Friday, October 30, 2015

அவர் முந்திக் கொண்டார்



வழக்கமாக பதிவுகளுக்கு பின் குறிப்பு தேவைப்படும். ஆனால் இன்று எனக்கு முன்னுரை தேவைப்படுகிறது.

ஏனென்றால்

இன்று காலை இணையத்துக்குள் நுழைந்ததும் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. நண்பர் திரு கரந்தை ஜெயகுமார் அவர்கள், எங்கள் வேலூர் கோட்டச் சங்க வரலாறு குறித்து நான் தொகுத்திருந்த நூலை அவரது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவ்வளவு அன்பிற்கும் அவரது புகழுரைக்கும் நான் தகுதியானவன் இல்லை என்பதால் கொஞ்சம் கூச்சமாகவே இருக்கிறது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் மாபெரும் அமைப்பின் சாதாரண ஊழியன் மட்டுமே. பல்வேறு மகத்தான தலைவர்களின் தியாகத்தால் இன்று நாங்கள் வளமாகவும் வலிமையாகவும் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. 



இதில் என்ன ஒற்றுமை என்றால் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போதுதான்  அவரது “வித்தகர்கள்” நூலைப் பற்றி பதிவு செய்வதற்காக எழுதியிருந்தேன். ஆனால் அலுவலகத்திலிருந்து புறப்படும் போது பென் ட்ரைவை எடுத்துக் கொள்ள மறந்து விட்டேன். அதனால் நேற்று அதனை பதிவு செய்ய முடியவில்லை. அதனால் இன்று பதிவு செய்கிறேன். எனது மறதியால் அவர் முந்திக் கொண்டார்.

அதனால் பதிவின் தலைப்பும் மாறி விட்டது.

இப்போது ஒரிஜினலாய் எழுதிய பதிவிற்குச் செல்வோம்.

அன்பின் அடையாளமாய் கிடைத்த ஐவர் பற்றி


மழை நின்றும் தூறல் நிற்கவில்லை என்பது போல வலைப்பதிவர் விழா பற்றிய பதிவுகளை நான் நிறைவு செய்து விட்டாலும் அதன் தொடர்ச்சியாய் வலைப்பதிவர் விழாவில் கிடைத்த இரண்டு நூல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

புதுகை வலைப்பதிவர் விழாவில் புத்தக் கண்காட்சி இருந்த போதும் நான் எந்த புத்தகமும் வாங்கவில்லை. படிக்க வேண்டிய புத்தகங்களின் வரிசை மிரட்டிய காரணத்தால் அந்த பட்டியலில் கூடுதலாக எதையும் இணைக்க வேண்டாம் என்பதாலும் புத்தகங்களை எங்கே வைப்பது என்ற இடப் பிரச்சினையாலும் கட்டுப்பாடாக இருந்து விட்டேன்.

ஆனாலும் என்னைத் தேடி புத்தகங்கள் வந்து சேர்ந்தது.

புதுகை வலைப்பதிவர் விழாவில் நண்பர் கரந்தை ஜெயகுமார் வெளியிட்ட “வித்தகர்கள்” நூலை தனது அன்புப்பரிசாக எனக்கு அளித்தார். விழா முடிந்து என் சகோதரி வீட்டிற்கு வந்து வேலூர் புறப்படும் முன்பே அந்த நூலை படித்து முடித்து விட்டேன். ஐந்து முக்கிய மனிதர்கள் பற்றிய அறிமுகம் அந்த நூல்.

திருக்குறளும் தமிழுமே தன் வாழ்வாய் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு புலவர் இரா.இளங்குமரனார் நம்மை அதிசயிக்க வைக்கிறார். திருக்குறளுக்கு கோயில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை தமிழ் வழியில் நடத்தியது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் கொண்ட பாவாணர் நூலகம் என அனைத்து தகவல்களும் புலவர் அவர்களை ஒரு சிறப்பான மனிதராக சித்தரிக்கிறது.

“இடப் பிரச்சினை காரணமாக புத்தகங்கள் வாங்கவில்லையா? இங்கே பார் ஒரு புத்தகக் காதலரை!” என்று என்னை இடித்துரைத்தது புதுக்கோட்டை திரு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய கட்டுரை. வாழ்வும் சுவாசமும் புத்தகங்கள் மட்டுமே என்று வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி படிக்க பிரமிப்பாக இருந்தது. அது மட்டுமல்ல அவரது மனைவி திருமதி டோரதி அவர்களும் ஒரு புத்தகக் காதல் என்பதும் அவர்களை வாழ்வில் ஒன்றிணைத்ததும் புத்தகங்களே என்ற தகவலும் சுவாரஸ்யமானது.

