இந்திய ராணுவம் மீண்டும் ஒரு முறை தலை குனிந்து நிற்கிறது.
காஷ்மீரில் இரண்டு வாலிபர்களை சுட்டுக் கொன்று, இன்னும் இருவரை படுகாயப்படுத்தி விட்டு அவர்கள் தீவிரவாதிகள், சுட்டார்கள், நாங்கள் திருப்பிச் சுட்டோம் என்று கதைத்துக் கொண்டிருந்த ராணுவம் "நாங்கள் தவ்றாக சுட்டு விட்டோம்" என்று மன்னிப்பு கேட்டு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு அளிப்பதாக சொல்லியுள்ளது.
தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று சாதித்துக் கொண்டிருந்த ராணுவம் இப்போது திருந்தி உத்தமன் மன்னிப்பு கேட்கிறது. அந்த காரில் இருந்த இன்னொரு வாலிபன் உயிர் பிழைத்து வீடு திரும்பி நடந்த நிகழ்வை அம்பலப்படுத்தி விட்டதால் அதற்கு வேறு வழியில்லை.
காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது புதிதான் செய்தியில்லை. அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அம்மாநிலப் பெண்களும் பாலியன் வன்கொடுமைக்கு இரையாகும் அராஜகமும் புதிதல்ல.
பதக்கங்களுக்காகவும் விருதுகளுக்காகவும் பதவி உயர்வு பெறவும் அப்பாவிகளை சுட்டுக் கொன்று தீவிரவாதிகளைக் கொன்றோம் என்று கணக்கு காட்டும் நிகழ்வும் கூட மறக்கவோ மறுக்கவோ முடியாத குற்றம். ஆனால் அப்படி குற்றம் புரிந்தவர்கள் மீது ராணுவம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
எதுவும் இல்லை என்பதே கசப்பான உண்மை. Armed Forces (Special Powers) Act என்ற கவசம் அணிந்து அத்தனை பேரும் பாதுகாப்பாக உள்ளனர். மீறிப் போனால் அவர்களுக்குள்ளேயே கோர்ட் மார்ஷியல் என்ற பெயரில் கமுக்கமாக முடித்துக் கொள்வார்கள்.
இந்த தேசத்தின் எல்லையைப் பாதுகாக்க மழையிலும் வெயிலும் குளிரிலும் தங்கள் இளமைக் காலத்தை ராணுவ வீரர்கள் தியாகம் செய்கின்றனர் என்பதை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
ஆனால் அவர்களின் தியாகத்திற்கான நோக்கம் என்ன?
இந்திய மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதானே? அவர்களை கொல்வது கிடையாதே? தங்களின் இலக்கை மாற்றிக் கொள்வது முறையோ?
இது போன்ற நிகழ்வுகளால்தான் ராணுவத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு நிலை காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் உள்ளது என்பதை எப்போது அவர்கள் உணரப் போகிறார்கள்? அமைதிக்காற்றை சுவாசிக்கும் நமக்கு எதுவும் புரியாது என்பது வேறு விஷயம்.
தவறிழைக்கும் கறுப்பு ஆடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சிறப்புச் சட்டத்தை போர்வையாக்கி குற்றமிழைத்தவர்க்ளை இந்திய ராணுவம் பாதுகாப்பது என்பது தொடர்கதையாகி விட்டது. இந்த சம்பவத்திலும் கூட மன்னிப்பு கேட்டு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்து பிரச்சினையை முடிக்கப்பார்க்கிறார்களே தவிர தவறிழைத்தவர்களை தண்டிப்பது பற்றி வாய் திறக்கவில்லை.
ராணுவம் அளித்த இழப்பீடை கொலை செய்யப்பட்ட வாலிபனின் தந்தை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். என மகனின் உயிரும் ரத்தமும் விலை பொருளா? என்ற அந்த தந்தையின் கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள்?
காஷ்மீர் கொந்தளித்தாலும் மணிப்பூர், நாகாலாந்து குமுறினாலும் இந்திய நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாக மாறினாலும் ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை கைவிட மாட்டோம் என்பது அடம் பிடிப்பது ஏன்? மக்களுக்காக ராணுவமே தவிர ராணுவத்திற்காக மக்கள் அல்ல.
ஆனால் இதுவரை தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உண்மைகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருந்த ராணுவம் ஏன் இப்போது தன்னை சுய விமர்சனம் செய்து கொண்டுள்ளது?
தேர்தல், சட்டமன்ற தேர்தல்.
ஆம் காஷ்மீர் மாநிலத் தேர்தலில் மத்திய ஆளும் கட்சிக்கு இப்பிரச்சினை சிக்கலை உருவாக்கக் கூடாதல்லவா?
No comments:
Post a Comment