Tuesday, February 8, 2022

ஹிஜாப் சர்ச்சை - 3 இன் 1


கர்னாடக மாநில பாஜக அரசின் மூலமாக உருவாகியுள்ள பிரச்சினை தொடர்பாக திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன் ஓவியம் மூலம் எழுப்பியுள்ள கேள்வி இங்கே



இப்பிரச்சினையின் இன்னொரு பரிணாமத்தைச் சொல்கிறார் தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம்.



எப்போதும் பாதிக்கப்படுபவள் பெண்தான் என்பதை சொல்லும் 

 மனுஷ்ய புத்திரனின் கவிதை கீழே :

❤️
ஒரு ஹிஜாப் அணிந்தவளின் பாடல்
,..........
முகத்திரை அணிவதும்
முகத்திரை விலக்குவதும்
என் முகத்தில்
என் கைகள் மட்டுமே செய்யட்டும்
முகத்திரையை வற்புறுத்தி
என் முகத்தில் திணித்தபோது
முகத்திரையை அல்ல
அந்த வற்புறுத்தலையே நான் வெறுத்தேன்
அதனாலேயே நான் அதை
அணியாமலும் இருந்திருக்கிறேன்
ஆயினும் எனக்கு
ஒரு நீண்ட கடந்த காலம் இருக்கிறது
அது பல நூறு ஆண்டுகள்
நினைவுகளைக்கொண்டது
நான் என்னை ஒரு பாரசீகத்து பேரழகியாக
நினைத்துக் கொண்ட நாளில்
இந்த முகத்திரையும் முக்காடும்
பொருத்தமான ஆடையாக இருந்தது
பல்லாயிரம் அண்டங்களை ஆளும்
ஒரு இறைவனை முழங்காலிட்டு வணங்கும்போது
இந்த முக்காடு என் பிரார்த்தனையின்
அடையாளமாக இருந்தது
நான் என்னை ஒரு முழு நிலவாக உணர்ந்த நாளில்
என்னை ஒரு கட்டற்ற காற்றாக அறிந்த நாளில்
நான் முக்காடும் முகத்திரையும்
இல்லாமலும் இருந்திருக்கிறேன்
எனக்கு போவதற்கும் திரும்புவதற்கு
எல்லாப் பாதைகளும் திறந்திருக்க வேண்டும் என
நான் உறுதியாக நம்புகிறேன்
அவர்கள் சொல்கிறார்கள்
'முக்காடை அணியாதே
முகத்திரையை அணியாதே' என்று
அதற்காக என்னை
நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்துகிறார்கள்
வகுப்பறைக்குச் செல்ல விடாமல்
படிக்கட்டுகளிலேயே உட்கார வைக்கிறார்கள்
இதுவரை அவ்வளவு அவசியமாக இல்லாத முக்காடு
இப்போது எனக்கு மிக மிக அவசியமாகி விட்டது
என் முகத்திரையையோ முக்காடையோ
ஒருவர் பலவந்தமாகப் பிடுங்குவது
அது என் மேலாடையை பிடுங்குவது போன்றதுதான்
அதை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்துவிடமாட்டேன்
இதற்கு எதிராக நான் கூச்சலிடுவேன்
நாங்கள் ஏன் அடையாளமற்றவர்களாக இருக்க வேண்டும்?
பொதுப்பண்பாடு என்ற முகமற்ற சாக்கடைக்குள்
நாங்கள் ஏன் குதிக்க வேண்டும்?
அவர்களுக்கு ஒரு பெயர் இருப்பது போல
எனக்கும் ஒரு பெயர் இருக்கிறது
அவர்களுக்கு ஒரு பண்பாடு இருப்பது போல
எனக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது
அவர்கள் அதை எங்கும் சுமந்தலைவது போல
நானும் என் அடையாளத்தை சுமந்தலைவேன்
எதை அடிமைத்தனம் என்றார்களோ
அதுவே ஒரு போர்க்கொடியாகும் என்பதைத்தான்
வரலாறு திரும்பத் திரும்பக் காட்டுகிறது
நிறத்தால் இழிவுபடுத்தப்பட்டவர்கள்
அந்த நிறத்தைத்தான் தங்கள் கலகக் குரலாக்கினார்கள்
சாதியால் நசுக்கப்பட்டவர்கள்
தங்களை அவமதிக்கும் பெயர்களையே
தங்கள் எதிர்க்குரலாக்கினார்கள்
எல்லாம் ஏற்கனவே வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது
துருக்கியில் முகத்திரை வேண்டாம் என்று சொன்ன
அதே பெண்கள்
அமெரிக்கர்கள் முகத்திரையை தடை செய்த போது
முகத்திரை அணிவதை ஒரு இயக்கமாக்கினார்கள்
முகத்திரையும் முக்காடும்
மெல்லிய மஸ்லின் துணியால் நெய்யப்படுகின்றன
அவை தலையிலும் முகத்திலும் இருக்கும்போது
நான் மிகவும் அந்தரங்கமாக உணர்கிறேன்
ஒரு பிரியமான கை அந்த முகத்திரையை விலக்கும்போது
என் முகம் மலர்ந்து விடுகிறது
ஒரு கிருமி உலகத்தையே
முகத்திரை அணிய வைக்கும்போது
இன்னொரு கிருமி பலவந்தமாக
என் முகத்திரையை விலக்க முற்படுகிறது
எத்தகைய
விசித்திரமான காலம் இது
6.2.2022
காலை 9.23
மனுஷ்ய புத்திரன்

பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு பதிவையும் எழுப்ப வேண்டிய கேள்வியையும் மாலை பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment