Saturday, August 14, 2021

சூப்பரா சொன்னாரு சு.வெ

 


ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவை நேரில் சந்தித்தது பற்றி தோழர் சு.வெங்கடேசன் எழுதிய பதிவு இங்கே.

வந்தனா கட்டாரியாவை
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியை பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள். வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர உழைத்த பெண்களில் ஒருவருக்கு இங்கு கிடைத்த வெகுமதி சாதிரீதியான இழிவு.
வந்தனா கட்டாரியா – இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கை. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய பெண். காலிறுதி போட்டியில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெற வழி வகுத்த ஆட்டம் அது. ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியின் பொருட்டு, தந்தையின் இறுதி சடங்குக்கு செல்லாமல் விட்ட வந்தனாவுக்கு கிடைத்ததெல்லாம் சாதி துவேஷம். அவரைப் போன்ற தலித் பெண்கள் இடம் பெற்றதால்தான் தோல்வி என்று கொக்கரித்தது ஒரு கூட்டம்.
குடும்பத்தை விட நாடு முக்கியம் என்று நினைத்து பயிற்சியில் பங்கெடுத்த வந்தனா ஒரு பக்கம், தேசத்தை விட சாதி உயர்வானது என்று நினைத்து தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய கீழ்த்தரமான கூட்டம் இன்னொரு பக்கம். இதில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்?
குற்றவாளிகளை கைது செய்ததோடு மட்டும் நிற்காமல், இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த உங்கள் பக்கம்தான் நிற்கிறோம் என்கிற வலிமையான செய்தியை இந்தியா சொல்லியிருக்க வேண்டாமா?விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் இன்று வந்தனா கட்டாரியாவை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில் ரோஷ்னாபாத் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். நான் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் வந்தனா,அவரது அம்மா & அவரது அண்ணன் மூவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
அவர் இந்தியாவுக்கு தேடித்தந்த மகத்தான பெருமைக்கு நன்றி சொல்லி திரும்பியிருக்கிறேன்.
அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவை தந்தது. அவர் இன்னும் பெரிய உச்சங்களை தொடுவார் என்கிற நம்பிக்கையை தந்தது.
வந்தனா, இந்தியாவின் மகள்.
அவரது வெற்றி இந்த தேசத்தின் வெற்றி.
இதுதான் வந்தனாவுக்கு நான் சொன்ன சேதி.
வாழ்த்துகள் வந்தனா!
காலம் உங்கள் கைகளில்.

இன்னொரு பதிவும் அவர் எழுதினார். அது ரொம்பவே சூப்பர் . . .


கார் நுழையும் அளவு கொண்ட தெருவில்லை.
இதுவரை வாங்கிய பதக்கங்களையும், கோப்பைகளையும்
வைப்பதற்கு அலமாரிகள் இல்லை,
ஜன்னல் கதவுகளை முழுமையாக சாத்திடும் தன்மையில்
தாழ்பாள் இல்லை,
ஆனால் என்ன?
ஹாட்ரிக் கோல் அடிக்கும் திறனும் உறுதியும்
இருப்பவரின் நம்பிக்கையை
இல்லாமைகள் இல்லாமலா செய்துவிடும்?

No comments:

Post a Comment