1951 ல் அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துவக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக இருந்தவர்
ரஜனி பட்டேல் என்ற பிரபல வழக்கறிஞர். பி.டி.தோண்டே என்ற தோழர்தான் முதல்
பொதுச்செயலாளராக இருந்தவர். அவர்களின் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கவில்லை.
ஆவணப்படுத்தலின் அவசியம் தெரியாத காலம் அது.
தோழர் சந்திர
சேகர போஸ் ;
சங்கத்தின்
பொதுச்செயலாளராகவும் பின்னர் நீண்ட காலம் தலைவராகவும் பணியாற்றியவர். 90 வயதிலும் இன்னும் உற்சாகம்
குறையாமல் வழிகாட்டி வருபவர். ஹிந்துஸ்தான் கோவாபரேட்டிவ் என்ற தனியார் இன்சூரன்ஸ்
நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமலும் பாலிசிதாரர்களுக்கு சேர வேண்டிய பணத்தை
தராமலும் இருக்க நஷ்டக்கணக்கு எழுதி செய்த மோசடியை அம்பலப்படுத்தியதால் பணி
நீக்கம் செய்யப்பட்டு பிறகு போராட்டம்
மூலம் பணியில் சேர்ந்தவர். அவரது அனுபவக்கட்டுரை ஒன்றின் தமிழாக்கத்தை விரைவில்
பகிர்ந்து கொள்கிறேன்.
தோழர் சரோஜ்
சவுத்ரி :
தன் வாழ்நாள்
முழுதையும் உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். 29 ஆண்டுகள் சங்கத்தின்
பொதுச்செயலாளராக இருந்து சங்கத்தின் வலைமையான நிலைக்கு முக்கியக் காரணமானவர்.
இன்றைய போக்குவரத்து வசதிகளோ, தொலை தொடர்பு வசதிகளோ இல்லாத காலத்தில் நாடெங்கும்
பயணம் செய்து அமைப்பின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். சிறந்த எழுத்தாளர்,
பேச்சாளர், வெறி பிடித்த வாசகர், உன்னதமான கலாரசிகர். தொலை நோக்குப் பார்வை
கொண்டவர். 1974 ல் எல்.ஐ.சி யில் கதவடைப்பு செய்யப்பட்டது. பதினான்கு நாட்கள் வேலை
நிறுத்தம் நடந்த பின்பு கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பின்பு மாபெரும் வெற்றிக்
கூட்டத்தில் அவர் பேசுகிறார். “இந்த வெற்றியை தக்கவைக்க நாம் போராட வேண்டிய
அவசியம் வரும் தயாராக இருங்கள்” அவசர நிலைக் காலம் வந்தது. அவர் சொன்னது
உண்மையானது. சி.ஐ.டி.யு சங்கத்தின் அகில இந்திய பொருளாளராகவும் இருந்திருக்கிறார்.
1998
ம் ஆண்டு அவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற
மாநாட்டில்தான் இறுதியாக கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய உரை இன்னும்
என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த உரையின் தமிழாக்கம் ஏற்கனவே
பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மீண்டும் பகிர்கிறேன்
தோழர் சுனில்மொய்த்ரா :
சங்கத்தின்
இணைச்செயலாளராக பணியாற்றியவர். விடுதலைப் போராட்ட வீரர். அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கத்தின் போர் அமைச்சர் என்று வர்ணிக்கப்படுபவர். வெள்ளையனே வெளியேறு
போராட்டத்தில் பங்கேற்று இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றவர். சுதந்திரப்
போராட்டத் தியாகிக்கான எந்த சலுகையையும் பெறாதவர். சலுகைக்காக நாங்கள்
வெள்ளையர்களுக்கு எதிராக போராடவில்லை என்ற நிலைப்பாடு எடுத்தவர். பழி வாங்கும்
நடவடிக்கையாக கோவை, நாக்பூர் என்றெல்லாம் தூக்கியடிக்கப்பட்டார். அவர் சென்ற
இடங்களில் எல்லாம் சங்கத்தை வளர்த்தவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டவர். எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதற்கு எதிரான
போராட்டத்தை மக்களவையில் நிகழ்த்தியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல்
தலைமைக்குழு உறுப்பினராகவும் அக்கட்சியின் இதழான “பீப்பிள்ஸ் டெமாக்ரஸி” இதழின்
ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவரை மரணம் தழுவியது.
