Sunday, August 29, 2021

பாலில் நஞ்சு கலக்கும் மோடி வகையறாக்கள்

 


*நாளொரு கேள்வி: 27.08.2021*


வரிசை எண் : *453*

இன்று நம்மோடு இடதுசாரி சிந்தனையாளர் *ஆர். பத்ரி*
#########################

*பாலில் நஞ்சு கலக்கும்* 
*படு பாதகம்*

கேள்வி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டம், மக்களுக்கு என்ன பாதிப்பை உருவாக்கும்?

*ஆர். பத்ரி*

தேசிய பணமாக்கல் திட்டம் (National MonitisationPipeline)  *பாலில் நஞ்சை கலக்கும் மாபாதகச் செயல்.* “வளர்ச்சிப் பணிகளுக்காக” எனும் போர்வையில் மக்கள் சொத்துக்களை பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. ரயில்வே, நெடுஞ்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்கத் துணிந்திருக்கும் முயற்சி. இத்தகைய முடிவுகள்எதிர்காலத்தில் மிக மிக மோசமான விளைவுகளையே உருவாக்கும். *விதை நெல்லை விற்றுதின்றுவிட்டு அறுவடை காலத்தில் அய்யோ அய்யோ என அரற்றுபவருக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை* என்பதே உண்மை.

பிரிட்டிஷ் இந்தியாவில் ரயில்வே, நெடுஞ்சாலைகள் ஆகிய கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான முடிவுகளை எடுத்து அதிகமான முதலீடுகளை மேற்கொள்கிற போது அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த *டல்ஹெளசி* 

 _"சமூக மேம்பாட்டை நோக்கமாகவும், வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் நாட்டின் கேந்திரமான கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் என மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டே இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன"._ 

என குறிப்பிடுகிறார். 

காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒருவரின் குறிப்பில் கூட வணிக நோக்கத்தோடு சமூக மேம்பாடு, கேந்திரமான கட்டமைப்பு ஆகிய இரு அம்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் சுதந்திர இந்தியாவின் பிரதமர் மோடிக்கோ ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை எப்படியேனும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும் என்கிற வணிகநோக்கம் மட்டுமே பிரதானமாக உள்ளது. *அரசாங்கத்தின் பணமாக்கல் திட்டத்தின் மூலம் 167 வருட பாரம்பரியம் மிக்க ரயில்வேயின் 1,15,000 கி.மீ இருப்புப் பாதைகளும், அத்துறைக்கு சொந்தமான 4.77 ஹெக்டேர் நிலங்களும் தனியாரின் கைவசமாகப் போகின்றன. நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 62,15,797 கி.மீ சாலைகளும் படிப்படியாக தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.* 

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகள், பொதுபோக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவற்றின் தனியார்மயத்தால் *பயன்பாட்டுக் கட்டணங்கள் பல மடங்கு கடுமையாக உயரும்.* தற்போது நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் என்பது கடந்த ஒன்பது ஆண்டுகளில் 250 சதவீதம் அளவில் உயர்த்தப்பட்டு, தற்போதுசொந்த வாகனத்திற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ.1.09 ஆகவும், வணிக வாகனங்களுக்கு ரூ.3.80 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.6ஆகவும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைகள்  தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டால் கட்டணக் கொள்ளை பலமடங்கு அதிகரிக்கும். தற்போது ரயில்வேயில் பயணிகளுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தில் 43 சதவீதம்அளவிற்கு மானியமாக அளிக்கப்படுகிறது. பயணிகள் ரயில் கட்டணத்தில் ஏற்படும் இழப்பை ரயில்வே துறை சரக்குக் கட்டணத்தில்ஈடு செய்து கொள்கிறது. அரசு தற்போது எடுத்துள்ள முடிவின் படி தற்போது 151 வழித்தடங்களில் தனியார் ரயில்களுக்கான அனுமதியை வழங்குவது எனவும் பிறகு கூடுதலாக தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிப்பது எனவும்,ரயில் நிலையங்களை தனியாருக்குஅளிப்பது எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. 

பெருமளவு மக்கள் பயன்படுத்துகிற ரயில்வே துறையின் கட்டமைப்புகளை தனியாருக்கு அளித்து விட்டால் இத்தகைய மானியம்முற்றாக நிறுத்தப்படும் என்பதோடு கட்டணமும் பெருமளவு உயரும். எடுத்துக்காட்டாக தற்போது *மும்பையிலிருந்து அகமதாபாத் வரை* குளிர்சாதன பெட்டியில் பயணம் மேற்கொள்ள ரயில்வேதுறை ரூ.1289/- ஐ கட்டணமாகப் பெறுகிறது. ஆனால் தேஜஸ் எனும் தனியார் ரயிலில் அதே தூரத்திற்கு இருமடங்காக ரூ.2389/- ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதுதான் தனியார்மயப்படுத்தலின் விளைவாகும். இதைத்தான் மேலும் மேலும் மோடி அரசு ஊக்குவிக்கிறது. 

*செவ்வானம்*

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ANTI CPM என்பவன் ஒரு மக்கள் விரோத பொறுக்கி

      Delete