*நாளொரு கேள்வி: 06.02.2022*
தொடர் எண்: *616*
_பட்ஜெட் உரையாடல் 1_
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
########################
*வளர்ச்சி கனவு பலிக்குமா?*
கேள்வி: பட்ஜெட் 2022ம், பொருளாதார ஆய்வறிக்கையும் கோவிட்டுக்கு முந்திய மொத்த உள்நாட்டு வளர்ச்சி அளவைத் தொட்டு விட்டோம் என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனவே?
*க.சுவாமிநாதன்*
2021 - 22 இல் *9.2 சதவீத வளர்ச்சியை* எட்டுவோம் என்பது திருத்திய மதிப்பீடு. இந்த வளர்ச்சி என்பது கடந்த ஆண்டு மொத்த உள் நாட்டு உற்பத்தியை விட எவ்வளவு வளர்ச்சியை நாடு எட்டி இருக்கிறது என்பதே. அரசின் புள்ளி விவரங்கள் சற்று மிகையாக அமையும் அனுபவங்கள் நமக்கு உண்டு. இருந்தாலும் இப்போது அந்த பிரச்சினைக்குள் நாம் செல்லவில்லை. 9.2 சதவீத வளர்ச்சி என்று அரசு சொல்கிற விவரங்களை வைத்து மட்டும் விவாதிப்போம்.
கடந்த ஆண்டு அதாவது *2020- 21 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதமாக சுருங்கிய ஆண்டாகும்.* ஆகவே அந்த பலவீனமான அடிப்படை ஆண்டை அடிப்படையாக கொண்ட கணக்கில்தான் 9.2 சதவீதம் வருகிறது. பரிட்சையில் 5/100 மார்க் வாங்கியவன் அடுத்த பரிட்சையில் 10/100 மார்க் வாங்கினால் 100 சதவீத அதிக மதிப்பெண் பெறுகிறான் என்ற கணக்கு போன்றதுதான் இது. ஆகவே சதவீதம் அதிகமாக தெரிவதில் மயக்கம் ஏதும் தேவை இல்லை.
கடந்த ஆண்டை விட்டு விட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருந்த 2019- 20 ஐ அடிப்படையாக கொண்டால் இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் *1.22 சதவீதம்* ஆகி விடும்.
இது நடப்பு ஆண்டு பற்றிய கணக்கு. இனி *2022-23 க்கான மதிப்பீடிற்கு* வருவோம். 8 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதம் வரையிலான வளர்ச்சி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு *நான்கு முன் நிபந்தனைகளும்* விவாதிக்கப்பட்டுள்ளன.
*ஒன்று,* கோவிட் பேரிடர் தணிந்து விடும் என்ற எதிர்பார்ப்பு. இதை உறுதி செய்கிற நிலையில் யாரும் இல்லை. ஒமிக்ரான் ஓரளவு பாதிப்பு குறைவானதாக இருந்திருக்கிறது. அடுத்த பரிணாம வகை வந்தால் எப்படி இருக்கும்? என்பது மருத்துவ உலகம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
*இரண்டாவது,* தடுப்பூசி இயக்கத்தை விரைவு செய்வது. ஏற்கெனவே அரசு சொன்ன காலக் கெடுக்கள் கடைப்பிடிக்கப் படவில்லை. ஏற்கெனவே போட்ட தடுப்பூசிகளின் தாக்கம் குறையலாம் என்பதால் பூஸ்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டப் பந்தயத்தில் ஏற்கெனவே பின்னால் ஓடுகிறவர் அந்த இடைவெளியை சரி செய்து செய்து முன்னேறும் கூடுதல் முனைப்பு (Extra effort) தேவைப்படுகிறது.
*மூன்றாவது,* அளிப்பு முனையில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் (Supply side reforms). உம். வீட்டு கடன் வட்டி 6.6 சதவீதம் என்கிற அளவிற்கு குறைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடு கட்ட ஆர்வமாக முன் வருவார்கள். கட்டுமானத் தொழில் வளர்ச்சி அடையும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள். ஆனால் மக்களின் வாங்கும் சக்தி உயராமல், கிராக்கி உருவாக்கம் அரங்கேறாமல் வெறும் வட்டிக் குறைப்பு மட்டும் தொழில் வளர்ச்சிக்கு புத்துயிர் தருமா! இதோ எல்.ஐ.சி வீட்டு வசதிக் கடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்தார்த்த மொகந்தியின் வார்த்தைகள்
_"பணத்திற்கு பஞ்சமில்லை. எது பிரச்சினை எனில் நுகர்வு அதிகரிக்காததே" (There is no dearth for liquidity. What is lacking is consumption)._ ஆகவே கிராக்கி முனையில் ஒன்றும் செய்யாமல் அளிப்பு முனையில் மட்டும் "சீர்திருத்தங்கள்" செய்வதில் பயனில்லை.
*நான்காவது,* நிதியாதாரங்கள் உருவாக்கப்படுவதற்கான இடங்கள் இருக்க வேண்டும். இதை அரசு சொன்னாலும் அதற்கான சரியான பாதையில் நடை போடுகிறதா என்ற கேள்வியே இந்த பட்ஜெட் பலூனை குத்திக் கிழிக்கிற ஊசியாக உள்ளது.
ஆகவே இந்த ஆண்டின் வளர்ச்சி மதிப்பீடு இத்தனை கேள்விகளுக்குள் சிக்கி நிற்கிறது
இந்த சூழலில் வளர்ச்சி என்பது *"பொதுத் துறையை ஒட்டுனராக கொண்டுதான் இருக்கும்"* என்று பெரு ஊடகங்களே எழுதுகின்றன. பிப்ரவரி 4, 2022 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஜகாங்கீர் அசிஸ் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பே மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது. ஆனால் அரசோ அந்த டிரைவரை வீட்டுக்கு அனுப்புவது பற்றியல்லவா யோசிக்கிறது?
இந்த வளர்ச்சி கணக்கெல்லாம் அறுதிப் பெரும்பான்மை மக்களின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது இல்லை என்பது தனிக் கதை.
*செவ்வானம்*
பிகு: ஓட்டுனர் இல்லாத வாகனம் யார் வசம் செல்லும்? முகப்பில் உள்ள படம் உண்மையைச் சொல்கிறது. தேசம் இன்று அவர்கள் கைகளில்தான்,
No comments:
Post a Comment