Tuesday, May 2, 2017

நீதிபதி கர்ணன் மீதான “இந்த” நடவடிக்கை . . . .





கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் சி.எஸ்.கர்ணன் அவர்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்குமான மோதல் என்பது மோசமான நிலையை அடைந்துள்ளது.

அவருக்கு மன நலன் பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு போடுவதும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மன நலன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இவர் உத்தரவு போடுவதும் ஏற்கக் கூடியதாக தோன்றவில்லை.

நீதியரசர் கர்ணனின் நடவடிக்கைகளுக்கு நான் வக்காலத்து வாங்கப் போவதில்லை. அவர் செய்வது எல்லாமே எடக்கு மடக்காகத்தான் உள்ளது.

பிரச்சினை எங்கே துவங்கியது?

சென்னை உயர்நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் நியமனம் சரியில்லை என்று ஒரு சர்ச்சை வருகிறது. அளிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாக ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிற போது அங்கே சென்ற கர்ணன், அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அப்போதிலிருந்து அவருக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் லடாயும் லாவணிக் கச்சேரியும் தொடங்கி விட்டது. அது இன்றைக்கு உச்ச கட்டத்திற்கு வந்து விட்டது.

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும் வேண்டப்பட்டவர்களுக்கே முன்னுரிமை என்பதும் சமூக நீதி இங்கே காற்றில் பறக்க விடப்படுகிறது என்பதும் உண்மை. நீதிபதி பதவியைத் துறந்து திரு கர்ணன், இந்த உரிமைக்குரலை எழுப்பி இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

எனக்கு உள்ளதெல்லாம் சில எளிய சந்தேகங்கள்.

திரு கர்ணன் அவர்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. அந்த வழக்கை நடத்தி முடித்து தீர்ப்பளிக்காமல் அதனை கால தாமதம் செய்வது ஏன்?

அவர் நீதிபதியாக தொடர அருகதை அற்றவர் என்று உச்ச நீதிமன்றம், அவரை பணி நீக்கம் (Impeachment) செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க மத்தியரசிற்கு பரிந்துரை செய்யலாமே?

அதை விடுத்து அவர் மன நலன் பாதிக்கப்பட்டவர் என்று நிருபிக்க விரும்புவது ஏன்?

அவர் பல நீதிபதிகள் மீது கொடுத்த ஊழல் புகார்களுக்கு ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ததா? மொட்டைக் கடிதாசுகள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜிலன்ஸ் கமிஷன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளபோது, ஒரு உயர்நீதி மன்ற நீதிபதி எழுத்துபூர்வமாக அளித்த புகாரை புறக்கணிப்பது ஏன்? அப்படி அது பொய்ப்புகார் என்றால் அதையாவது வெளிப்படுத்தலாமே?

திரு கர்ணன் அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மன நலன் பரிசோதனை என்பதெல்லாம் அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருப்பவரை, ஒரு மன நலன் பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்துவதெல்லாம் சரியல்ல.

ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்குவதை உச்ச நீதிமன்றம் தவிர்த்திட வேண்டும். அவர் மீதான நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்தின் படி அமையட்டும், காழ்ப்புணர்வின் அடிப்படையில் வேண்டாம்.

2 comments:

  1. அவர் ஒரு மாதத்தில் பதவி ஓய்வு பெற இருப்பதால் காலத்தைக் கடத்த இந்த யுக்தியை உச்ச நீதி மன்றம் பயன்படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  2. மறைமுகமாக அவருக்கு உதவ்வே இந்த முடிவு.

    ReplyDelete