Sunday, November 30, 2014

வைகோ மயங்கி விட வேண்டாம்




பாஜக தன் கோர முகத்தை, சகிப்புத் தன்மையற்ற பாசிஸ குணாம்சத்தை அதன் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வைகோவிற்கு விடுத்த மிரட்டல் மூலம் வெளிப்படுத்தி விட்டது. "பெரியாரை செருப்பால் அடிப்பேன்" என்ற கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான ஹெச்.ராஜா இப்போது வைகோ பாதுகாப்பாக நடமாட முடியாது என்று நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

"அப்படியென்ன நரேந்திர மோடி வானிலிருந்து குதித்த தேவதையா? உலகின் மிக உன்னதமான மனிதனா? ரத்தக்கறை படிந்த களங்கமான மனிதன் தானே! மோடியை விமர்சித்தால் சும்மா இருக்க மாட்டோம் என்று மிரட்டுவது வைகோவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிரட்டல். கருத்துரிமைக்கு விடப்பட்ட மிரட்டல். இதை அனுமதிக்க முடியாது. கண்டிக்கிறேன். கண்டியுங்கள், எல்லோரும் கண்டிப்போம்.

இப்போது பாஜக வின் தமிழிசையும் பொன்னாரும் ஹெச்.ராஜா பேசியது அவரது சொந்தக் கருத்து என்று சொல்லி அந்த அநாகரீகத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். திருமதி தமிழிசை சௌந்தரராஜன் பேசும் போது கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்யாதீர்கள். கோரிக்கை வையுங்கள் என்று சொல்லியுள்ளார்.

இந்த வார்த்தைகளுக்கு உள்ளேயுள்ள அர்த்தம் என்ன?

ஒழுங்காக இருங்கள், எலும்புத் துண்டுகளை வீசியெறிவோம் என்பதுதானே!

வைகோவிற்கு ஒரு வார்த்தை.

பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாகச் சொல்லும் நீங்கள் ஹெச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுபடுத்திய போது அமைதியாக இருந்தீர்கள். அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். பிரச்சாரம் செய்தீர்கள், சான்றிதழ் கொடுத்தீர்கள். இப்போது உங்களை மிரட்டுகிறார்கள். அதே நேரம் ஆசையும் காட்டுகிறார்கள்.

பெரியாரை நீங்கள் நேசிப்பது உண்மையென்றால் இனியாவது காவிக்கூட்டத்திற்கு முட்டு கொடுக்கும் தவறை திருத்திக் கொள்ளுங்கள், உங்களது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  

Saturday, November 29, 2014

மோடியின் காஷ்மீர் மௌனம் ஏனோ?

மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டதிலேயே  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது பற்றி விவாதித்தோம் என்று ஒரு குட்டி மந்திரி மூலம் சொல்ல வைத்து பின்பு பல்டி அடித்த மோடி வித்தை நினைவில் உள்ளதல்லவா?

 http://i.telegraph.co.uk/multimedia/archive/02393/kashmir2_2393438b.jpg


அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்று. பாஜகவின் விருப்பமும் அதுவே. அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது கிட்டத்தட்ட செத்த பாம்பை அடிப்பதற்க்கு சமம். ஏனென்றால் மற்ற மாநிலத்து ஆட்கள் காஷ்மீரில் நிலம் வாங்கக் கூடாது என்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை. 

காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மோடி, ஏன்  370 ஐ அகற்றுவது  பற்றி வாய் திறக்கவே இல்லை. வீராதி வீரர், சூராதி சூரர், புஜபல பராக்கிரம தைரியசாலியான மோடி எதற்காக அங்கே மௌனம் அனுஷ்டிக்கிறார்? 370 ஐ அகற்றுவேன் என்று சொல்ல வேண்டியதுதானே? தேர்தல் கூட்டங்களில் அறிவிக்க வேண்டியதுதானே?

