Sunday, May 7, 2017

மாவட்டத்தின் மக்கள் தலைவர்





மே மாதம் ஐந்தாம் நாள் பேராசான் காரல் மார்க்ஸின் பிறந்த நாள். அந்த நாள் வேலூர் மாவட்டத்தின் மகத்தான மக்கள் தலைவராக விளங்கிய தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் நினைவு நாளும் கூட.

சுதந்திரப் போராட்ட வீரர், தொழிற்சங்கத் தலைவர், பொதுவுடமை இயக்கத்தலைவர், மக்கள் பிரதிநிதி என்று பல பரிமாணம் கொண்ட தலைவர் தோழர் கே.ஆர்.எஸ்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலும் பிறகு கம்யூனிஸ்டுகளை மத்தியரசு வேட்டையாடிய காலத்திலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசத்திலும் தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். மிகவும் எளிமையானவர். குடியாத்தம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரண்டு முறை செயல்பட்டவர். காட்பாடி அருகே உள்ள தாராபடவேடு ஊராட்சியின் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டார். 



எங்கள் வேலூர் கோட்டம் 1998 ல் துவக்கப்பட்ட போது அந்த துவக்க மாநாட்டுக்கான வரவேற்புக்குழுத் தலைவராக தோழர் கே.ஆர்.எஸ் அவர்கள்தான் செயல்பட்டார். அப்போதே அவரைத் தெரியும் என்றாலும் 1996 ம் ஆண்டுதான் அவருடனான அறிமுகம் என்பது கிடைத்தது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய வேலூர் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆர்.புருஷோத்தமன் காட்பாடியில் போட்டியிட்டபோது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தேன். மிகப் பெரிய பணி என்றெல்லாம் சொல்ல முடியாது. வாக்காளர் பட்டியலைப் பார்த்து பூத் ஸ்லிப் எழுதுகிற வேலை. தேர்தல் அலுவலகத்தில் அப்பணியைச் செய்யும் தோழர்களுக்கு தேநீரும் மதிய உணவும் சரியாக வந்து சேர்கிறதா என்பதில் கவனமாக இருப்பார்.

எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜெகதீசன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தோழர் ஆர்.ஜே மூலமாகவே தோழர் கே.ஆர்.எஸ் பற்றி அதிகம் அறிந்து கொண்டிருக்கிறேன். தோழர் ஜகதீசன் ஓய்வு பெற்ற போது நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தோழர் கே.ஆர்.எஸ், எல்.ஐ.சி சங்கத்தை விட இன்னும் முக்கிய பணிக்கு ஆர்.ஜேவை அழைத்துச் செல்லத்தான் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அவர் பேசியது இன்னும் நினைவில் உள்ளது.

அரக்கோணத்தில் எங்கள் கிளையின் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தை முடித்து விட்டு புகை வண்டியில் ஏறிய போது அதே பெட்டியில் தோழர் கே.ஆர்.எஸ்ஸும் ஏறினார். ஒரு தனியார் நிறுவனத்தில் போனஸ் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து விட்டு வந்த அவருடன் பயணம் முழுதும் பேசிக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

வேலூர் மாவட்டத்தின் தொழில் துறை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிகிற வகையில் மத்தியரசின் கொள்கைகள் அமைந்துள்ளது என்ற தனது கவலையை அந்த உரையாடல் முழுதும் உணர்த்திக் கொண்டே இருந்தார்.

எங்கள் சங்க நிகழ்ச்சிகளுக்கு எப்போது அழைத்தாலும் தயங்காமல் வருபவர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டோவில் வாருங்கள் என்று வலியுறுத்தினாலும் யாராவது ஒரு தோழரை இரு சக்கர வாகனத்தில் அனுப்புங்கள். பின்னே உட்கார்ந்து வந்து விடுகிறேன் என்று வந்து விடுவார்.

நெசவாளர் பிரச்சினை உச்சத்திற்குச் சென்று கஞ்சித் தொட்டி வைக்கும் நிலை வந்த காலத்தில் தமிழகமெங்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் கைத்தறி சேலைகள், வேட்டிகள் வாங்கி ஏழை மக்களுக்கு அளித்தோம். அப்படி வேலூரில் நடைபெற்ற நிகழ்வில் சிம்மமென கர்ஜித்தார். ஆட்சியாளர்களின் கொள்கைகளைச் சாடினார். 



2004 ம் ஆண்டுதான் முதன் முதலாக எங்கள் கோட்டத்திலிருந்து வெண்மணிக்குச் சென்றோம். அதனை வெறும் பயணமாக இல்லாமல் வெண்மணி தியாகிகள் குறித்த புரிதலை உருவாக்கும் ஒரு இயக்கமாக நடத்துங்கள் என்று எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் ஆலோசனை வழங்கியிருந்தார். அந்த அடிப்படையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த கூட்டத்தில் பேசிய தோழர் கே.ஆர்.எஸ் கீழத்தஞ்சை மாவட்டத்து ஆண்டைகளின் அராஜகம் குறித்தும் அதனை செங்கொடி இயக்கம் எப்படி எதிர் கொண்டது என்பதையும் உணர்ச்சி பொங்க விவரித்தார். பழைய நினைவுகள் அவரை அன்று கொந்தளிக்க வைத்தது. தீப்பிழம்பாகவே அவரது உரை அன்று அமைந்திருந்தது.

எங்கள் சங்கத்தில் அவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்வு அதுவே. அவரது இறுதி ஊர்வலம் வேலூர் நகரம் அது வரை காணாத மிகப் பெரிய மக்கள் திரளோடு நடைபெற்றது. அப்போதைய மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன். திமுக அமைச்சர் திரு துரை முருகன் உள்பட அனைத்துக் கட்சித்தலைவர்களும் பங்கேற்றனர். துரைமுருகன் சிரிக்கப் பேசி கேட்டிருக்கிறேன். அவர்  அன்று கதறி அழுதார்.

இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னது ஒரு விஷயத்தைத்தான்.

நேர்மையான அரசியலின் அடையாளம், தியாகத்தின் உருவம், வேலூர் மாவட்டத்தின் மகத்தான தலைவர் தோழர் கே.ஆர்.சுந்தரம்.

அவர் மறந்து விட்டார். ஆனால் அவரது புகழ் மறையாது. வேலூர் மாவட்ட உழைப்பாளி மக்களின் மனதில் என்றென்றும் இருப்பார். ஆம் தன் வாழ்நாளை அவர்களுக்காகத்தானே அர்ப்பணித்திருந்தார்.

3 comments:

  1. இந்த எளிய 'மணித''நேயமிக்க மணிதரை பற்றி இதுவரை யாரும் ரைக்க வில்லையே நிச்சயமாய் இது புளுகர்களின் உலகம்தான்.

    ReplyDelete
  2. //ஆட்டோவில் வாருங்கள் என்று வலியுறுத்தினாலும் யாராவது ஒரு தோழரை இரு சக்கர வாகனத்தில் அனுப்புங்கள். பின்னே உட்கார்ந்து வந்து விடுகிறேன் என்று வந்து விடுவார்.//
    எப்படிபட்ட ஒரு நேர்மையாளர் மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் இருந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete