Saturday, August 14, 2021

முடங்கிய சுதந்திரத்தை மீட்டெடுப்போம் . . .

 


அன்றொரு காலம் 
தேசம் அடிமைப்பட்டிருந்தது.
வணிகம் செய்ய வந்தவர் கைவசம்
ஆட்சி மாறியிருந்தது.
அஹிம்சைப் பாதையில் பலர்,
புரட்சிப்பாதையில் சிலர்,
எல்லாப்பாதைகளுக்கும் இலக்கு ஒன்றே, 
இந்தியாவின் விடுதலை மட்டுமே.

ஜாதி மறந்து,
மதம் மறந்து,
மொழி மறந்து,
இந்தியராய் ஒன்றிணைந்து
போராடி வென்றனர்.
சுதந்திரத்தை . . . .
இந்நாளில் 75 ஆண்டுகள் முன்பே.

கட்டபொம்மன் போராடிய 
காலத்திலும் கூட
எட்டப்பர்கள் உண்டு.
காந்தியின் காலத்திலும்
துரோகிகள் உண்டு.

செங்குருதி சிந்தி
தூக்கு மேடை ஏறி
குண்டாந்தடிகளில் தாக்குண்டு
பெற்ற நாட்டிலே இன்று 
காலத்தின் கோலத்தில்
துரோகிகள் கையிலே 
ஆட்சிப் பொறுப்பு.

இன்று மீண்டும் 
வணிகர்களின் ஆட்சிதான்,
தலைமைப் பொறுப்பு
மட்டும் தரகர்களுக்கு.

வெள்ளையன் 
பறித்த உரிமைகளை
முடக்கிய ஜனநாயகத்தை,
நடத்திய அராஜகத்தை
சுதந்திர தேசத்தில்
நிகழ்த்துகின்றனர் 
கொள்ளையர்கள்.

வெட்கம் ஏதுமின்றி
செங்கோட்டை கொத்தளத்தில்
பொய்களாய் அள்ளி விடுவார்கள்.

சுதந்திர நாடாய் இந்தியா 
இருந்ததென்பது பழங்கதையாய்
மாறாமல் இருக்க
விடுதலை வேட்கை 
மீண்டும் வேண்டும்
நம் மனதில்.

வீரர்களின் தியாகம் 
உள்ளத்திற்கு உரமேற்றட்டும்,
துரோகிகளை விரட்டியடிக்க
வீரத்தை ஊட்டட்டும்.

சுதந்திரத்தை மீண்டும்
மீட்டெடுக்க சுதந்திர நாளில்
உறுதியேற்போம். 


No comments:

Post a Comment