சார்பட்டா பரம்பரை திரைப்படம் பற்றிய
பதிவிலும் பின்னர் மணிரத்தினம் தொடர்பான பதிவிலும் திரைப்பட தணிக்கை சட்டங்களை திருத்த நடக்கும்
முயற்சி பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது பற்றிய விரிவான பதிவை பகிர்ந்து
கொண்டுள்ளேன்.
இரத்தம் தோய்ந்த சிந்தனை சிறகுகள்
*நாளொரு கேள்வி: 14.07.2021*
வரிசை எண் : *409*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *ஆர். தர்மலிங்கம்*
#########################
*இரத்தம் தோய்ந்த சிந்தனை சிறகுகள்*
கேள்வி
அண்மையில் மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள திரைப்பட தணிக்கை திருத்த வரைவு மசோதா கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதே? மசோதாவின் நோக்கம்தான் என்ன?
*ஆர். தர்மலிங்கம்*
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தால் திரைப்பட தணிக்கை திருத்த வரைவு மசோதா சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
திரைப்பட தணிக்கை வரைவு மசோதா கருத்துரிமைக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சிகள், பல சனநாயக அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
சினிமா கனவுகளை காட்சிப்படுத்துகிற மிகப்பெரிய தொழிற்சாலையாகும்.
பிற கலைகளுக்கு இல்லாத வெளிச்சமும், புகழும் சினிமாவிற்கு இருக்கிறது. அதனால்தான் சினிமா *வெகுசன ஊடகம்* என அழைக்கப்படுகிறது.
கடந்தகால, நிகழ்கால
சமூக யதார்த்தங்கள், கலை, இலக்கியங்கள், அரசியலை, எதிர்கால எதிர்பார்ப்புகளை சினிமா எதிரொலித்து கொண்டிருக்கிறது.
இருபதாவது நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா உடனடியாக இந்தியாவிற்குள் வந்து விட்டது.
முதல் பேசும் படமாக *"ஆலம் ஆரா"* 1931 ல் வெளிவந்தது.
இன்று சினிமா பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் மிகப்பெரிய வர்த்தகமாக, வருமானம் ஈட்டும் துறையாக, சமூகத்தில் செல்வாக்கு பெற்ற துறையாக உள்ளது. *2022 ல் சினிமா வர்த்தகம் ரூ.18300 கோடியாக இருக்கும்* என மதிப்பிடப்பட்டுள்ளது.
நவீன சமூகத்தில் பிரபலமாகவும், மக்களின் மீது செல்வாக்கு செலுத்தக் கூடியதாகவும் உள்ள திரைப்படத் துறை தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டே வருகிறது. குறிப்பாக *கண்களுக்கு தெரியாத கரங்கள்* சினிமாவின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தியே வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் முன்மொழியப்பட்டுள்ள வரைவு சட்டம் திரைப்பட கருத்துரிமையின் மீது தாக்குதல்களை தொடுத்துள்ளன.
*"கருத்து திருட்டை"* (Piracy) தடுத்திடும் பெயரால் முன்மொழிந்ததாக சொல்லப்படும் சட்டம், தணிக்கைக்குப் பிறகு கூட ஒரு திரைப்படத்தை *"மறு பரிசீலனைக்கு"* உட்படுத்தவும், புதிய சான்றிதழ் வழங்கவும், அபராதம் விதிக்கும் உரிமையையும் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. புதிய சட்டம் திரைப்படத்தை தணிக்கை செய்வதோடு ஏற்கனவே உள்ள விதிகளை திருத்தவும்,திரைப்படம் மீதான ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டையும் அதிகரித்துள்ளது.
தனிமனித சுதந்திரத்தை கட்டுபடுத்துவது, அதிகாரத்தை மையப்படுத்தும் முயற்சி புதிய சட்ட திருத்தத்தில் உள்ளது. இந்திய அரசியலைமைப்பு சட்டப் பிரிவு 19(1)(a) உறுதியளித்துள்ள "பேச்சுரிமைக்கு" எதிராக வரைவு சட்டம் உள்ளது.
1952 ல் கொண்டுவரப்பட்ட திரைப்பட சட்டத்தின் மூலம் *"இந்திய மத்திய திரைப்பட தணிக்கை குழு"* (Central
Board of Film Censorship of India) உருவாக்கப்பட்டது. பின்னர் *"மத்திய திரைப்பட சான்றிதழ் குழு"*
(Central Board of Film Certification- CBFC) என பெயர் மாற்றப்பட்டது. இந்த குழு திரைப்படத்தை தணிக்கை செய்யும் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. குழுவிற்கு தலைவரும்,12 முதல் 25 பேர் வரை உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக செயல் படுகிறது. குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் ஒன்றிய அரசே நியமிக்கிறது. தணிக்கை சான்றிதழ் மீதான மேல் முறையீட்டுக்கென தனியாக *"சான்றிதழ் மேல் தீர்ப்பாயம்"*
(FCAT - Film certificate Appellate Tribunal) என்ற அமைப்பும் இருந்தது. சமீபத்தில் இந்த தீர்ப்பாயம் கலைக்கப்பட்டு அதன் அதிகாரத்தை ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டது.
சட்டப்பிரிவு 16 ன் படி ஒன்றிய அரசு புதிய விதிகளை உருவாக்க, ஒழுங்குபடுத்த, நிபந்தனைகள் விதிக்க, காட்சிப்படுத்துவதை தடைசெய்ய அதிகாரம் பெறுகிறது. திரைப்படத்திற்கு வழங்கும் சான்றிதழ்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
*"U"* அனைவரும் பார்ப்பது,
*"U/A"* பெற்றோர் அனுமதியோடு 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் பார்ப்பது,
*"A"* வயது வந்தோர் மட்டுமே,
*"S"* குறிப்பிட்டவர்கள் மட்டுமே பார்ப்பது.
தற்போது வரைவு மசோதாவில் *"U/A"* என்பதை மேலும் வயது வாரியாக பிரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு 5B ன் படி *"இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, தேச பாதுகாப்பு, அந்நிய நாடுகளுடன் நல்லுறவு, பொது ஆணை, கண்ணியம் அல்லது அறநெறி, அவதூறு அல்லது அவமதிப்பு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றம் செய்ய தூண்டுதல்"* போன்றவை குறித்து திரைப்படத்தின் கதையோ, கருத்துக்களோ, வசனங்களோ இருப்பின் சான்றிதழ் வழங்க மறுப்பதோடு இதில் ஏதாவது ஒன்று மீறப்பட்டாலும் திரைப்படத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த ஒன்றிய அரசிற்கு அனைத்து அதிகாரமும் வழங்குகிறது. இது தனிமனித கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான உச்சபட்ச தாக்குதலாகும்.
திரைப்பட சட்டத்தின் படி ஒரு திரைப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டால் அதில் அரசு தலையிடக் கூடாது என *"இந்திய அரசு எதிர் K.M.சங்கரப்பா"* வழக்கில் 2001 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை மாற்றவே பிரிவு 5B சட்ட திருத்தம் மசோதாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. *திரைப்பட தணிக்கையில் அரசு தலையிடுவது, மறு தணிக்கைக்கு உட்படுத்துவது* போன்ற செயல்கள் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமை மீதான தாக்குதலாகும்.
திரைப்படத்தை இயக்கும் போதோ, தயாரிக்கும் போதோ காட்சிகளும், கருத்துக்களும் வெட்டப்படும், மறு தணிக்கைக்கு உள்ளாகும் என்ற நிலை இருந்தால் ஒரு கலைஞனால் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட முடியுமா? இது தனிமனிதனின் சிந்தனையை முடமாக்கி விடாதா?
சட்டம் நிறைவேற்றப்பட்டால் திரைப்படத்தில் என்ன கருத்துக்கள் இடம் பெற வேண்டும் என அரசு விரும்புகிறதோ அதுதான் அனுமதிக்கப்படும். அரசின் கருத்துக்களையும், விருப்பத்தையும் மட்டுமே திரைப்படமாக எடுக்க முடியும். அரசின் விருப்பத்திற்கு எதிராக அல்லது அரசின் கொள்கையை கேள்வி கேட்கும், விமர்சிக்கும் கலைஞர்களின் திரைப்படமும், கருத்துக்களும் தடை செய்யப்படும். மக்களுக்கும் எந்த தெரிவும் இருக்காது. *அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமையின் மீதான நேரடி தாக்குதலாக திரைப்பட திருத்த வரைவு சட்டம் அமைந்துள்ளது.*
தனிமனித சிந்தனையை, எழுத்தை, கலையை கூட சகித்து கொள்ள முடியாத அரசை சனநாயக அரசு என்று சொல்ல முடியுமா???
No comments:
Post a Comment