Friday, February 27, 2015

அது ஒன்றும் வெற்றுப் பக்கம் அல்ல

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் ஐ.மாயாண்டி பாரதி பற்றி தீக்கதிர் பொறுப்பாசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் எழுதிய ஒரு சிறந்த கட்டுரை.


`என்னத்த எழுத...’

 


மதுக்கூர் இராமலிங்கம்

மனிதனை மனிதன் சுரண்டாத சோசலிசப் புரட்சி ரஷ்ய மண்ணில் வெடித்துக் கிளம்பிய அதே 1917ம் ஆண்டில்தான் ஐ.மா.பா. மதுரையில் பிறந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரையிலும் சோசலிச லட்சியத்தின்பால் தளராத நம்பிக்கை கொண்டவராக அவர் இருந்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் இயக்கங்கள், தியாகிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என அணி அணியாக வந்து அஞ்சலி செலுத்திய காட்சி அவர் சமூகத்தின் சகல பிரிவினரோடும் கொண்டிருந்த உயிர்த் துடிப்பான உறவை காட்டுவதாக இருந்தது.

திரு.வி.கவை ஆசிரியராகக் கொண்ட நவசக்தி, பரலி சு.நெல்லையப்பரின் லோகபகாரி, ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட ஏடுகளில் அவர் பணியாற்றியுள்ளார். தீக்கதிர் ஏட்டில் அவர் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரால், கண்ணோட்டம், வாளும் கேடயமும், நேருக்கு நேர் போன்ற பகுதிகள் எழுதப் பட்டன. `குழந்தைகளுக்கு தாய் ஊட்டும் உணவு போல எந்த ஒரு விசயத்தையும் எளிதாக்கித் தருவதில் தனிச்சிறப்பான ஆற்றல் கொண்டவர் ஐ.மா.பா.’ என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் தந்த மதிப்புரை.இன்றைக்கும் கூட சில முதிய தோழர்களை சந்திக்கும்போது தீக்கதிரில் ஐ.மா.பா எழுதியது போல எளிமையாக எழுத வேண்டும் என்று கூறுவார்கள். 

அவருடைய எழுத்துக்கள் எந்தளவுக்கு தோழர்களை ஈர்த்திருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும்.அவசர நிலைக்காலம் அது. ஒவ்வொரு நாளும் தீக்கதிர் பத்திரிகையை கொண்டுவருவது என்பது பிரசவ வலி போன்றது. ஒவ்வொரு செய்தியையும், கட்டுரையையும் அதிகாரிகள் இரண்டு மூன்று முறை பார்த்து தணிக்கை செய்த பிறகுதான் வெளியிட முடியும். துணையாசிரியராக இருந்த இரா.நாராயணன் சைக்கிளிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை அலைவார். ஒருமுறை ஐ.மா.பா எழுதிய தலையங்கத்தை அதிகாரிகள் திருப்பி அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். 

இதனால் கோபமடைந்த ஐ.மா.பா. தலையங்கம் பகுதி யில் `என்னத்த எழுத...?’ என்று எழுதிக் கொண்டுபோய் காட்டியிருக்கிறார். எங்கே தலையங்கம்? என்று கேட்டதற்கு நீங்கள் காட்டும் கெடுபிடியில் இப்படித்தான் எழுதமுடியும் என்று கூறியிருக்கிறார் ஐ.மா.பா. அதையும் கூட அதிகாரிகள்விடவில்லை. இதன்மூலம் நீங்கள் உங்கள் வாசகர் களுக்கு எதையோ சூசகமாக தெரிவிக்க நினைக்கிறீர்கள் என்று சொல்லி அதையும் அனுமதிக்க மறுத்துவிட்டனராம். கடைசியில் அன்றைய தலையங்கப் பகுதிஎந்த எழுத்தும் இல்லாமல் வெறும் வெள்ளையாக விடப்பட்டிருக்கிறது.

அவசரநிலைக் கொடுமையை இதை விட வலிமையாக வேறு எவ்வாறு வெளிப் படுத்தமுடியும்.

மதுரை வடக்குமாசி - மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் குன்றக்குடி அடிகளாரை நடுவராகக் கொண்டு பரபரப்பான பட்டிமன்றங்கள் நடந்து வந்த காலம் அது. காலத்தை வெல்லும் ஆற்றல் மிக்கது மார்க்சியமா, காந்தி யமா, வள்ளுவமா என்ற தலைப்பில் அடிக்கடி விவாதம் நடக்கும். மார்க்சிய அணியின் சார்பில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், ஐ.மா.பா., வி.பரமேசுவரன் போன்றவர்கள் பங் கேற்று வாதிடுவார்களாம்.
ஒருமுறை மார்க்சிய அணியின் சார்பில் ஐ.மா.பா. பேசி யிருக்கிறார். இலங்கை பிரச்சனை கொதி நிலையில் இருந்த காலம் அது. சில கட்சிகள் இனவெறியை வலுவாக தூண்டிவிட்ட நேரம் அது. அப்போது பேசிய ஐ.மா.பா. தேசிய இனப் பிரச்சனையில் மார்க்சிய அணுகுமுறையை எடுத்து வைத்திருக்கிறார். கூட்டத்திலிருந்து ஆட்சேபக் குரல்கள், ஆனால் கடைசிவரை தன்னுடைய கருத்தை கூறிவிட்டுத் தான் ஐ.மா.பா. முடித்திருக்கிறார் என்று நினைவுகூர்ந்தார் ஓவியக் கவிஞர் ஸ்ரீ.ரசா.அவர் இளைஞராக இருந்த காலத்தில் மிதவாத எண்ணம் கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேரளத்திலிருந்து மதுரைக்கு பேச வந்திருக்கிறார்.
ஐ.மா.பா. விடுதலைப் போராட்டத்தை வேகமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். வந்த பேச்சாளர் அமைதி யான முறையில்தான் விடுதலை பெற முடியும். எத்தகைய போராட்டமும் நடத்தக்கூடாது என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சுக்கு மொழி பெயர்ப்பாளர் ஐ.மா.பா. இவர் அவருடைய மலையாள பேச்சைதனது பாணியில் மொழி பெயர்த்து, `மயிலேமயிலே என்றால் இறகு போடாது, வெள் ளைக்காரனை கெஞ்சிக் கொண்டிருந்தால் நாட்டை விட்டு போகமாட்டான், அவனைஅடித்து விரட்ட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். பேசிய கேரள பேச்சாளர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ரயில் நிலையத்தில் வைத்துகைது செய்யப்பட்டிருக்கிறார். கடைசி வரையில் அவருக்கு தன்னை ஏன்கைது செய்கிறார்கள் என்று தெரிய வில்லை. 

சாகசங்கள் செய்வதிலும் ஐ.மா.பா.வல்லவர். காங்கிரசின் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தால் போலீஸ்காரர்கள் அடித்து நொறுக்கிய காலம் அது. ஐ.மா.பா.வும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து இரவோடு இரவாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் பல்லி போல ஏறி மூவர்ணக் கொடியை கட்டிவிட்டு வந்துவிட்டார்கள். சற்று பிசகினாலும் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து சிவலோகம் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அதைப் பற்றி அஞ்சாமல் கொடியை கட்டிவிட்டு வந்துவிட்டார்கள்.அடுத்த நாள் விடிந்தவுடன் மதுரை முழுவதும் இதுதான் தலைப்புச் செய்தி யாக இருந்திருக்கிறது. இந்தக் கொடியை அவிழ்க்க கோபுரத்தில் ஏற பகலிலேயே போலீஸ்காரர்களுக்கு அரை நாள் ஆகியது. ஆனால் கும்மிருட்டில் சில மணி நேரத்தில் கொடியை கட்டிவிட்டு இறங்கிவிட் டோம் என்று ஐ.மா.பா. அடிக்கடி கூறுவார்.கட்சிப் பத்திரிகையாளர் குழு ஒன்று சோவியத் யூனியன் சென்றது. அதில் தீக்கதிர் சார்பில் தோழர் ஐ.மா.பா. இடம்பெற்றிருந்தார். அந்த அனுபவம் குறித்து அவருக்கே உரிய பாணியில் `மண்ணில் ஒரு சொர்க்கம் கண்டேன்’ என்று தீக்கதிரில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். சோவியத் சென்று வந்த அவருக்கு மதுரையில் வரவேற்பு தரும் வகையில் பேரவை ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கம் போல கதர் வேஷ்டி, சட்டையுடன் ஐ.மா.பா. நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். 

ஐ.மா.பா. பேசுவார் என்று அறிவித்தவுடன் திடீரென்று வேட்டி சட்டையை அகற்றிவிட்டு கோட் சூட்டுடன் காட்சியளித்திருக் கிறார். இப்படித்தான் சோவியத் யூனியனில் மனிதர்களே முற்றாக மாறியிருக்கிறார்கள் என்று கூறி தன்னுடைய பேச்சை துவக்கியதாக அ.குமரேசன் கூறுவார். 1968ம் ஆண்டு வெண்மணியில் கோரப் படுகொலை நடந்தவுடன் உடனடியாக விரைந்து சென்று முழுமையான செய்தி தீக்கதிரில் வெளிவரச் செய்தவர் ஐ.மா.பா. அப்போது எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசையிலிருந்து ஒரு பிடி சாம்பலை அள்ளி வந்திருக்கிறார். அதை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.

