் என்றேன். 

அந்த புண்ணியவான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? அவர் அதிகாரி 
ஆயிற்றே? உங்கள் சங்க உறுப்பினர் கிடையாதே? நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?   தொலைபேசியிலியே  கடுப்படித்ததும் வேலை நடந்தது. 
கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களில் காசோலை கைக்கு வந்து விட்டது. 
நாங்கள் செய்த தவறு அதுதான். 

அதற்கு சில நிமிடங்கள் முன்பாக இனி வாய்ப்பு இல்லை. வீட்டிற்கு 
எடுத்துச்செல்லுங்கள், மானிட்டரை எடுத்தால் அடுத்த நிமிடம் மரணம்
என்று சொன்னவர்கள், பத்தாயிரம் ரூபாய் பணம் கட்டி டிஸ்சார்ஜ் 
செய்து கொள்ளுங்கள் என்றவர்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கான 
காசோலையை பார்த்த உடன்  சுறுசுறுபபாகி  விட்டார்கள். ஐ.சி.யு 
படலம் ஒரு லட்ச ரூபாய் தீரும் வரை எந்த சிகிச்சையும் இல்லாமலேயே 
தொடர்ந்தது. தேடி வந்த லட்சுமியை  திருப்பி அனுப்ப அப்பல்லோ 
விரும்பவில்லை. கட்டிய பணம் தீர்ந்ததும் மானிட்டரை அகற்றி 
உயிர் போய் விட்டது என்று சொல்லி  உடலை கட்டிக்கொடுத்து விட்டார்கள். 

வேலூரிலிருந்து அழைத்து வராமல்  இருந்தால்  ஒரு வேளை அவரை 
காப்பாற்றி இருக்கலாம் என்று சொன்ன போது  பான்பராக்கை குழப்பிக் 
கொண்டே அந்த அன்புச்சகோதரன் சொன்னான் 'நாபத்தி அஞ்சு வயசுல
செத்துப்போகணும் அப்டிங்கறது  அவன் விதி சார். இதெல்லாம் யார் 
மாத்த முடியும்? செத்தப்பறம் ஆராய்சி பண்ணா அவன் வரவாப் 
போறான்?. நீங்க ரொம்ப மனச அலட்டிக்காதீங்க" 

இதுதான் உறவுகளின் உண்மையான நிலை என்ற வேதனையான 
பாடம் கிடைத்தது அன்று.   நல்ல சிகிச்சைக்கான வாய்ப்பு இருந்தும்
சென்னைக்கு கூட்டிப்போய்  அவரை அவரது குடும்பத்தினரே 
சாகடித்து விட்டனர்  என்பது  எவ்வளவு மோசமான உண்மை?  

No comments:

Post a Comment