ஐவரில் ஒருவர் திரு கர்னல் கணேசனை பதிவர் விழாவிற்கு வந்தவர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். தென் துருவமான ஆர்டிக் பிரதேசத்தில் இந்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட தட்சின் கங்கோத்ரி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்து பெருமை சேர்த்த தமிழரைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் வெண்மணி பயணம் மேற்கொள்கிறபோது அவரது ஊரான சன்னாநல்லூர் வழியாகத்தான் செல்வோம். ஆனால் அங்கே ஆர்டிக் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பழமையான பாறை கொண்டு அமைக்கப்பட்ட பூங்கா உள்ளது என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். இந்த வருடம் வெண்மணி அஞ்சலி முடிந்து திரும்பி வரும் வழியில் சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா பார்த்து வர உத்தேசித்துள்ளேன். எனக்கும் மற்ற தோழர்களும் நல்லதொரு அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பிறப்பில் ஏற்பட்ட குறைபாட்டை தன் முயற்சியால் வெற்றி கொண்ட இளைஞர் வெற்றிவேல் முருகன் பற்றி முதல் முறையாக இந்த நூல் மூலம்தான் கேள்விப்படுகிறேன். பார்வைத் திறன் இல்லாத குறைபாட்டை தனது கடினமான உழைப்பின் மூலம் சந்தித்து அமெரிக்காவில் டாக்டரேட் பெற்ற இவர் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். அவர்கள் பயன்படுத்தும் பல உத்திகள் பற்றியும் நண்பர் ஜெயகுமார் விரிவாக எழுதியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக மற்ற மாநிலங்கள் செய்யும் உதவிகளில் சிறுபகுதி கூட தமிழக அரசு செய்வதில்லை என்ற ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடித் தாக்குதல் நடத்துகிற அரசல்லவா இது? அது மட்டுமா விழியிழந்தோர் ஒரு போராட்டம் நடத்துகையில் அவர்கள் மீது தடியடி நடத்தியது மட்டுமன்றி கைது செய்து ஒரு முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் அத்துவானக்காட்டில் இறக்கி விட்டு தவிக்கவிட்ட மனிதாபிமானிகள்தானே நமது காவல்துறை!

வழக்கறிஞர் சிங்காரவேலன் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அவருடைய எளிமையான குணங்கள் பற்றி இந்த நூலின் மூலம்தான் அறிய முடிந்தது. எல்.ஐ.சி யில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப் பட்டவர்களின் வழக்கு பற்றி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி கூடுதல் விபரம் சொல்ல வேண்டும்.

நிரந்தரப் பணி நியமனம் செய்யாமல் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு காலம் தள்ளும் போக்கு எல்.ஐ.சி நிறுவனத்தில் நிலவிய போது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தேசிய தொழிலாளர் தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது. அதன்படி 20.05.1985 வரை தற்காலிகமாக பணி செய்தவர்களுக்கு நிரந்தரப் பணி கிடைத்தது. மூன்றாம் பிரிவு பணிகளில் எண்பத்தி ஐந்து நாட்களும் நான்காம் பிரிவு பணிகளில் எழுபது நாட்களும் பணி புரிந்தவர்களுக்கு வேலை கிடைத்தது. நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக எண்பத்தி ஐந்து நாட்களிலும் எழுபது நாட்களிலும் ஊழியர்களை மாற்றிக் கொண்டே இருந்ததால் தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. நிரந்த பணி நியமனம் செய்ய முடியாமைக்கு பல நீதிமன்ற வழக்குகளும் கூட ஒரு காரணம். ஆனால் நிர்வாகத்தின் மெத்தனத்திற்கு அவர்கள் விலை கொடுக்க வேண்டியிருந்தது.

20.05.1985 க்குப் பிறகு பணியாற்றியவர்களுக்காக மத்தியரசு தொழிலாளர் தீர்ப்பாணையத்தில் இன்னொரு வழக்கு தொடுக்கப்பட்டு அதுவும் தற்காலிக ஊழியர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பாணையத் தீர்ப்பை ரத்து செய்து விட்டது. இப்போது உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மத்தியரசு தொழிலாளர் தீர்ப்பாணையம் அளித்த உத்தரவு செல்லும் என்று சொல்லி விட்டது. 20.05.1985 முதல் 04.03.1991 வரை தற்காலிகமாக பணியாற்றியவர்களிடம் இருந்து நிர்வாகம் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. ஆக சமீபத்திய உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு அடிப்படையான  தேசிய தொழிலாளர் தீர்ப்பாணைய, மத்தியரசு தொழிலாளர் தீர்ப்பாணைய உத்தரவுக்களை பெற்றுக் கொடுத்தது எங்கள் சங்கம் என்பதில் எனக்கு ஒரு பெருமை. அதே போல நான்காம் பிரிவு பணிகளில் தினக்கூலி ஊழியர்களாக ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஐயாயிரம் பேருக்கு உச்ச நீதி மன்ற வழக்கு மூலம் நிரந்தரப் பணி வாங்கிக் கொடுத்த பெருமையும் எங்கள் சங்கத்திற்கு உண்டு. 2012 ம் ஆண்டு சார்பணியாளராக சேர்ந்த அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது பதிவு எழுத்தராக பதவி உயர்வும் பெற்று விட்டார்கள்.