தூக்குமேடை தியாகி பாலு, மாரி மணவாளன் போன்ற எண்ணற்ற தியாகிகளின் வாழ்க்கையை ஆவணமாக்கியவர். மதுரை சிறையில் தியாகி பாலு தூக்கிலிடப்பட்ட காட்சியை ஐ.மா.பா. இப்படி எழுதியிருக்கிறார். “பாலுவின் பாத கமலங்களைத் தாங்கி நின்ற ஆதாரப் பலகை பாதாளம் போயிற்று, சுண்டி இழுத்த கருநாகக் கயிறு பாலுவின் மூச்சை முடித்தது. கல்லும் உருகும், கருநாகம் நெஞ்சிளகும், நேற்று இரவு முழுவதும், செங்கொடிப் பாட்டுகளை பாடிய பாலுவின், `சுட்டுப் பொசுக்கினாலும் - தோழர்களை தூக்கிலேற்றினாலும், விட்டுப் பிரியாது செங்கொடி வீரம் குறையாது’ என்று பாடிச் சிறகடித்த பாலுவின் பொன்னுயிர் பறிக்கப்பட்டுவிட்டது”.

தனது வாழ்நாளில் 13 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். தனது வாழ்வை சுருக்கமாக சொல்லும் வகையில் அவர் உருவாக்கிய புதுமொழி ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ அவருக்கு இறுதி மரியாதை செலுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர்கள் அணி வகுத்த வந்த போது தோழர் நன்மாறன் சொன்னார் மதுரையில் முதன்முதலாக கட்சிக்கு செம்படையை உருவாக்கி அதற்கு தளபதியாக இருந்தவர் ஐ.மா.பா. என்று.பாவலர் வரதராஜன் சகோதரர்களை கண்டறிந்து பொதுவுடமை இயக்க மேடைக்கு அழைத்து வந்தவர்களில் ஐ.மா.பா.வும் ஒருவர். அவர்களை தாய் மைப் பண்போடு துவக்க காலத்தில் அரவ ணைத்தவர்.

அதுபோன்று ஜனசக்தியில் பணியாற்றிய காலத்தில் ஜெயகாந்தனை வளர்த்தவர்களில் ஐ.மா.பாவும் ஒருவர்.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை இவரை அண்ணன் என்றுதான் அழைப்பார். பட்டுக்கோட்டையார் எழுதிய கடிதங்களையும் ஐ.மா.பா பாதுகாத்து வைத்திருந்தார். சோவியத் அனுப்பிய விண்கலம் சந்திரனை சென்றடைந்தவுடன் பட்டுக்கோட்டையாரைத் தேடி ஓடியிருக்கிறார் ஐ.மா.பா. அப்போது மக்கள் கவிஞர் ஒரு திரைப் படத்திற்கு பாட்டு எழுதும் வேலையில் ஈடுபட்டிருந்தாராம். இவர் சென்று செய்தியைச் சொல்லி உடனடியாக ஜனசக்திக்கு ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டவுடன் “சந்திரனை தொட்டதின்று மனித சக்தி” என்ற பாடலை மக்கள் கவிஞர் கடகடவென்று எழுதிக்கொடுத்தாராம். ஜனசக்தியில் அந்தப் பாட்டு சூடாக அச்சேறியது.கிறிஸ்துமஸ் தாத்தா கூட ஆண்டுக்கு ஒரு முறைதான் குழந்தைகளுக்கு இனிப்பு தருவார். ஆனால் இந்த கம்யூனிஸ்ட் தாத்தாவின் கைப்பையில் எப்போதும் குழந்தைகளுக்கான இனிப்பும், அன்பும் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. இவருடைய வருகையை எதிர்பார்த்து அன்றாடம் தீக்கதிர் வாசலில் ஒரு மழலையர் பட்டாளம் காத்துக்கிடக்கும். மணிமேகலையின் அமுத சுரபி போல அந்தக் கைப்பை வற்றியதே இல்லை. 1931ம் ஆண்டு மாவீரன் பகத் சிங்கை தூக்கிலிடப்பட்டபோது ஆவேசம் கொண்டவராக மதுரையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்ற ஐ.மா.பா.வின் ஆவேசம் கடைசி வரை குறையவேயில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர் இரங்கல் கூட்டத்தில் இப்படி கூறினார். அவருடைய மரபணுக்களிலேயே தேசபக்தி கலந்திருந்தது. மருத்துவ மனையில் பேச முடியாமல் சோர்ந்து படுத்துக்கிடந்தாலும், விடுதலைப் போரைப் பற்றி பேசினால் உடனடியாக எழுந்து உட்கார்ந்து `வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத், ஜெய்ஹிந்த்’ என்று முழங்கத் துவங்கிவிடுவார்’ என்றார்.அவருடைய இறுதி ஊர்வலத்திலும் இந்த மூன்று முழக்கங்களும் கேட்டுக் கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment