Friday, February 25, 2022

நிறுத்தனும் . எல்லாரும் நிறுத்தனும் .

 


ரஷ்யா போரை நிறுத்தனும்.. அவங்களும் . . .

 ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து விட்டது. நீண்ட நாளாக புகைந்து கொண்டிருந்த விஷயம் இப்போது நிஜமாகி விட்டது.

 போருக்கான காரணங்களும் நியாயங்களும் ஆயிரம் இருந்தாலும் பாதிக்கப் படுபவர்கள் என்னமோ அந்த காரணங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள்தான். அதனால் போர் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா சபை தலையிட வேண்டும்.  மற்ற நாடுகளுக்கு இனே வேலை இல்லை. ஏனென்றால் அவைகள் எல்லாமே அப்பத்தை பகிர்ந்து அளிக்கும் குரங்குகளைப் போன்றவையே. (மோடிக்காக இதை நான் எழுதவில்லை. மோடி ஒரு டம்மி, வேஸ்ட் பீஸ்.)

 சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் என்று பொய் சொல்லி இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது நியாயமென்றால் அதே நியாயம் நேடோ ராணுவ தளம் உக்ரைனில் அமைவது எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுவதும் நியாயம்தானே!

 முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் நேடோ கூட்டணியில் இணையக் கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறுவதுதானே இந்த பதற்றத்திற்கு முக்கியக் காரணம்!

 ஆக இப்போதைய போருக்கு முக்கியமான காரணம் உக்ரைனும் உக்ரைனை உசுப்பேத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இதர நேடோ நாடுகள்தான்.

 ஆனாலும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்.

 ஏனென்றால் இந்த போரில் உக்ரைன் தலைவர்களோ அல்லது இதர நேடோ நாடுகளின் தலைவர்களோ கொஞ்சம் கூட பாதிக்கப்பட மாட்டார்கள். உக்ரைன் தலைவர்கள் பதுங்கு குழிகளிலோ அல்லது குண்டு துளைக்காத வசதியான், உறுதியான மாளிகைகளிலோ பாதுகாப்பாக இருப்பார்கள். இறப்பதும், காயப்படுவதும், வாழ்வாதாரத்தை இழப்பதும் சாதாரண மக்களே. அவர்களுக்காக போர் நிறுத்தப்பட வேண்டும்.

 அதே நேரம் ரஷ்யாவை ஏதோ பழைய சோவியத் சோஷலிச நாடு என்று நினைத்து அதனை அழிக்க அல்லது அதனை மடக்க உக்ரைனை பயன்படுத்தும் அற்பத்தனத்தை அமெரிக்காவும் இதர நேடோ நாடுகளும் நிறுத்த வேண்டும். அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அருகாமை நாட்டை  வெறுப்பேற்றுவதை உக்ரைனும் நிறுத்த வேண்டும்.

 இதோடு இன்னும் சில விஷயங்களையும் பேசிட வேண்டும்.

 நேற்று முக நூலில் பார்த்தது இது.

 


"ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு அழைப்பேதும் இல்லாமல்  டாங்கிகளை, வீரர்களை அனுப்பினால் அதன் பெயர் என்ற கேள்விக்கு பதில் மிகவும் நச்சென்று இருந்தது.

 இதற்கு பதில் சொல்வது மிகவும் எளிது. எந்த நாடு என்பதைப் பொருத்தது. ரஷ்யாவாக இருந்தால் உக்ரைன், ஜியார்ஜியா நாடுகள் மீது அது நடத்தியது படையெடுப்பு, போர்."

 அதுவே அமெரிக்காவாக இருந்தால் அது இராக், சிரியா, லிபியா, பனாமா, க்யூபா, வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் மீது நடத்தியது விடுதலைக்கான வேள்வி.  

 இன்று மனித உரிமைகளுக்காகவும் உக்ரைனின் இறையாண்மைக்காகவும் குரல் கொடுக்கும் எத்தனை மகான்கள், அமெரிக்கா இராக், லிபியா, வியட்னாம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்த போது அமெரிக்காவிற்கு எதிராக வாய் திறந்தார்கள்?

 கியூபா, வெனிசுலா, பனாமா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளின் சோஷலிச அரசுகளைக் கவிழ்க்க உள் நாட்டுக் கலவரங்களை தூண்டி ஆயுதங்களும் பணமும் அளித்த போது இவர்கள் எல்லாம் எந்த பங்கரில் பதுங்கி இருந்தார்கள்?

 பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா திட்டின் மீது இஸ்ரேல் அன்றாடம் தாக்குதல் நடத்தி பாலஸ்தீன மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்களே, எப்போதாவது சிறிய முணுமுணுப்பாவது செய்துள்ளார்களா?

 இது நாள் வரை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டிக்க துணிவில்லாத எந்த கையாலாகாதவர்களுக்கும் இன்று ரஷ்யாவுக்கு உபதேசிக்க அருகதை கிடையாது.

 ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். போருக்கான சூழலை உருவாக்கியவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

 

1 comment:

  1. Iraq invasion was wrong. Crimea occupation was wrong. War on Ukraine is wrong. Atleast in USA those war mongering leaders go away. But in Russia murderer putin ( role model for modi) keeps ruling forever.

    ReplyDelete