Thursday, November 6, 2014

ஆனாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு எதிராக ஊடகங்கள் நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்திற்கு பதில் சொல்லி கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர்
டி.கே.ரங்கராஜன் எழுதியுள்ள விரிவான கட்டுரையை பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் ஊடகங்கள் தங்கள் திருப்பணியை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதற்கான காரணமும் கட்டுரையின் இறுதிப் பத்திகளில் உள்ளது. வாழ்க ஊடக அறம். வெல்க ஊடக முதலாளிகள்.



அவதூறுகளால் அசைக்க முடியாத பேரியக்கம் 
தோழர் டி.கே.ரங்கராஜன்






மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகள் முழு வீச்சுடன் துவங்கி நடந்துவருகின்றன. நாடு முழுவதும் கிளை மாநாடு கள் முடிந்து வட்ட, ஒன்றிய மாநாடுகள் நடந்து வருகின்றன. மாவட்ட, மாநில மாநாடுகள் 2015ம்ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடை யும். இந்த மாநாடுகளில் கடந்த மூன்றாண்டுகளில் நடந்துள்ள பணிகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், கட்சிஅமைப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப் படுகின்றன. இந்த மாநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகள், பெற்ற அனுபவங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வழிகாட்டுவதாக அமையும்.கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்தஆண்டு ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
அதற்கான தயாரிப்புப் பணிகளும் நடந்து வருகின்றன. மற்ற கட்சி மாநாடுகளில் தலைவரின் அனுமதியுடன் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தலைவரின் ‘எழுச்சியுரை’ என்ற அளவோடு முடிந்துவிடும். குறிப்பிட்ட காலவரையறையில் மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அவசியமும் அந்தக்கட்சிகளுக்கு இல்லை. எப்போதாவது நடத்தப்படும் மாநாடுகளும் தலைவரையே சுற்றிவரும். அந்தக்கட்சிகளைப் பொறுத்தவரை தலைவர்தான் கடவுள். அவரது வார்த்தைகள்தான் வேதம்.

கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தக்கட்சிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. கட்சியின்கொள்கைகள் மற்றும் திசைவழியை தீர்மானிப்பது கட்சியின் தலைவரோ பொதுச் செயலாளரோ அல்ல.
கிளை துவங்கி அகில இந்திய அமைப்புவரை முழுக்க முழுக்க உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். கட்சியின் அகிலஇந்திய மாநாடுதான் கொள்கை முடிவுகளைஎடுக்கக்கூடிய அதிகபட்ச அதிகாரம் கொண்டது. அந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் மத்தியக்குழுதான் அந்தக்கொள்கைகளை அரசியல் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்டது. மாநிலங்களிலும் அப்படியே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வதுமாநாட்டிற்கான அறிக்கைகளை ஆவணங் களை உருவாக்கிட அக்டோபர் மாதம் 26-29தேதிகளில் தில்லியில் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய அரசியல் அறிக்கை மற்றும் அரசியல் ஸ்தாபன அறிக்கை குறித்து இந்தக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட் டது. மேலும் கடந்த ஆண்டுகளில் கட்சி எடுத்தஅரசியல், ஸ்தாபன நடைமுறை உத்திகள்குறித்து விவாதித்து அகில இந்திய மாநாட்டில் ஒரு அறிக்கையை முன் வைத்து இறுதி செய்வது என்று ஏற்கெனவே எடுக்கப்பட்டமுடிவின் அடிப்படையில் அதற்கான விவாதமும் நடைபெற்றது. 


இந்த மத்தியக்குழு கூட்டம் குறித்து சில ஆங்கில பத்திரிகைகள் அவதூறான செய்திகளை அள்ளித்தெளித்து வருகின்றன. தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு மனம்போன போக்கில் எழுதி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிதல்ல. மக்கள் நலன் ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு, பாட்டாளி வர்க்க புரட்சிக்காக படை நடத்தி வரும் இந்த இயக்கத்தை அழித்துவிட கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் நடந்துள்ளன. அதையெல்லாம் முறியடித்துத்தான் இந்த இயக்கம் வீறு நடை போட்டு வந்துள்ளது.ஊடகங்களால் பெரிதாக ஊதப்படும் அந்த மத்தியக்குழு கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழுவின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், ஒரு அறிக்கையை முன்வைத்தார்.
சில விஷயங்களில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் சீத்தாராம் யெச்சூரியும், தோழர் பி.வி.ராகவலுவும் மத்தியக்குழு முன்பு வைத்தனர். இது குறித்துத்தான் சில ஊடகங்கள் தங்களது நோக்கத்திற்கு கும்மியடிக்கின்றன. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இது ஒன்றும் புதிய நடைமுறையல்ல. காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்றுதான். உட்கட்சி ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சிக்கூட்டங்க ளில் தங்களது கருத்தை முன்வைக்க யாருக்கும் உரிமை உண்டு. அதுகுறித்து விரிவான விவாதம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். உட்கட்சி ஜனநாயகத்தில் இது ஒரு அம்சம். ஆனால் பல ஆங்கில பத்திரிகைகள்இந்தக்கூட்டம் குறித்து கொச்சையாக வும், விபரம் புரியாமலும், அரைவேக்காட்டுத் தனமாகவும் விமர்சனம் செய்து வருகின்றன. ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்க முயற்சிக்கின்றன.
கட்சியின் முடிவுகள் குறித்து யாருமே விமர்சிக்கக்கூடாது என்று கருதுகிற கட்சியல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி. விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும், அறிவுப் பூர்வமானதாகவும் இருந்தால் எங்கிருந்து வந்தாலும் அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் கட்சிக்கு உண்டு. 

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜனநாயகமேஇல்லை என்று சில ஊடகங்கள் கூப்பாடு போடும். விவாதம் நடந்தது குறித்த செய்திகள் வெளிவந்தால் கோஷ்டிப்பூசல் என்றுஎழுதுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும்ஜனநாயகம் என்பது முதிர்ச்சியானஒன்று.
இந்த நடைமுறையைத்தான் ஸ்டாலின்காலத்து அணுகுமுறை என்று சில ஆங்கிலப் பத்திரிகைகள் கூசாமல் எழுதுகின்றன. தில்லியில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். விருப்புவெறுப்பு இல்லாமல் கடந்த கால அனுபவத் தின் அடிப்படையில் கட்சியின் எதிர்கால திசைவழி எவ்வாறு அமைய வேண்டும் என்பதைமட்டுமே கருத்தில் கொண்டு முன்வைக்கப் பட்ட விவாதங்கள் அவை. இந்த விவாதங்களை தொகுத்து வேண்டிய மாற்றங்களைச் செய்து கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான ஆவணம் இறுதி செய்யப்படும். அதே நேரத்தில் அதுவே முடிவானது அல்ல.
இந்த அறிக்கைகள் கட்சியின் கிளை துவங்கி அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப் படும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் திருத்தங்களை முன்மொழியலாம். அகில இந்திய மாநாட்டிலும் அறிக்கை மீது விவாதம் நடைபெற்று, தேவையானால் வாக்கெடுப்பும் நடத்தி அதன் பிறகுதான் ஆவணம் முழுமை பெறும். அதன் பிறகு அந்த வழிகாட்டு ஆவணம் கட்சியின் சொத்தாகக் கருதப்படும். அடுத்துவரும் காலங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அது தொடரும். இந்த அறிக்கைகள் கட்சி மட்டத்தில் மட்டுமின்றி இணையதளத்திலும் வெளியிடப்படும். இதன் மீது யார் வேண்டுமானாலும் திருத்தங்களை முன்மொழியலாம். இத்தகைய விரிவடைந்த, வலுவான ஜனநாயகம் வேறு எந்த முதலாளித்துவக் கட்சியிலாவது பின்பற்றப்படு கிறதா என்பதற்கு இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் தங்களது மனச்சாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும். இவர்கள் ஆதாரமின்றி அவதூறுகளை மட்டுமே எழுதும்போது மகாகவி பாரதி சொன்ன, ‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி!’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

இந்தியாவில் இயங்கும் பல்வேறு கட்சிகள் தங்களிடம் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அவ்வப்போது கூறுவ துண்டு. ஒவ்வொரு கட்சியும் கூறும் எண்ணிக் கையை எண்ணிப்பார்த்தால் அது உலக மக்கள்தொகையைவிட கூடுதலாக இருக்கும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து சுய தணிக்கை செய்யும் கட்சி. அதில் பலவீனம்தென்பட்டால் அதைக் களைய ஆக்கப்பூர்வ மான முயற்சிகள் செய்யப்படும். கட்சியின் மத்தியக்குழுவில் முன்வைக்கப் பட்ட சில விவரங்களை தப்பும் தவறுமாக புரிந்துகொண்டு கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்துவிட்டது. விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன. 

பாட்டாளி வர்க்கப்புரட்சியை மையமாகக் கொண்ட கட்சி என்ற முறையில் தொழிலாளி வர்க்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் இந்தக்கட்சி வளரக்கூடாது என்று கார்ப்பரேட் ஊடகங்கள் நினைக்கின்றன. அர்த்தமற்ற முறையில் அவதூறு களை எழுதி இந்த இயக்கத்தை முடக்கிவிட முயல்கின்றன. ஆனால் அது வெற்றி பெறாது.1990களில் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின் தொடர்ச்சியாக வந்த காங்கிரஸ் மற்றும் பாஜககூட்டணி ஆட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமய பொருளாதாரக்கொள் கையால் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நலிவுற்ற பிரிவினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் என அனைத்துப்பகுதி மக்களும் புதிய சவால்களை சந்தித்து வருகின்றனர்.
முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஒருபுறத்தில் ஒரு சிலரின் கையில் சொத்துகள் குவிக்கின்றன. கோடீஸ்வரர்கள் மேலும் கொழுக்கின்றனர். மறுபுறத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் அவலம் நிறைந்ததாக மாற்றப்படுகிறது. இவ்வாறு இருவேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு நவீன தாராளமயமாக்கல் கொள்கையை தீவிரமாக பின்பற்றியதால் மக்களிடம் செல்வாக்கு இழந்து காங்கிரஸ் கட்சி காலாவதி ஆகிவிட்டது. எதிர்க்கட்சியாகக்கூட அந்தக்கட்சியால் வர முடியவில்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, திமுக போன்ற காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் தாராளமயமாக்கல் கொள்கையை வேகமாக செயல்படுத்த முதலாளிகளுக்கு புதிய ஏஜெண்டு தேவைப்பட்டார். 

அவ்வாறு அவர்களால் ஆதரிக்கப்பட்டவர் தான் நரேந்திர மோடி. பெரு முதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவோடு அவர் ஆட்சியமைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியை ஆதரித்து கடுமையாக பிரச்சாரம் செய்தனர். ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை நரேந்திர மோடிமுன்வைத்தாலும் அவர் பின்பற்றுவது கடைந்தெடுத்த வலதுசாரி பொருளாதாரமே ஆகும். அந்தக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இதை மடைமாற்றம் செய்ய- மக்களின் அதிருப்தியை திசை திருப்ப வகுப்பு வாத பழமைவாத தீயை விசிறிவிடுகின்றனர். உ.பி. மாநிலம் முசாபர் நகர் உட்பட நேரடியான மதக்கலவரங்களைத் தூண்டிவிடுவது மறுபுறத்தில் அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கடைந்தெடுத்த பழமைவாத சித்தாந்தத்தை புகுத்துவது என மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
இரட்டை அபாயத்தை நாடு சந்திக்க வேண்டியுள்ளது.நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் பொதுத்துறை பங்குகளை விற்பது, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளி லும் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, நிலங்களி லிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்ப்பது, தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்தி தொழிலாளர் உரிமைகளை பறிப்பது, கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை சீர்குலைப்பது, மானியங்களை வெட்டுவது பொது விநியோக முறையை சீரழிப்பது என முற்றிலும் மக்கள்விரோதப் பாதையில் மோடி அரசு நடைபோடு கிறது. பொருளாதாரக் கொள்கையை பொறுத்தவரை முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இப்போதைய பாஜக கூட்டணி அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக ஊழலும், லஞ்சமும் அதிகரித்துள்ளது. கருப்புப்பணத்தைவெளிக்கொணர்வது குறித்து ஏற்கெனவேஆட்சியிலிருந்த காங்கிரசும், இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவும் நடத்தும் விவாதங்களைப் பார்த்தால் இரு கட்சிகளுமே இந்த விஷயத்தில் ஒரே மாதிரி செயல்பட்டுவருவதை புரிந்துகொள்ள முடியும். ஊழல் புரிவதில் இரு கட்சிகளுக்கும், ஆட்சிகளுக்கும் வித்தியாசமில் லை. சாமர்த்தியமாக மறைத்தது யார்என்பது தான் அவர்களுக்குள் நடக்கும் விவாதம். 

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடம் 2 ரூபாய்க்கு வாங்கப் பட்டு சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கும் நிலைகூட உள்ளது. இதனால் இரு தரப்பும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் எழுதுவதே இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்வி மற்றும் மாநில நிலைமைகள், கடந்த காலத்தில் கட்சி பின்பற்றிய உத்திகள், அதில் ஏற்பட்ட அனுபவங்கள் என கட்சியின் மத்தியக்குழு அனைத்து அம்சங்களையும் விரிவாக விவாதித்தது. சில ஊடகங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்து அவதூறு செய்வதற்கு ஒரு நோக்கம் உள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக ஒரு உண்மையான மாற்றை முன்வைப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. எனவே கார்ப்பரேட் ஊடகங்கள் அந்த இயக்கத்தை இழிவு படுத்த முயல்கின்றன.கம்யூனிஸ்ட் இயக்கம் இத்தகைய அவதூறுகளை சந்திப்பது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. 

மாமேதை கார்ல் மார்க்ஸ் மீது அவதூறுகளை அள்ளித்தெளித்து அவர் ஒரு நாட்டில் நிரந்தரமாக இருக்க முடியாமல் விரட்டினார்கள். ஆனால் அவர் ஓய்ந்துவிடவில்லை, சோர்ந்துவிடவில்லை.மாமேதை லெனின் ரஷ்யாவில் நடந்த புரட்சிக்கு தலைமை தாங்கியதற்குக் காரணம்அவர் ஜெர்மனியின் தூண்டுதலின்பேரில் செயல்பட்டதுதான் என்று அன்றைக்குசிலர் எழுதினார்கள். ஐரோப்பாவில் சிலநாடுகளில் இப்போதும் அதை பாடமாக சொல்லித்தருகின்றன. பாசிசமும், மார்க்சியமும் ஒன்றுதான். இரண்டுமே சர்வாதிகாரம்தான் என்று கூட இவர்கள் வரலாற்று அறிவு கொஞ்சமும் இல்லாமல் எழுதுவார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சர்வாதிகாரிகள் பட்டியலில் சேர்ப்பார்கள். ஹிட்லரையும், பாசிசத்தை முறியடித்து உலகை பாதுகாத்த மாவீரர் ஜோசப் ஸ்டாலினையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்துவார்கள். 

 கார்ப்பரேட் ஊடகங்களுக்கு இத்தகைய அரைகுறை அறிவு ஜீவிகள் தற்போது மலிவான விலைக்குக் கிடைக்கிறார்கள். வாங்கிய கூலிக்கு விசுவாசமாக சிலர் கூவுகிறார்கள். சிலர் பெற்ற கூலிக்கு அதிகமாகவே கூவு கிறார்கள். கட்சியின் அகில இந்திய மாநாடு முடியும்வரை இவர்களுடைய கூச்சல் உச்ச ஸ்தாயில் இருக்கக்கூடும். ஆனால் ஒன்றை மட்டும்சொல்லிக்கொள்வோம். 

உங்கள் பேனா, உங்கள் காகிதம். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு எடுக்கப்போகும் முடிவுகள், வகுக்கப்போகும் வியூகங்கள் உங்களுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லும்.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல் யாண சுந்தரத்தின் பாட்டு இது.“உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும், பொறுமை ஒருநாள் புலியாகும்- அதற்கு பொய்யும், புரட்டும் பலியாகும்”- 


கட்டுரையாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்

நன்றி - தீக்கதிர் 05.11.2014

No comments:

Post a Comment