இவை அத்தனையும் ஃப்ளாஷ் பேக் மூலமாக ஒரு நிமிடத்தில் நினைவிற்கு வந்ததால் உங்களோடும் அவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

புத்தகத்தின் அட்டை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் அவசியம் சொல்ல வேண்டும்.


அருமையான இந்த புத்தகத்தை அளித்த நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களுக்கு அன்பும் நன்றியும். நூல் வெளியீட்டு விழாவில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டது சிறப்பு.

வலைப்பதிவர் விழாவில் கிடைத்த இன்னொரு அன்புப்பரிசு பற்றி நாளை.

7 comments:

  1. நண்பர்களை அறிமுகப்படுத்துவதில் முன்னுக்கு நிற்பவர் திரு கரந்தை ஜெயக்குமார். அவர் தங்களுடைய நூலைப் பற்றி எழுதிய பதிவினைக் கண்டேன். அவரது நூலைப் பற்றி நான் எழுத நினைத்திருந்த நிலையில் தங்களது விமர்ச்னத்தைக் கண்டேன். மிக அருமை. பாராட்டுக்கள் உங்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  2. தற்செயலாக பதிவுகளில் நிகழ்ந்த ஒற்றுமை வியப்பாகத்தான் இருக்கிறது நண்பரே.
    எனது பதிவு கண்டு தாங்கள் கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை நண்பரே,
    இன்னும் முயன்று செய்திகளை முழுமையாய் சேர்க்காமல் விட்டுவிட்டோமா?
    தோழரின் முயற்சிகளை, செயற்பாடுகளை, போராட்டங்களை இன்னும் சற்று விரிவாய்
    கூறியிருக்கலாமோ என்ற எண்ணம்தான் என்னுள் ஓடுகிறது.
    பொது நலம் என்னும் பெயரில்,
    தன்னலத்திற்காகவே வாழும் மனிதர்கள் நிரம்பி வழியும் பூமியில்,
    தங்களைப் போல் தன்னலம் துறந்து, பொதுநலம் நாடி பணியாற்றுவோர்
    எவ்வளவு பேர் இருப்பார்கள்
    அவ்வளவு பேரையும் போற்றியே ஆக வேண்டும் அல்லவா
    வாயார வாழ்த்தி மகிழ வேண்டும் அல்லவா
    தங்களைப் பற்றி எழுத எனக்குக் கிடைத்த வாய்ப்பினை எண்ணி
    மனம் மகிழ்கின்றேன் நண்பரே

    ReplyDelete
  3. பாராட்டுவதில் ஒருவரை ஒருவர் முந்திக்கொள்வது ஆரோக்கியமான முந்துதல்தான். வளைவில் தான் முந்தக்கூடாது வலை(தளத்தில்)யில் முந்தலாமே.

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  4. என்ன நடக்கிறது இங்கே....நாமெல்லாம் பிசிராந்தையார் காலத்துக்குப்போய்விட்டோமா?போட்டிபோட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் மனதார வாழ்த்திக்கொள்ளும் போது வரும் ஒரு பரவசஉணர்வை ...எங்களுக்கும் கடத்தும் மாயம்...இருவருக்கும் கைவந்திருக்கிறது...தொடரட்டும்.....மீண்டுமொருமுறை நாம் அனைவரும் சந்திக்க ஆவலைத்தூண்டுகிறது...இந்த முறை...பேசுவதற்காக மட்டுமே...யாரேனும் முடிவெடுங்களேன்...

    ReplyDelete
  5. எனக்கும் கரந்தையாரின் அன்பு பரிசு கிடைத்தது. தொடர் வேலை, வெளியூர் பயணம் என்றிருப்பதால் வலைப்பதிவர் சந்திப்பு பற்றியே இன்னும் எழுதவில்லை. அதை முடித்துவிட்டுதான். வித்தகரைப் பற்றி எழுதவேண்டும் என்றிருக்கிறேன். தங்களின் நூலை அருமையாக மதிப்புரை செய்திருக்கிறார். அதன்மூலம் காப்பீடு பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி!

    ReplyDelete
  6. என்ன நடக்கிறது இங்கே....நாமெல்லாம் பிசிராந்தையார் காலத்துக்குப்போய்விட்டோமா?போட்டிபோட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் மனதார வாழ்த்திக்கொள்ளும் போது வரும் ஒரு பரவசஉணர்வை ...எங்களுக்கும் கடத்தும் மாயம்...இருவருக்கும் கைவந்திருக்கிறது...தொடரட்டும்.....மீண்டுமொருமுறை நாம் அனைவரும் சந்திக்க ஆவலைத்தூண்டுகிறது...இந்த முறை...பேசுவதற்காக மட்டுமே...யாரேனும் முடிவெடுங்களேன்...

    ReplyDelete
  7. இருவருக்குமே பாரட்டுக்கள்.

    ReplyDelete