சமூக சேவகரும் மனித உரிமைப் போராளியும் கொல்லப்பட்ட வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மியின் சகோதரியுமான ஷப்னம் ஹாஷ்மி முன்னாள் காவல்துறை அதிகாரியும் தோற்றுப் போன டெல்லி முதலமைச்சர் வேட்பாளருமான கிரண் பேடிக்கு எழுதிய திறந்த மடலின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.
கிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்
ஷப்னம் ஹாஷ்மி,
சமூக ஆர்வலர்
நான் என்றுமே உங்களது விசிறியாக இருந்ததில்லை
என்பதைச் சொல்லியே இக்கடிதத்தை துவக்குகின்றேன். ஏனென்றால் தாங்கள் ஆதரிக்கிற சர்வாதிகார பாணியிலான “சமூக சேவை” என்றுமே
எனக்கு ஏற்புடையதல்ல.
இப்போது உங்களுக்கு ஏராளமான ஓய்வு நேரம்
கிடைத்துள்ளதால் சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கையில் ஒரு
காபிக்கோப்பையோடு கால்களை சுடுநீரில் அமிழ்த்துக் கொண்டு சாய்வு நாற்காலியில்
அமர்ந்து கொண்டு இளைப்பாறுமாறு ஆலோசனை அளிக்க விழைகிறேன்.
அவர்கள் உங்களுக்கு செய்தது என்ன என்பதைப்
பற்றி தயவு செய்து சிந்தியுங்கள்.
நான் உங்களது விசிறியாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடைய பெண்மணியாகத்தான் இருந்துள்ளீர்கள்.
ஒவ்வொரு மனிதருமே ஏதாவது ஒரு குறைபாடு உள்ளவர்கள்தான். அவற்றிலிருந்து நம்மை சரி
செய்து கொள்ள வாழ்வில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால்
அக்குறைபாட்டிற்காக பொதுவெளியில் இழிவு படுத்தப்படுவது மிகுந்த அவமானகரமானது.
தாங்கள் உங்கள் உடலை பாதி வளைத்துக் கொண்டு
மோடியை நோக்கி ஏதோ கூறுவது போன்ற ஒரு புகைப்படத்தை கண்டேன். உங்கள் முகத்தில் ஒரு
இயலாமை தென்பட்டது. அவரது ஒப்புதலை எதிர் நோக்கி காத்திருந்ததை உணர முடிந்தது. இது
எனக்கு மிகவும் வலித்தது. எனக்கு உங்களோடு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு
செயல்பாட்டாளராக, சக மனிதராக எந்த ஒரு பெண்மணிக்கும் இப்படிப்பட்ட நிலை வருவதை
நான் விரும்ப மாட்டேன்.
திருமதி பேடி, 2002 ல் குஜராத் பற்றி எரிந்து கொண்டிருந்த
நேரத்திலேயே கூட்டு பாலியல் வண்புணர்ச்சிக்கு உள்ளானவர்களின் வாக்குமூலங்களை பதிவு
செய்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பத்து மாவட்டங்களில்
ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் பயணம் செய்திருக்கிறேன். கிராமத்து மருத்துவ
மனைகளில் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களை சந்தித்துள்ளேன். வயிறு
கிழிக்கப்பட்ட, இறந்து போன கரு ஒட்டிக்கொண்ட கரிக்கட்டையாக எரிந்து போன ஏராளமான
பெண்களின் உடல்களின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் அறிந்த “நரோடா
பாட்டியா” சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கவுசர் பானு போல பலர் இருக்கிறார்கள்.
திருமதி பேடி, கூட்டு வண்புணர்ச்சியால் பிறப்புறுப்பு கிழிக்கப்பட்டு பல மாதங்கள்
படுக்கையிலிருந்தே எழு முடியாத நிலையில் இருந்த பல பெண்களையும் நான்
சந்தித்திருக்கிறேன்.
