Thursday, February 12, 2015

கௌதம் மேனன் படம் பார்த்தா எந்த போலீசுக்கும் பொண்ணு கிடைக்காது



பார்க்க வேண்டும் என்று விரும்பிய பல திரைப்படங்களை பார்க்க முடியாமல் போயிருக்கிறது. ஆனால் வீட்டிற்கு வந்த உறவினர்கள் திரைப்படம் செல்லலாம் என்று சொன்னதை தட்ட முடியாமல் மாட்டிக் கொண்டது “என்னை அறிந்தால்”.

பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் வேலூர் மாநகர பாதாள சாக்கடைத் திட்டத்தின் காரணமாக வழக்கமான ஒரு சாலை மூடப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதால் தாமதமாகி முதல் சில நிமிடங்களை பார்க்கவில்லை. அஜித்தின் ஃப்ளாஷ் பேக் துவங்கும் நேரம்தான் உள்ளே சென்றோம். அதனால் ஒன்றும் இழப்பில்லை.

கதாநாயகனின் குரலில் கதையை நகர்த்திச் செல்லும் பாணியை கௌதம் மேனன் எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறார்? அஜித் குரலாக இருந்தாலும் “காக்க காக்க” அன்புச்செல்வன் பேசுவது போலத்தான் தோன்றுகிறது. சூர்யாதான் திரைக்கு வரப்போகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வாரணம் ஆயிரம் போல தந்தைப் பாசம் இதிலும்.

காக்க காக்க படத்திலிருந்து கொஞ்சம், வேட்டையாடு விளையாடு படத்திலிருந்து  கொஞ்சம், வாரணம் ஆயிரம் படத்திலிருந்து கொஞ்சம் என்று கலந்து கட்டி கொடுத்து விட்டார். கதைக்கு மட்டும் முப்பது வருடங்களுக்கு முன்பாக ஆர்.கே.செல்வமணியின் புலன் விசாரணை படத்தில் சொல்லப்பட்ட உடல் உறுப்பு திருட்டுதான்.

முந்தைய இரண்டு போலீஸ் படங்களைப் போலவே  பார்ப்பவர்களையெல்லாம் பட்பட்டென்று சுட்டுக் கொன்று விடுகிறார் கதாநாயகன். முந்தைய இரு படங்களில் கதாநாயகனின் மனைவிகள் கொல்லப்படுகின்றனர் என்றால் இதில் கல்யாணத்திற்கு முதல் நாள் கதாநாயகனின் காதலி கொல்லப்படுகிறார். வாரணம் ஆயிரத்தில் அமெரிக்காவில் பார்த்தவரின் மகன் கடத்தப்பட அவனை மீட்க அதில் சூர்யா களமிறங்குகிறார். இதிலே நண்பரின் மகள் கடத்தப்பட அஜித் களமிறங்குகிறார்.

கதாநாயகனின் வீட்டிற்கு வெளியே செக்யூரிட்டிகளும் சிறப்புக் காவலர்களும் இங்கேயும் நிறுத்தப்படுகிறார்கள். வில்லனின் ஆட்கள் வாகனத்தில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்கு பின்வழியே காம்பவுண்டை தாண்டிக் குதித்து இங்கேயும் கதாநாயகன் வெளியேறுகிறார். நிறுத்தப்படுகிற செக்யூரிட்டி கடைசியில் முக்கிய வில்லனால் கொல்லப்படுகிறார்கள். கதாநாயகன் முதலில் மிகவும் கடுமையாக அடிபட்டு பிறகு தேறுகிறார். வலிமையான வில்லன் உரத்த குரலில் கத்திக் கொண்டே சண்டை போட்டு தோற்றுப் போகிறார்கள்.

இந்தப் படத்தில் உருப்படியாக எதுவுமே இல்லையா என்று கேட்டால்

நிறைமாத கர்ப்பஸ்திரியாக கதாநாயகியை அறிமுகம் செய்தது, காதலியின் குழந்தையின் தந்தையாகவே கதாநாயகன் தன்னை மாற்றிக் கொள்வது ஆகியவற்றை சொல்லலாம். வில்லனாக அருண் விஜய் மிளிர்கிறார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். அஜித் நடந்தால், சண்டை போட்டால், சுட்டால், அவ்வப்போது கத்தினால் போதும் என்று கௌதம் மேனன் முடிவு செய்ய அதை அவர் கச்சிதமாக செய்து முடித்து விட்டார்.

பாவம் ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்ச காலம் காணாமல் போய் மீண்டும் வந்ததாலோ என்னவோ பாடல், பின்னணி என்று எதுவும் சுகமில்லை. “அதாரு, உதாரு” பாட்டுக்கு தியேட்டரில் விசில் பறந்தாலும் என் காதிற்கு என்னமோ மிகவும் எரிச்சலைத்தான் தந்தது. ஆனால் பாவம் அஜித் ரொம்ப சிரமப்பட்டாலும் நடனம் வருவேனா என்று ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது. அதே போல் அனுஷ்காவும் இந்த படத்திற்கு அவசியம் கிடையாது.

போலீஸ் அதிகாரியின் மனைவி, காதலி, மகள் ஆகியோருக்கு சாவு நிச்சயம் என்று ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக சொல்வதால் வரிசையாக கௌதம் மேனன் படங்களை பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் போலீஸ்காரர்களை கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டார்கள்.

ஆனால்  யதார்த்தம்  வெகு தூரத்தில்  இருக்கிறது என்பதை கௌதம் மேனன் புரிந்து கொண்டால் நல்லது, நல்ல போலீஸ்காரர்கள் உட்பட.

4 comments:

  1. சரியான நச் என்ற கட்டுரை. விமர்சனம் என்று சொல்லலாமா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு காரிகன். விமர்சனம்தான் இது

      Delete
  2. அருமையான விமர்சனம் நண்பரே

    ReplyDelete
  3. நீங்கள் குறிப்பிட்ட இவர் படங்கள் எதையுமே பார்க்கவில்லை.
    தப்பிவிட்டேன் என்கிறீர்களா?
    மேட்டுக்குடிக் கதைகள் எனில் ஒன்ற முடியாத அந்நியத் தன்மை!

    ReplyDelete