சொல்லுங்க மோடி சொல்லுங்க்


Friday, November 28, 2014

கோபி மிளகு பிரெட் - ஆணின் சமையல் குறிப்பு

கொஞ்சம் பெரிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் சமையல் குறிப்போடு.

தோழர் சங்கர் ஓகேயா?

வழக்கமான பிரெட் உப்புமாதான். ஆனால் வழக்கமான முறையல்ல, முற்றிலும் மாறு பட்ட தயாரிப்பு முறை, மாறு பட்ட சுவையோடு.

சின்ன வெங்காயத்தை உரித்து வைத்துக் கொள்ளவும். காலி ப்ளவரை கொஞ்ச நேரம் சுடு தண்ணீரில் ஊற வைக்கவும். பிரெட்டை சின்ன துண்டங்களாக வெட்டி வைக்கவும். கொஞ்சம் மிளகை பொடியாக்கிக் கொள்ளவும். 


என்ன எல்லாம் தயாரா? 

சரி நாம் சமையலைத் துவக்குவோம். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காயும் வரை காத்திருக்கவும். முதலில் சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பிறகு ஊற வைத்த காலிப்ளவரை வதக்கவும். இப்போதே உப்பையும் மிளகு பொடியையும் சேர்க்கவும். 

பிறகு பிரெட் துண்டுகளையும் சேர்த்து நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை  வதக்கி கொஞ்சம் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



சூப்பரா இருந்தது - இது என் மகனின் கமெண்ட்.
வேறென்ன வேண்டும் எனக்கு.........

நாய்களின் பேரணி யாருக்கு நன்றி சொல்ல?

இன்றைக்கு காலையில் கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்த போது பார்த்த காட்சி இது.




எங்கள் தெருவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஒரு பேரணி போல ஏழெட்டு முறை  நடை போட்டுக் கொண்டே இருந்தன. சாலையில் சென்ற ஒவ்வொருவருமே அச்சத்துடனேயே ஒதுங்கிச் சென்றனர்.

தாங்கள் இப்படி சுதந்திரமாக திரிய வழி வகுத்த மேனகா காந்திக்கோ அல்லது கண்டு கொள்ளாத வேலூர் மாநகராட்சிக்கோ நன்றியைச் சொல்லத்தான் அவைகள் இந்த பேரணியை நடத்தியது போல எனக்கு தோன்றியது.

எங்கள் பகுதி மட்டுமல்ல, வேலூரின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற காட்சிகள் இப்போது சாதாரணமாகி விட்டது.
 

ஓ.பி.எஸ் எங்கே உட்கார்வார்? ஒரு டவுட்டு




ஓ.பி.எஸ் தன்னை முதல்வர் என்று சொல்லிக் கொள்வதில்லை. முதலமைச்சர் அறையில் அமர்வதில்லை. தனது அறையிலோ, வீட்டிலோ கூட முதலமைச்சர் என்ற பெயர்ப் பலகை கிடையாது. 

பரதனைப் போலவே பதவியில் பற்றறவராய் துறவியைப் போல ஆட்சி (!) நடத்துகிறார். (அப்படியில்லாவிட்டால் பதவி போய்விடும் என்ற யதார்த்தம் புரிந்தவர் அவர்.

எல்லாம் சரி, சட்ட மன்றம் துவங்கப் போகிறதே, சட்டப்பேரவையில் எங்கே அமரப் போகிறார்? அதிலும் அந்த பச்சை கலர் சோபாவை காலியாக விட்டு விட்டு பழைய இடத்தில் அமரப் போகிறாரா? இல்லை முதல்வருக்கான இருக்கையிலா?

இதற்கு பதில் அம்மாவுக்கு மட்டுமே தெரியும்

Thursday, November 27, 2014

அவனுக்கு நாய், இவனுக்கு பேய்







சில மாதங்கள் முன்பாக நாக்பூரில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் எங்கள் அகில இந்திய தலைவர் தோழர் அமானுல்லாகான் அவர்களின் உரையை பகிர்ந்து கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்காவில் நிற வெறி உச்சத்தில் இருந்த காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை அவர் அப்போது கூறினார்.

அச்சம்பவம் இதுதான்

“வெள்ளையர்களுக்கான பூங்கா ஒன்றில் நுழைந்த ஏழு வயது கறுப்பின பெண் குழந்தையை ஒரு வெள்ளையன் சுட்டுக் கொன்றான். அந்த பெண் குழந்தை நாய் போல இருந்தது என்று காரணமும் சொன்னான். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது “அந்த குழந்தையை கொன்றதில் தவறில்லை, அது நாய் போலத்தான் இருந்தது” என்று நீதிபதியும் தீர்ப்பளித்தார். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகத்தான் நீதிபதிகளும் இருப்பார்கள். நீதிமன்றங்களும் இருக்கும்.”

காலம் வேகமாக உருண்டாலும் நிற வெறி என்பது மாறவில்லை, மறையவில்லை என்பதை அமெரிக்க சம்பவம் உணர்த்துகிறது.

கையில் எந்த ஆயுதமும் இல்லாத மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞனை அமெரிக்காவில் டாரென் வில்சன் என்ற காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்று விட்டான். நீதி விசாரணை நடத்தி அந்த போலீஸ்காரர் மீது தவறு எதுவுமில்லை என்று வழக்கு பதியாமலே விடுதலை செய்து விட்டார்கள்.

அந்த நீதிமன்ற விசாரணையில் அந்த போலீஸ்காரன் "மைக்கேல் பிரவுன் பார்ப்பதற்கு பேய் போலவும்  ஹல்க் குரங்கு போலவும் அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்ததாக சொல்லியுள்ளான். விடுதலையும்  ஆகியுள்ளான். 

ஆப்பிரிக்காவில் ஒரு நிற வெறியன் தான் கொன்ற குழந்தையைப் பார்க்க நாய் போல இருந்தது என்று சொன்னான்.

இப்போது தான் கொன்ற வாலிபன் பார்க்க பேய் போல இருந்ததாக டாரென் வில்ஸன் கூறியுள்ளான்.

வெறி தலைக்கேறி மனிதத்தன்மை இழந்தவர்களுக்கு மனிதர்கள் கண்ணில் படமாட்டார்கள் போல. 

இந்த வெறியனை விடுதலை செய்துள்ளதுதான் அமெரிக்க நீதி.

மனித உரிமை வேதத்தை  அமெரிக்க சாத்தான் ஓதுவது எவ்வளவு பெரிய கொடுமை.....


Wednesday, November 26, 2014

மோடியின் தொகுதியில் 3 லட்சம் போலி வாக்காளர்களா?

மோடி வெற்ற வாரணாசி தொகுதியில் மூன்று லட்சத்திற்கு மேல் போலி வாக்காளர்கள் இருந்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கண்டு பிடித்துள்ளதாக செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது.

 http://www.liveindia.com/ganga/liveindia-ganga037.jpg

இதைச் செய்தது மோடியா? சமஜ்வாடிக் கட்சியா என்ற விவாதம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் சமஜ்வாடி கட்சி வாங்கியதென்னவோ வெறும் 45,000 ஓட்டுதான்.

தேர்தல் ஆணையம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அதன் பின் கச்சேரியை துவங்கலாம்.

 

மகனின் கடிதம் – அதிர்ச்சியில் தந்தை, நாமும் கூட



http://resources1.news.com.au/images/2014/04/10/1226880/109969-d58cdbb6-c074-11e3-b362-fbc371d40a1d.jpg

மகனின் படுக்கையறைக்குள் நுழைந்த அந்த தந்தை ஆச்சர்யமடைந்தார். வழக்கத்திற்கு மாறாக அந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. கொடிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் உடைகள் எதையும் காணவில்லை. மேஜையும் சுத்தமாக இருந்தது. மேஜையின் மேலே ஒரு கடிதம் படபடவென காற்றில் துடித்துக்கொண்டிருந்தது.