திருமதி பேடி, 2002 குஜராத் பேரழிவிற்குப் பின்பு மோடி “கௌரவ
யாத்திரை” மேற்கொண்டார். எல்லாவற்றையும் இழந்தவர்கள் வேறுவழியின்றி புகலிடம்
அடைந்திருந்த நிவாரண முகாம்களை “குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்”
என்று அவர் வர்ணித்தார். மோடி நச்சை உமிழ்ந்து ஆபாசமாக பேசிய உரைகளின்
பதிவுகள் இரண்டாண்டுகளுக்கு முன்பாக அகற்றப்பட்டு யுடியூப் தூய்மையாக்கப்பட்டு
விட்டது. சாகஷி மகராஜோ இல்லை சாத்வி பராச்சியோ மோடிக்கு இணையாகவே மாட்டார்கள்.
அந்த அளவிற்கு அவர் விஷத்தைக் கக்கியிருந்தார்.
திருமதி பேடி, பில்கிஸ் கூட்டு பாலியல்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்தில் அவளது சிறிய மகளின் தலையை பாறையில்
மோதினார்கள். அவள் அந்த கணத்திலேயே இறந்து போனாள். தன் மகளும் உறவுக்கார பெண்ணும்
பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாவதை பார்க்கும்படி மெதினா வற்புறுத்தப்பட்டாள்.
திருமதி பேடி, அப்படிப்பட்ட மனிதன் முன்பாக
நீங்கள் வளைந்து நிற்பதைப் பார்த்தது எனக்கு மிகவும் வேதனையளித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட “நற்சான்றிதழ்கள்” பற்றி
நீங்கள் என்னிடம் கூறலாம். ஆனால் அந்த “நற்சான்றிதழ்” களை பாராட்ட முடியாதபடி சில விஷயங்களை நான் கூடுதலாக
அறிவேன்.
திருமதி பேடி, இம்மனிதர் பிரதமராவதற்கான
சித்து விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தபோது எச்சரிக்கையாக இருக்குமாறு நான்
அறிவுறுத்தப்பட்டேன். என்ன அவர்களால் அதிகபட்சம் என்னை கைது செய்ய முடியும் அல்லது
கொலை செய்யலாம். தார்மீக ரீதியில் ஒடுங்கிப் போவதை விட கொல்லப்படுவதையே விரும்புவதாக
அப்படி என்னை எச்சரித்த நண்பர்களிடம் கூறினேன்.
திருமதி பேடி, உங்கள் தன்மானத்திற்கு
அவர்களால் நேர்ந்தது என்ன என்பதைப் பற்றி தாங்கள் மட்டும் தனித்திருக்கையில் தயவு
செய்து சிந்தியுங்கள். ஒரு பெண்ணாக சிந்தியுங்கள், ஒரு தாயாக சிந்தியுங்கள்,
பணிக்காலத்தில் தலை நிமிர்ந்து நடந்த வெற்றிகரமான ஆளுமையாக சிந்தியுங்கள்.
உங்களைப் பற்றி நீங்களே ஆய்வு செய்து
உங்களுக்கே உண்மைகளைச் சொல்வதற்கான தைரியத்தை வரவழைப்பது என்பது மிகவும் கடினமான
ஒன்று. உங்களுடைய நலனுக்காக தயவு செய்து அதைச் செய்யுங்கள்.
உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்
ஷப்னம் ஹாஷ்மி
உங்கள் தன்மானத்திற்கு அவர்களால் நேர்ந்தது என்ன என்பதைப் பற்றி தாங்கள் மட்டும் தனித்திருக்கையில் தயவு செய்து சிந்தியுங்கள். ஒரு பெண்ணாக சிந்தியுங்கள், ஒரு தாயாக சிந்தியுங்கள், பணிக்காலத்தில் தலை நிமிர்ந்து நடந்த வெற்றிகரமான ஆளுமையாக சிந்தியுங்கள்.
ReplyDeleteசிந்திப்பாரா????????????