Thursday, July 3, 2014

கனவை நனவாக்கிய கடவுளுக்கு காணிக்கை



நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல எங்களது மூத்த தலைவர்
தோழர் சந்திர சேகர போஸ் அவர்களின் அனுபவப் பகிர்வு. படியுங்கள், சுவாரஸ்யமாகவே இருக்கும்.
 


கற்பனைகளுக்கும் சிந்தனைகளுக்கும்
 உரிமைகளாய்,சலுகைகளாய் செயல் வடிவம் அளித்த நமது கடவுள்.

பிதாமகரின் பாராட்டுரை

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் பிதாமகர் என்று அழைக்கப்படும் முன்னாள் அகில இந்தியத் தலைவர் தோழர் சந்திர சேகர் போஸ், கொல்கத்தா கோட்ட ஓய்வூதியர் சங்கத்திற்கு எழுதிய கடிதம், இன்சூரன்ஸ் வொர்க்கரின் ஆகஸ்ட் 2013 இதழில் வெளியாகி இருந்தது. பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள தோழர் சந்திர சேகர் போஸ், நம் சிந்தனைக்கும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அக்கடிதத்தின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளோம்.

வெகு காலம் முன்பாக, ஆண் குழந்தை வேண்டும் என்று வரம் கேட்டு கடவுளிடம் பிரார்த்திக்கும் பெண்கள் தங்களின் முதல் குழந்தையை கடவுளுக்கே அர்ப்பணிப்பதாய் வேண்டிக்கொள்வார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். மேற்கு வங்க மாநிலத்தில் கங்கை நதி கடலில் கலக்கும் கங்காசாகர் என்ற இடத்தில் எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மூழ்கடித்துள்ளனர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். புதிதாய் ஒரு குழந்தை பிறந்ததும் கடவுளை திருப்திப்படுத்த வழிபாடுகள் நடப்பதை நாம் சமூகத்தில் இன்றும் பார்க்கிறோம். மரத்தின் முதல் கனியை கடவுளுக்கு படைக்கும் நடைமுறை இப்போதும் உள்ளது. என் அருகாமை வீட்டுக்காரர் ஒருவர் தனது தோட்டத்தின் முதல் கனியை சிவபெருமானிடம் அர்ப்பணிக்க மேற்கு வங்கத்திலிருந்து கேதார்நாத், பத்ரிநாத் சென்றார். மற்றவர்களின் உணர்வுகள் பற்றியோ நம்பிக்கை குறித்தோ நான் எதுவும் விமர்சிக்கக் கூடாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை நம்முடைய அமைப்பான ஏ.ஐ.ஐ.இ.ஏ, ஏ.ஐ.ஐ.பி.ஏ தான் நம்முடைய கடவுள். நாம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் சலுகைகளும் நம்முடைய கடவுள் அளித்த பரிசுகள்தான்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நீண்ட போராட்டத்தின் விளைவாக ஓய்வூதியத் திட்டம் அறிமுகமானது. 01.01.1986 க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அந்தப்பலன் கிட்டியது. அந்த தேதிக்கு முன்பு ஓய்வு பெற்ற என்னைப் போன்ற தோழர்களுக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை.

ஓய்வூதியத் திட்டத்திற்கு வெளியே மிகக் குறைவான அளவிலான ஓய்வு பெற்றவர்களே இருந்த போதும் நமது கடவுள் அந்த குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கும் ஏதாவது பலன் கிடைக்கச்செய்ய முயற்சிகள் மேற்கொண்டது. 01.01.1986 க்கு ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு கருணைத்தொகையாக ரூபாய் 300 ம் அகவிலைப்படியாக ரூபாய் 700 முமாக ஆயிரம் ரூபாய் முதல் மாதம் பெற்ற போது நான் பேச்சற்றுப் போனேன். அத்தொகை முழுவதுவதையும் எனது கடவுளுக்கு காணிக்கையாக இன்சூரன்ஸ் வொர்க்கர் நிதியில் சேர்த்தேன். 01.01.1986 க்கு முன்பு ஓய்வு பெற்று இறந்து போன ஊழியர்களின் மனைவிகளுக்கும் பின்பு கருணைத்தொகைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மருத்துவக் காப்பீட்டிற்கான ஒட்டு மொத்த பிரிமியத்தையும் நாங்களே முழுமையாக செலுத்திக் கொண்டிருந்தோம். அது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு எங்களின் செலுத்தும் சக்திக்கு மேல் சென்று கொண்டிருந்தது. நான்கில் மூன்று பங்கு பிரிமியத்தை நிறுவனமே செலுத்தும் என்றும் நான்கில் ஒரு பங்கு பிரிமியத்தை மட்டும் நாங்கள் செலுத்தினால் போதும் என்று அறிய வந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டோம்.

எங்களுக்கு இன்னும் சில பயன்கள் கிடைக்க நம் கடவுள் முயற்சித்து வருகிறது. இப்போது இன்னும் ஒரு பரிசு கிட்டியுள்ளது. ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூபாய் ஐநூறும் மருத்துவப் பயனாக வழங்கப்படுகிறது. மருத்துவப் பயனாக முதல் மாதம் பெற்ற தொகை ரூபாய் ஆயிரத்தை  நமது கடவுளுக்கு காணிக்கையாக கொல்கத்தா கோட்ட ஓய்வூதியர் சங்கத்திற்கு அளிக்க விழைகிறேன். அதை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் காலத்தில் நமது சங்கம் துவக்கப்பட்ட போது என்னுடைய ஒரு கனவு பலிக்கவில்லை. ஊழியர்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் பொறுப்பை சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது யோசனை. தோழர் பரேஷ் ராய் அதை உடனடியாக ஒப்புக் கொண்டார். ஆனால் அவரது மெல்லிய புன்னகையின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ள நான் தவறிவிட்டேன். பணி தொடங்கியது. நோயுற்ற ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு சேவை அளிக்கத் தொடங்கினோம். ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள் என்றும் நாங்கள்தான் உறக்கத்தை தொலைத்து விட்டோம் என்பதை சில நாட்களுக்குப் பிறகே உணர்ந்து கொண்டோம். இறுதியில் இந்த திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது.

அலுவலகத்தின் பிரிவுகளுக்குள் கால் பந்து போட்டிகள் துவக்கப்பட்டன. அதுவும் ஊழியர்களின் ஆர்வமின்மையால் மூன்று, நான்கு ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.

என்னுடைய இன்னொரு அனுபவத்தை பகிர்ந்து கொண்வது முக்கியமாகும். 1946 ம் ஆண்டு கொல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரங்களின் போது கணிசமான எண்ணிக்கையில் காயமடைந்த மக்கள், கவனிக்க யாருமன்றி தெருக்களில் கிடந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தோம். பவ்பஜார் மற்றும் சென்ட்ரல் அவென்யு சந்திப்பு ஆகிய இடங்களில் காயமடைந்த சிலர் உதவிக்கு யாரும் இல்லாமல் சாலையில் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. செஞ்சிலுவை அமைப்பின் பதாகையோடு மூடப்படாத ஒரு ஜீப்பை அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு அங்கே விரைந்தோம். ரத்தம் ஒழுக, ஒழுக ஒரு இஸ்லாமிய முதியவரை சிலர் ஆயுதங்கள் கொண்டு தாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம். திடீரென்று நாங்கள் ஜீப்பிலிருந்து இறங்கி காயமடைந்த அந்த மனிதனை அவர்களின் கைகளிருந்து பறித்து இஸ்லாமியா மருத்துவமனையில் சேர்த்தோம்.

மட்டற்ற மகிழ்ச்சியோடு நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கையில் அந்த கொடிய கும்பல் எங்களை பழி வாங்குவதற்காக சாலையில் காத்திருந்ததை கவனித்தோம். எல்.ஐ.சி உருவான பின்பு கிழக்கு மண்டலத்தில் முதல் மண்டல மேலாளரின் ஓட்டுனராக இருந்த தூபே தான் அன்று எங்கள் வாகனத்தை ஓட்டினார் என்பது என் நினைவு. அந்த ரௌடிகளின் நோக்கத்தை உணர்ந்து கொண்ட அவர், எவ்வளவு விரைவாக வாகனத்தை ஓட்ட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட்டி எங்களை ஹிந்துஸ்தான் கட்டிடத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த அத்தியாயமும் முடிந்து போனது.

