நெஞ்சம் நிறைந்த வேதனையோடும் பெரும் துயரத்தோடும் சில வரிகளை எழுத விரும்புகிறேன்.
இன்றைய காலைப் பொழுது ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியோடு துவங்கியது. பண்ருட்டி கிளையில் பணியாற்றும் எங்கள் பெண் தோழர் ஒருவர் அகால மரணம் அடைந்தார் என்பது அச்செய்தி. அவரது கணவரும் எங்கள் நிறுவன ஊழியர்தான். இருவருமே எங்கள் சங்கத்தின் முன்னணித் தோழர்கள். கிளைப் பொறுப்பில் செயல்பட்டவர்கள்.
நேற்று அவர் அலுவலகம் வந்திருக்கிறார். மாலை காய்ச்சலாக இருக்கிறது என்று சொல்லி அவரது வீடு உள்ள விழுப்புரத்திற்கு புறப்பட்டு விட்டார். காய்ச்சல்தானே, சரியாகவில்லையென்றால் நாளை மருத்துவரிடம் போகலாம் என்று சொல்லி விட்டார்.
அதிகாலை குளிர் ஜூரம் அதிகமாக வந்து விட்டது. மருத்துவர் யாரும் வீட்டிற்கு வர தயாராக இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்து விட்டது என்று சொல்லி விட்டார்கள்.
அவரது வயது நாற்பதிற்குள்தான் இருக்கும். நேற்று அலுவலகம் வந்து முழுமையாக பணியாற்றியவர் இன்று இல்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சி.
ஒரு வேளை நேற்றே மருத்துவரிடம் சென்றிருந்தால்?
அந்த துக்க நிகழ்வில் பங்கேற்ற அனைவரது மனதிலும் எதிரொலித்தது அக்கேள்விதான்.
பல புத்தகங்களில் சொல்லப்பட்டதுதான். காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல. அது நோயின் அறிகுறி.
ஆனால் பெரும்பாலும் நாம் (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்) ஒரு பாரசிடமால் மாத்திரையை முழுங்கி அதோடு திருப்திப்பட்டுக் கொள்கிறோம். அப்படி கேஷுவலாக இருக்கக் கூடாது என்று இந்த மரணம் உணர்த்துகிறது.
ஆகவே சிறிய காய்ச்சலாக இருந்தாலும் அதனை அலட்சியப் படுத்தாதீர்கள், தயவு செய்து.
இன்னொரு அம்சமும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் வீட்டிற்கு மருத்துவர்கள் வருவது என்பதே நின்று போய்விட்டது. அது போல குடும்ப டாக்டர் என்ற நடைமுறையும் இல்லை. அதனால் நோயாளிகளோடு மருத்துவர்களுக்கு ஒரு பிணைப்பு என்பதும் இல்லாமல் போய் விட்டது. இதுவும் ஆழமாக விவாதிக்க வேண்டிய விஷயம் என்றே கருதுகிறேன்.
பின் குறிப்பு : எதிர்பாராத இந்த துயரத்தால் இன்றும் நாளையும் நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியை ஒத்தி வைத்து விட்டோம்.
பின் குறிப்பு : எதிர்பாராத இந்த துயரத்தால் இன்றும் நாளையும் நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியை ஒத்தி வைத்து விட்டோம்.
சிறிய காய்ச்சலாக இருந்தாலும் அதனை அலட்சியப் படுத்தாதீர்கள், தயவு செய்து.
ReplyDeleteவிழிப்புணர்வு வரவேண்டும்
ReplyDeleteஆமாம் நண்பர்களே விழுப்புணர்வு இன்னும் தேவை
ReplyDelete