Thursday, May 18, 2017

அவர்களுக்கும் சேர்த்துத்தான் . . . .





போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. கருங்காலிகள் துணை கொண்டு, அனுபவமற்ற சிலரைக் கொண்டு பேருந்துகளை ஓட்ட அரசு செய்த முயற்சி வெற்றி பெறவில்லை. வேறு வழியில்லாமல் அரசு தனது ஆணவ நிலையிலிருந்து இறங்கி வந்து பேச்சு வார்த்தை, எழுத்துபூர்வமான உடன்பாடு மூலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒற்றுமையாக போராடிய போக்குவரத்து ஊழியர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து விலகி நின்றவர்களுக்கும் சேர்த்தே பலன் கிடைக்கவுள்ளது. அந்த பலனை பெறுவதற்கு முந்திக் கொண்டு செல்பவர்களும் அவர்களுமாகத்தான் இருப்பார்கள்.

போக்குவரத்து ஊழியர்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. தொழிற்சங்க இயக்கத்தில் உள்ள அனைவருக்குமே இந்த அனுபவம் இருக்கும். போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள்தான் போராட்டத்தின் பயனை முதலில் அடைய துடிப்பார்கள். எந்த வித குற்ற உணர்ச்சியோ, வெட்கம், ரோஷம் போன்ற உணர்வுகளும் கூட அந்த பயனை அடைவதில் காண்பிக்கும் வேகத்தில் காணாமல் போயிருக்கும்.

போராடும் அமைப்பிற்குள்ளேயே கூட சிலருக்கு போராட்டங்களை விட அதி முக்கியமான, தலை போகிற வேலைகள் வந்து, கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற இயக்கங்களில் கூட பங்கேற்காமல் பறந்து சென்று தங்களின் வர்க்கக் கடமையை நிறைவேற்றி விடுவார்கள்.

நுகர்வுக் கலாச்சாரம் பெருகியுள்ள இன்றைய சூழலில் போராட்டங்களை, இயக்கங்களை நடத்த ஒவ்வொரு தொழிற்சங்க அமைப்பும் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. போராட்டங்களிலிருந்து விலகி நிற்பவர்களுக்கும் சேர்த்து கூடுதல் சுமையை போராடுபவர்களே சுமக்கிறார்கள்.

கூடுதல் சுமை சுமப்பவர்களின் வலியை ஒதுங்கி நிற்பவர்கள் புரிந்து கொண்டிருந்தால் மூன்று நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் ஒரே நாளில் கூட முடிந்திருக்கலாம்.

இதுதான் யதார்த்தம். இந்த நிலைமையில் எஸ்மா, டெஸ்மா என்று நீதிபதிகள் வேறு வெறுப்பேத்துகிறார்கள். அதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

பின் குறிப்பு: வேலை நிறுத்த வெற்றிக்கு பொருத்தமான ஓவியத்தைத் தீட்டிய தோழர் ஸ்ரீரசா அவர்களுக்கு நன்றி

No comments:

Post a Comment