இன்னொரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் உள்ளது. பாரம்பரியமாகவே அலுவலகத்தில் நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தன. நம் சங்கத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று முடிவு செய்தோம். அதை ஊழியர்களும் ஏற்றுக் கொண்டனர். எங்களுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதை சில நாட்களுக்குப் பிறகு உணர்ந்து கொண்டோம். நாடகங்களை ஏற்பாடு செய்வதில் உருவாகும் பிரச்சினைகளின் தன்மை குறித்து எங்களுக்கு எந்த அனுபவமும் இல்லை. அனைத்து பங்கேற்பாளர்களும் முக்கியமான பாத்திரங்களைப் பெறுவதிலேயே ஆர்வமாக இருந்தார்கள். பாத்திரங்கள் தேர்வு குறித்த தங்களின் குறைகளை வெளிப்படுத்த எங்களிடம் பல பங்கேற்பாளர்கள் வர அவர்களை அமைதிப் படுத்தி அனுப்பி வைத்தோம். நிதி சேகரிப்பு மற்றும் அரங்கத்தை பதிவு செய்வது போன்ற பொறுப்புக்கள் எங்களுக்கு இருந்தாலும் நாடகத்தை தேர்வு செய்வதற்கான விவாதத்தில் பங்கேற்கக் கூட எங்களுக்கு உரிமை இருக்கவில்லை. பார்வையாளர்களை வாழ்த்திப் பேசுவதற்கான வாய்ப்பு மட்டுமே எங்களுக்கு தரப்பட்டது, ஆனாலும் நாங்கள் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டோம். ஏனென்றால் சங்கத்தின் பதாகையை ஒரு பொது நிகழ்ச்சியில் கொண்டு செல்வது முக்கியமாக இருந்தது.

அக்காலக்கட்டத்தில் ஆண்களே பெண்களின் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தனர். கேஸ்டோ பக்ஜி மற்றும் அவரது உறவினர் தேபேஷ் சகரவர்த்தி ஆகியோர் பெண் வேடமிட்டு நடிப்பார்கள். திரு தாராசங்கர் சட்டோபாத்யாயா எழுதிய ஒரு நாடகம் பல்கலைக்கழக அரங்கிலே நடைபெற்றது. அப்போது திரைச்சீலை மூங்கில் கம்புகளால் கட்டப்பட்டதாக இருக்கும். கயிறு கொண்டு அந்த மூங்கில் கம்புகள் மேலும் கீழும் இழுக்கப்பட்டும். நாடகத்திற்கான மணி அடிக்கப்பட்டு திரைச்சீலை மேலே உயர்த்தப்பட்டபோது திரைச்சீலைக்குப் பின்னே நின்றிருந்த  கேஸ்டோ பக்ஜி அணிந்திருந்த செயற்கை தலைச்சவுரி திரைச்சீலையில் சிக்கி மேலே சென்று கொண்டிருந்தது. அவரது தலையில் இருந்து முழுமையாக அகன்று விட்டது. பார்வையாளர்களின் சிரிப்பொலி இன்னும் என் நினைவில் உள்ளது. இந்த நடைமுறை வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பெண் நடிகர்களுக்கான கோரிக்கை எழுந்தது.

அந்த காலக்கட்டத்தில் அலுவலகத்தில் பெண் ஊழியர்களே கிடையாது. அலுவலகங்கள் ஏற்பாடு செய்யும் நாடகங்களில் நடிக்க குறைவான எண்ணிக்கையிலான தொழில்முறை நடிகைகளே தயாராக இருந்தார்கள். வெளியிலிருந்து தொழில்முறை நடிகைகளை பயன்படுத்த முடிவு செய்தோம். அவர்கள் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே ஒத்திகைக்கு வந்தார்கள். பங்கேற்பாளர்களில் சிலர் ஒத்திகையின்போது மதுபானம் அருந்தினார்கள் என்றும் ஆட்சேபகரமான முறையில் நடந்து கொண்டார்கள் என்பதும் எங்கள் கவனத்திற்கு வந்தது. எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தால் நாங்கள் இந்த சூழ்நிலையை பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.  இறுதி நிகழ்ச்சியன்று நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் நம் சங்கத்தின் தலையீட்டை நிறுத்திக்கொண்டோம். எனது இன்னொரு கனவும் கலைந்து போனது.

ஆனால், ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் ஹிந்துஸ்தான் கட்டிடத்தில் கொண்டாடுவதை தொடர்ந்தோம். ஜோர்ஜாதா என்று அழைக்கப்பட்ட தேபபிரதா பிஸ்வாஸ், சின்னுதா என்று அழைக்கப்பட்ட சின்மோகன் செஹனாபிஸ் ஆகியோர் எங்களுக்கு மிகவும் உதவிகள் செய்தனர். இந்திராதேவி சௌதாராணி உள்ளிட்ட இலக்கியத்துறையில் பிரசித்தி பெற்ற  ஆளுமைகள் ஹிந்துஸ்தான் கட்டிடத்தின் விழாக்களை துவக்கி வைக்க வந்துள்ளனர். பர்மா தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பெரிய மேஜைகள் கொண்டு மேடை அமைக்கப்பட்டும். சுதாங்ஷு தத்தா ஒட்டுமொத்த மூன்றாவது மாடியையும் அலங்கரிக்க முன்முயற்சி எடுப்பார். ஊழியர்களின் குடும்பத்தினர்கள் கூட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.  சின்னுதா எழுதிய ஒரு உரையை பிரபல வானொலி செய்தி வாசிப்பாளர் நிலிமா சன்யால் வாசித்தார். சம்பு மித்ரா, திரிப்தி மித்ரா ஆகியோரும் தாகூரின் கவிதை வரிகளை வாசித்தார்கள். கனிகா பந்தோபத்யாயா, திவிஜன் முகோபாத்யாயா, மற்றும் சுபினாய் ராய் ஆகியோர்  ஜோர்ஜாதா உடன் இணைந்து பாடல்கள் பாடினர். மஞ்சுஸ்ரீ நடனம் ஆடினார்.

1961 ல் தாகூர் நூற்றாண்டு விழாவை பாலிகஞ்சில் உள்ள சிங்கி பூங்காவில் ஐந்து நாட்கள் நிகழ்ச்சியாக கொண்டாடினோம். சையத் முஜ்தபா அலி சிறப்பு விருந்தினர். இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் வசூலித்த தொகையில் உபரியாக இருந்த தொகையில் ரூபாய் 25,000 ஐ கேரளா பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினோம். இந்தப்பல்கலைக்கழகத்தில் பி.ஏ பாடத்தில் வங்காள மொழி ஒரு பாடப்பிரிவாக அப்போது இருந்தது. வங்க மொழியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. இது இன்னும் தொடருகிறதா என்பது எனக்கு தெரியவில்லை. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பியர்ல் ப்ரிக், ஒகாம்போ ஆகியோர் எழுதிய கட்டுரைகள் விழா மலரில் இடம் பெற்றிருந்தன.

இப்போது கொல்கத்தாவில் தாகூர் பிறந்த நாள் விழா ஒரே இடத்தில் நடப்பதற்குப் பதிலாக கட்டிடவாரியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு விஷயத்தைப் பொறுத்தவரை நான் வெற்றியடைந்துள்ளதாகவே கருதுகிறேன்.

இன்று ஏராளமான ஊழியர்கள் சொந்த வீடு வைத்துள்ளனர். மிகக்குறைவான தொகையோடு தொடங்கிய வீட்டு வசதிக் கடன் இன்று மிகக் கணிசமாக உயர்ந்துள்ளது. ஊழியர்களும் அவர்கள் குடும்பத்தினரும் மனமகிழ்ச்சி கொள்ள விடுமுறைப் பயண வசதி அறிமுகமானது. வெறும் ஐம்பது ரூபாயோடு தொடங்கிய மருத்துவ உதவித் தொகை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல் மானியத்துடனுனான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் நடைமுறையில் உள்ளது. அன்றாட சங்க நடவடிக்கைகளில் எனது ஈடுபாடு இப்போது முன்பைப் போல அவ்வளவு நெருக்கமாக இருக்க முடியவில்லை. ஊழியர்கள் தற்போது பெறும் ஊதியம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. சில தினங்கள் முன்பாக எல்.ஐ.சி யில் உயர் நிலை உதவியாளராக பணிபுரியும் என் உறவினர் ஒருவர் என்னைப் பார்ப்பதற்காக எனது வீட்டிற்கு வந்திருந்தார். ஐம்பத்தி ஆறு வயதான அவரது மாத ஊதியம் ஐம்பதாயிரம் ரூபாயை கடந்து விட்டது என்றார். தற்போது பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனைத் திட்டம் சமீபத்தில் அறிமுகமாகி உள்ளது என்பதையும் அறிந்து கொண்டேன். கருணை அடிப்படையிலான பணி நியமனம் போன்ற  பிற பலன்களும்  தற்போது உள்ளது.

தொன்னூறு வயதைக் கடந்த நிலையில் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்கையில் எனது கற்பனைகள், சிந்தனைகள், யோசனைகள், இன்னும் யோசனைகளாகவே, கற்பனையாகவேதான் உள்ளதா என்று என்னை நானே கேட்டுப் பார்க்கிறேன். இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகள், ஊதியம் மற்றும் அனைத்து பயன்கள்  எல்லாமே நமது அமைப்புக்களான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கமும்  பெற்றுக் கொடுத்த பரிசுகள். இந்த உண்மையை நாம் மனமாற உணர்கிறோமா? இன்று எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பொதுத்துறைத் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. இதை மனதில் கொண்டு நமது கடவுளை வலிமைப்படுத்தும் பணியில் நாம் நம்மை முழுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈடுபடுத்திக் கொள்கிறோமா?


No comments:

Post a Comment