தோழர்
ஆர்.பி.மான்சந்தா ;
சங்க்த்தின்
அகில இந்திய தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டவர்.
பஞ்சாப்
மாநிலத்தைச் சேர்ந்தவர். அரசின் அடக்குமுறைகளை சந்தித்தவர். அவசர நிலைக்காலத்தில்
சிறை வைக்கப்பட்டவர். பஞ்சாப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டத்தை வழி நடத்திய
காரணத்தால் அம்மாநில அரசு அவரை கைது செய்தது. ஆசிரியர்களை மிரட்டியதாக குற்றம்
சாட்டியது. இவரது மீசை பெரிதாக இருப்பதால் அவர் மிரட்டியிருப்பார் என்று
நீதிபதியும் ஒப்புக்கொண்டு அவருக்கு சிறைத்தண்டனை வழங்கினார். எல்.ஐ.சி அவரை பணி
நீக்கம் செய்தது. பிறகு வழக்குகளை முறியடித்த பின்பு மீண்டும் பணியில் இணைந்த போது
நாக்பூரில் பணியமர்த்தினார்கள். காவிக் கோட்டை நாக்பூரில் நல்ல பல தோழர்களை அவர்
உருவாக்கி விட்டு மீண்டும் சண்டிகர் வந்தார். பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு
மீண்டு வந்த அவரைப் பார்த்தால் அதன் சுவடே தெரியாது. அதன் பிறகுதான் அவர் அகில
இந்திய தலைவராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் விதிகள் குறித்த
தேர்ச்சி இருந்ததால் அதனையே போராட்ட ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தவர். பக்க வாதத்தை வெற்றி
கொண்ட அவரை புற்று நோய் வெற்றி கொண்டு விட்டது.
தோழர்
என்.எம்.சுந்தரம்
அகில இந்தியப்
பொதுச்செயலாளராகவும் தலைவராகவும் செயல்பட்டவர். எழுபத்தி ஆறு வயது வாலிபர். தொழிற்சங்கப்
பணிக்கு வராமல் இருந்தால் அவருடைய பொருளாதார ஞானத்திற்கு நிதியமைச்சராக
இருப்பதற்கான தகுதியுடையவர் என்பது எனது தாழ்மையான கருத்து. உலக மயம் குறித்தும்
அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்தும் நிதி மூலதனம் குறித்தும் விளக்கமாக புத்தகங்கள்
எழுதியவர். மக்களிடம் செல்லுங்கள் என்பதை அழுத்தமாக சொல்லும் தலைவர். அண்ணாந்து
பார்க்கிற தலைவர். உடலின் உயரத்திலும் அறிவின் உயரத்திலும். ஆனால் அவர் வயது
வித்தியாசம் பார்க்காமல் இயல்பாய் பழகுகிறவர். புத்தகங்களின் காதலர். சென்னையில்
வசிக்கிறார்.
தோழர்
என்.எம்.எஸ் அவர்களுடன் இருக்கிற இந்த புகைப்படத்தைத் தான் எனது முகநூல் முகப்பு
படமாக மிகுந்த பெருமையோடு வைத்திருக்கிறேன். 2012 ம் ஆண்டு
எங்கள் வேலூர் கோட்ட வெள்ளி விழாவை துக்கி வைத்து அவர் உரையாற்றிய போது எடுத்த
படம்.
இன்னும்
சிலரைப் பற்றி நாளை பகிர்கிறேன்.
அறியாத தலைவர்களை அறிந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteதலைவர்கள் அறிந்தேன்
ReplyDeleteநன்றி