Thursday, February 5, 2015

ரிசர்வேஷனுக்கு மரியாதை கிடையாது



http://www.jharkhandstatenews.com/wp-content/uploads/2015/01/Train.jpg.
நேற்று முன்தினம் எழுதிய பதிவின் தொடர்ச்சி

மதுரையிலிருந்து சேலம் வந்து சேலத்திலிருந்து காட்பாடி செல்லும் ரயிலை பெருமூச்சு வாங்க பிடித்த அனுபவத்தை நேற்று முன் தினம் பகிர்ந்து கொண்டிருந்தேன். படிக்காதவர்களுக்காக இணைப்பு இங்கே.  நிஜமாகவே பெருமூச்சோடுதான் ரயிலை பிடிக்க வேண்டியிருந்தது. எங்களின் எஸ் 7 கோச் எங்கே நிற்கும் என்று தானியங்கி அறிவிப்பு பலகை சொல்லியிருந்ததோ அதிலிருந்து எட்டு பெட்டிகள் தள்ளித்தான் நின்றது.

ஓட்டமும் நடையாக கம்பார்ட்மெண்டில் ஏறினால் அது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியா என்ற சந்தேகமே வந்து விட்டது. வழி நெடுக பயணிகள் படுத்துக் கிடந்தனர். ஒவ்வொரு இருக்கையிலும் குறைந்தபட்சம் இருவராவது இருந்தார்கள். எங்களுக்கான இடங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. முழுவதுமே பீகார்காரர்கள்தான். எங்கோ உழைத்து விட்டு ஊருக்கு திரும்பும் இளைஞர்கள் பட்டாளம் அது. கடுகெண்ணெய், பான், ஜர்தா இவைகளோடு குளிக்காத அழுக்கு வாசனையும் இணைந்து அந்த பெட்டியே கமகமவென்று மணந்தது.

எங்களுடைய இடங்களில் படுத்திருந்தவர்களை எழுப்புவதே பெரும் பிரச்சினையாகி விட்டது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள், தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்தவர்கள், தூக்கம் கலைந்தாலும் என்ன சொல்கிறோம் என்று புரியாதவர்கள், புரியாதவர்கள் போல நடித்தவர்கள், போய் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பிடிவாதம் பிடித்தவர்கள் என்று சமாளிப்பதற்குள் ஒரு வழியாகி விட்டது. இதற்கிடையில் எனக்கான சைட் அப்பர் பர்த்தில் படுத்திருந்த ஆளை காலி செய்து பை போட்டு வைத்திருந்தேன். இந்த களேபரங்கள் முடிந்து பார்த்தால் அந்த இடத்தில் அதற்குள்ளாக வேறு ஒரு பையன் படுத்து விட்டான். டிக்கெட் பரிசோதகர் என்ற மகானுபாவர் நாங்கள் காட்பாடி வந்து சேரும் வரை அந்த பெட்டி பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை. இதிலே அவன் வித்தவுட், இவன் வித்தவுட் என்று அவர்களுக்குள்ளேயே வேறு போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் முன்பதிவு செய்த பெட்டி என்பதற்கே மரியாதை இல்லாமல் போயிருந்தது.

அந்த இளைஞர்களை நொந்து கொள்வதால் பிரயோசனம் கிடையாது. எல்லோராலும் இரண்டு மாதம் முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள முடியாது. கூலி வேலை செய்யும் அவர்களால் கூடுதல் பணம் செலவழித்து தட்காலில் டிக்கெட் வாங்க முடியாது.

ரயில்வே நிர்வாகம்தான் அன்ரிசர்வ்ட் பெட்டிகளை அதிகரித்து நிலைமையை சமாளித்திருக்க வேண்டும். பயணிகள் நலனைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக ரயில்வேயில் எதையெல்லாம் கொடுத்து தனியாரை ஊக்குவிக்கலாம் என்று மட்டுமே கவலைப்படுகிற மோடி அரசின் ஆட்சியில் ரயில்வே நிர்வாகம் மட்டும் வேறு எப்படி இருக்கும்?

3 comments:

  1. You are so correct. just adding the 3 bogie (unreserved - but paid ) extra will solve lot of problems. why the dept not considering this.

    Seshan

    ReplyDelete
  2. கூடுதல் பெட்டிகளை இணைத்து ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற பிரச்சினைகள தீர்த்து
    பயணிகளுக்கு போதுமான வசதிகளை செய்து தர வேண்டும் நண்பரே

    ReplyDelete
  3. இது இன்றைய நேற்றைய நிலையில்லை. நான் 1976 ல் ஜபல்பூர் சென்று வந்தது முதல் இன்று கோவை சென்றுவரும்வரை ஒவ்வொரு முறையும் இதே கதைதான்.

    ReplyDelete