Friday, October 30, 2015

ஐம்பதில் அடங்கிய நூறு




வலைப்பதிவர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசாக கொடுக்கப்பட்ட நூல் திரு ஈழ பாரதியின் ஹைக்கூ கவிதைத் தொகுப்பான “பனைமரக்காடு”

பதிவர் விழாவில் ஒவ்வொரு பதிவரும் அறிமுகம் செய்து கொண்டு மேடையில் இறங்கும் முன்பாக ஒரு இளைஞர் பொன் மயமான பரிசுத்தாள் சுற்றி அழகுற பேக் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை புன்னகைத்த முகத்தோடு கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போது புத்தகத்தில் உள்ள புகைப்படத்தை பார்க்கையில் அவர்தான் கவிஞர் ஈழ பாரதி என்பதை புரிந்து கொள்ள முடிந்திருந்தது.

ஐம்பது பக்கங்களில் பக்கத்திற்கு இரண்டு என்று நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த இவரது வலி பல கவிதைகளில் வெளிப்படுகிறது. ஈழம் பற்றி மட்டுமல்ல, சுற்றுச் சூழல் மீதான நேசம், குருவிகள் மீதான காதல், தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான கோபம், மூட நம்பிக்கைகளை சாடல், ஊழல் அரசியல்வாதிகள் மீதான எரிச்சல் என்று பல்வேறு உணர்வுகளை கவிதைகளாக வடித்துள்ளார்.

பதிவின் நீளம் கருதி இருபத்தி ஓரு கவிதைகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பத்து கவிதைகள் மட்டுமே பகிர்ந்து கொள்ள  நினைத்தேன். ஆனால் என்னதான் முயற்சி செய்தாலும் இந்த 21 கவிதைகளை தவிர்க்க முடியவில்லை. அவ்வளவு அழுத்தமாக உள்ளது.

வெடிகுண்டுச் சப்தம்
         உறக்கத்தில்
ஈழக்குழந்தைகள்.

    சாலைஓர மரம்
        சாமியானது
 சரியாமல் நின்றது.

ஓங்கி ஒலிக்கும்
தமிழனின் குரல்
செவிடாய் உலகம்..?

கதர் ஆடைக்குள்
      கரும்புள்ளி
   கறுப்புப் பணம்

தமிழனின் ரத்தம்
   சிங்கள அரசின்
 சிவப்புக் கம்பளம்

தலித்துக்கள் மிதிக்காமல்
        தீட்டாகிப் போனது
        கோயில் கருவறை

   யுத்தம் நிறுத்து
நித்தம் கலையுது
  குருவிகள் கூடு




தனியார் மயமாக்கல்
   மலிவு விலையில்
         அரசுப் பள்ளி

தூண்டிலுடன் மீனவன்
துப்பாக்கியுடன்
கடற்படை

தலித்துக்களுக்கு தடை
நடுவீடுவரை வரும்
நாய்கள்

கணக்கில் வராததால்
கடவுளுக்கும் பங்கு
உண்டியல் பணம்

பசிக்கு உணவில்லை
             படத்திற்கு
              படையல்

வெள்ளரிக் கொடியில் இரத்தம்
            வேடிக்கை பார்க்கும்
                           புத்தன்

முள்வேலிக்குள்  ஈழம்
          முகமுடிக்குள்
               தமிழகம்

தேன் எடுக்க மறுக்கும்
     வண்ணத்துப் பூச்சி
பூவிலும் பூச்சிக்கொல்லி

பேசத்துடிக்கும் மகன்
மறுக்கும் அப்பா
கீழத்தெரு பெண்

பட்டாசு வெடிக்க மனமில்லை
                        வாசலில்
                   குருவிக் கூடு

பாலுக்கு ஏங்கும் குழந்தை
படத்துக்கு
பால் அபிஷேகம்

டவர் வளர்த்தோம்
பிறந்தது செல்
இறந்தது குருவி

பாசமாய் வளர்த்த மகள்
சாதியைக் காப்பாற்ற
கௌரவக்கொலை

ஒரே தண்ணீரில்தான்
கழுவுகின்றார்கள்
இரட்டைக் குவளைகளை

நிச்சயம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

அழகான அட்டைப்படம், ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமானதோர் படம்  என்று மிகவும் அழகியல் உணர்வோடு நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நண்பர் ஈழ பாரதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

சமீப காலத்தில் நான் படித்த மிகச் சிறந்த புத்தகம், உணர்வுகளை மிகவும் அதிர வைத்த, தீ பரவும் வேகத்தோடு நகரும், உண்மையை உள்ளபடியே சொன்ன ஒரு புத்தகம் ஒன்று உண்டு, ஓரிரு நாட்களுக்குள் அந்த நூல் பற்றி

9 comments:

  1. //பாலுக்கு ஏங்கும் குழந்தை
    படத்துக்கு
    பால் அபிஷேகம்///
    இவ்வரிகள் ஒன்றே போதும்
    நூலின் வல்லமையை பறைசாற்ற
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ஈர்த்த வரிகள்

      Delete
  2. அப்துல் ரகுமானை அப்படியே உள்வாங்கி இருக்கிறார் ஹைக்கூ கவிஞர்
    ஒவ்வொரு ஹைக்கூவும் பல வலிகளை சுமந்துக்கொண்டு வந்திருக்கிறது ஒரு அகதியாய்,,,

    ReplyDelete
    Replies
    1. வலிகளை சுமந்த வரிகள், நமது இதயத்திற்கும் கடத்தி விட்டார்

      Delete
  3. வணக்கம் சார்.புத்தகம் கொடுத்தவர் கவிஞர் வைகறை.ஈழபாரதி அயல்நாட்டில் இருந்ததால் வர இயலவில்லை.நன்றி

    ReplyDelete
  4. புத்தகம் கொடுத்தவருக்கு தாடி இருந்ததால் அப்படி புரிந்து கொண்டேன். தவறினை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  5. அடடா நல்ல புத்தகத்தை மிஸ் செய்துவிட்டேனே! கவிதைகள் அனைத்தும் சிறப்பு! அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  6. நன்றி.,என் அன்பு நண்பர்களே
    ஒரு ஊழியனின் குரலாய் ஒலித்திருக்கிறது சமீப காலத்தில் நீங்கள் படித்த மிகச்சிறந்த புத்தகம் என்பதைவிட மிகச்சரியான விமர்சனத்தை முன்வைத்து இருக்கின்றீர்கள்,.மிக்க நன்றி தோழர்களே..
    நன்றி வைகறை,கீதா அவர்களே
    ஈழபாரதி (இலங்கை)

    ReplyDelete
  7. நன்றி அன்புத் தோழர்களே..
    நாங்கள் படித்த மிகச்சிறந்த புத்ததம்,என்பதைவிட. மிகச் சிறந்த விமர்சனத்தை முன்வைத்து இருக்கின்றீர்கள்
    எனது பணிவான பாராட்டுகளும்,நன்றிகளும் .உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் திசையெங்கும்.
    நன்றி..திரு.இராமன்,.வைகறை,கீதா அவர்களே.
    ஈழபாரதி (இலங்கை)

    ReplyDelete