குஜராத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மோடி அரசு சிலை
தயாரித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இரும்பால் செய்யப்படும் இந்த சிலையை
தயாரிப்பதற்கான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. எல்&டி நிறுவனம், சிலைக்கான இரும்பு வார்ப்புக்களை தயாரிக்கும் பணியையும் அதனை
பொருத்துவதற்கான கான்கிரிட் கட்டமைப்பை உருவாக்கும் பணியையும் ஒரு சீன நிறுவனத்திற்கு சப் கான்ட்ராக்ட் விட்டுள்ளது.
மோடியின் கனவுத் திட்டத்திற்கு சீன நிறுவனத்தை பயன்படுத்துவதில் ஒன்றும்
கேள்வியில்லை.
ஆனால் சீன நிறுவனங்கள் குறித்து வேறு சில பிரச்சினைகளில் இந்த அரசு என்ன
நிலை எடுத்துள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சி இன்று மத்தியரசால்
முடக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கான உபகரணங்கள்
வாங்குவதறான டெண்டர் விடப்பட்டப்போது அதிலே தகுதி பெற்ற சீன நிறுவனங்களிடமிருந்து
உபகரணங்களை வாங்கக் கூடாது என்று முன்பு மன்மோகன்சிங் அரசும் இப்போது மோடி அரசும்
அந்த டெண்டர்களை ரத்து செய்து விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த சீன
நிறுவனத்திடம் உபகரணங்களை வாங்கக்கூடாது என்று மோடி அரசு தடுக்கிறதோ, அதே
நிறுவனத்திடமிருந்துதான் இந்தியாவில் செயல்படும் அனைத்து தனியார் தொலைபேசி
நிறுவனங்களும் உபகரணங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.
அதே போல கேரளாவில் உள்ள விழிஞத்தில் துறைமுகம் கட்டுவதற்கான பணிக்கு
டெண்டர் விட்ட போது ஒரு சீன நிறுவனம்தான் முதலிடத்தில் வந்தது. ஆனால் சீன
நிறுவனத்துக்கு டெண்டர் வழங்க அன்றைய மத்தியரசு மறுத்து விட்டது. கேரள மாநில பாஜக
வும் சீனாக்காரனை உள்ளே விடாதே என்று அப்போது பிரச்சினை செய்தது. மோடி அரசு வந்த
பின்பு இப்போது அத்துறைமுக ஒப்பந்தத்தை மோடியின் நண்பரான அதானி குழுமத்திற்கு
கொடுத்து விட்டார்கள் என்பதும் அதானிக்கு ஒப்பந்தம் தரவில்லை என்றால் விழிஞம்
துறைமுகத் திட்டத்தையே ரத்து செய்து விட்டு தமிழகத்தில் குளச்சலுக்கு மாற்றி
விடுவோம் என்று உம்மன் சாண்டியை மோடியின் அமைச்சர் நிதின் கட்காரி மிரட்டி பணிய
வைத்தது சமீபத்திய சம்பவம்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு உபகரணங்கள் வாங்குவதென்றால் சீன நிறுவனங்கள்
கூடாது. விழிஞம் துறைமுகத்தை கட்ட சீன நிறுவனம் கூடாது. ஆனால் படேல் சிலையை
உருவாக்க மட்டும் சீன நிறுவனம் வேண்டுமா?
இது என்ன பேத்துமாத்து வேலை?
பொதுத்துறை நிறுவனத்தின் விரிவாக்கத்தை முடக்க சீன எதிர்ப்பு நிலையை
எடுக்கிற மோடி அரசு, அரசு நிதியை ஊதாரித்தனமாக செலவழிக்கும் ஒரு திட்டத்திற்கு சீன
நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்கிறது.
மோடி அரசாங்கத்தின் இரட்டை நிலைக்கு இது ஒரு நல்ல உதாரணம்.
No comments:
Post a Comment