Wednesday, November 12, 2014

ஜோல்னா பையால் இப்படி ஒரு பிரச்சினையா?

 
வேலூர் காட்பாடியில் மில்லேனியம் ப்ளாஸா என்றொரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளது. எங்களது சங்கத்திற்கு பேனர்கள் தயாரிக்கும் நிறுவனம் அங்கே உள்ளது. அவர்களுக்கு பில் செட்டில் செய்ய வேண்டியிருந்தது. ஒரு எட்டு மணி அளவில் மழை கொஞ்சம் ஓய்ந்த நேரம் புறப்பட்டேன். வழக்கம் போல ஜோல்னா பையையும் மாட்டிக் கொண்டேன். 

அங்கே வேலை முடிந்து புறப்படும் நேரம் மீண்டும் மழை பிடித்துக் கொண்ட்தால் வாசலில் காத்திருந்தேன். அப்போது அறிமுகமான ஒருவர் அங்கே வந்தார். என்னை பார்த்தவுடனேயே “என்ன சார் சரக்கு வாங்க வந்தீங்களா? என்றுதான் கேட்டார். ஏனென்றால் அந்த காம்ப்ளெக்ஸில் உயர்தர, வெளிநாட்டு மது விற்கும் டாஸ்மாக் கடை ஒன்றும் உள்ளது. 

இல்லை சார், பேனருக்கு பணம் கொடுக்க வந்தேன் என்று சொன்னாலும் அவர் மீண்டும் “இல்லை சார், தோளில் பை மாட்டியிருக்கீங்களே என்றார் விடாமல். நான் கொஞ்சம் எரிச்சலாக “இந்த காம்ப்ளெக்சில் பேனர் நிறுவனம் உள்ளது, ரெடிமேட் கடை இருக்கு, சலூன் இருக்கு, செல்போன் கடை இருக்கு, குழந்தைகள் பொருள் விற்கும் கடை இருக்கு, லாட்ஜ் இருக்கு, மினி ஹால் இருக்கு. அங்க எல்லாம் யாரும் வர மாட்டாங்களா? எல்லாரும் சரக்கு வாங்கத்தான் வருவாங்களா?” என்று கேட்டேன்.

பனை மரத்துக்குக் கீழே பால் குடித்தாலும் கள் குடித்த்து போல் என்ற பழமொழி போல டாஸ்மாக் பக்கத்தில் உள்ள கடைக்கு பையோடு சென்றாலும் அது பாட்டில் வாங்கத்தான் போனதாக அர்த்தமாகும் போல என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவர் 

ஐய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார், எட்டரை மணியாச்சே, பை வேற வச்சுருக்கீங்களா, அதனாலதான் கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க என்று குழைந்தார். பிறகு அவருக்கு என் பையை திறந்து காண்பித்து “ பாத்துக்குங்க சார், வெறும் புக்ஸ் மட்டும்தான் இருக்கு என்று அவரைக் கேட்டேன் “ நீங்க எதுக்கு வந்தீங்க?

அவர் அதற்கு பதில் சொன்னார்

“சரக்கு வாங்கத்தான்

பின் குறிப்பு : எப்போதும் என்னோடு இருக்கும் ஜோல்னா பையோடு
எடுத்த படம். இன்றல்ல, முன் எப்போதோ.

2 comments:

  1. ஜோல்னா பை இதுக்கெல்லாம் கூட உபயோகப்படுதா?

    ReplyDelete
  2. ரொம்ப கடுப்பாயிடுச்சு அன்னிக்கு

    ReplyDelete