கடிதத்தை கையில் எடுத்து படித்த அவர் வாழ்வின் உச்சகட்ட அதிர்ச்சிக்குச் சென்றார்.

அக்கடிதம்.

அன்புள்ள அப்பா, உங்களுக்கு வேதனையும் வருத்தமளிக்கும் செய்தியைச் சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் எனது காதலியோடு இந்த ஊரை விட்டே செல்கிறேன். இதனைச் சொன்னால் நீங்களும் அம்மாவும் கோபப்பட்டு எங்களை திட்டுவீர்கள், அம்மா கண்ணீர் விட்டு அழுவார். அதையெல்லாம் எனது பலவீனமான இதயம் தாங்காது என்பதால்தான் உங்களிடம் சொல்லாமல் புறப்படுகிறோம்.

என் சினேகிதியின் உடை, அவள் கையிலும் உடலிலும் ஏராளமாக பச்சை குத்தியிருக்கிற வரைபடங்கள், பரட்டைத்தலை ஆகியவற்றை மட்டுமல்ல, அவள் என்னை விட ஐந்து வயது மூத்தவள் என்பதையும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவளது கர்ப்பத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே…

உங்களையெல்லாம் விட என்னை நன்றாக புரிந்து கொண்டவள் மட்டுமல்ல, ஹெராயின், அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவது தவறல்ல, அவை தரும் சுகமான அனுபவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவளும் அவள்தான்.

காட்டிற்கு நடுவே எங்களைப் போன்றவர்கள் வசிக்கும் விடுதி ஒன்று உள்ளது. அங்கே எங்கள் பொழுது இனிமையாகவே செல்லும். எங்கள் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் நிறைய நகைகளும் எடுத்துச் செல்கிறோம். சரியான முடிவெடுக்கும் பக்குவத்தை அடைந்த பதினைந்து வயது வாலிபன் நான் என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏராளமான பேரக் குழந்தைகளோடு ஒரு நாள் உங்களை சந்திப்போம்.

இதைப் படித்து முடிக்கையில் அந்த தந்தைக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது.

கடிதத்தில்  பின் பக்கம் பார்க்கவும் என்று எழுதியிருந்தது.

பின் பக்கத்தில்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அப்பா, முதல் பக்கத்தில் நான் எழுதியது எல்லாமே பொய். வாழ்வில் எத்தனையோ மோசமான விஷயங்கள் நிகழ வாய்ப்புள்ளது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். அவற்றோடு ஒப்பிடும் போது அரை இறுதித் தேர்வில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்கள் உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்காது. நான் என் நண்பன் வீட்டில்தான் இருக்கிறேன். என் மதிப்பெண் பட்டியலில் கையெழுத்திட்டு விட்டு அழைக்கவும்.

(முக நூலில் ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் அளித்துள்ளேன். எப்பவுமே ரொம்ப சீரியஸாவே எழுதனுமா என்ன? )

மோடியின் போட்டோஷாப் பொய்கள்

நரேந்திர மோடிக்காக செய்யப்பட்ட போட்டோஷாப் பொய்களைப் பார்க்க இந்த இணைப்பிற்குச் செல்லவும்  

இன்னும் கூட நிறைய இருக்கு. அவங்க டாப் டென் தான் போட்டிருக்காங்க. 

அதெல்லாம் தொண்டர்கள் ஆர்வத்துல செஞ்சதுனு யாராவது அனானி
பதில் சொல்லுவாங்க பாருங்களேன்.

கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் எப்படித்தான் இருக்க முடிகிறதோ? இதெல்லாம் ஒரு பிழைப்பு.....

Tuesday, November 25, 2014

காவிக்கூட்டமே, உங்களால் பதில் சொல்ல முடியுமா?



தேசத்தின் மீதான அக்கறையுடனான ஒரு சிறந்த கட்டுரை. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ்  எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லும்
திராணி பாஜக காவிகளுக்கு இருக்கிறதா?


 

இந்தியா தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். “பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அது நாட்டுக்குப் பெருத்த சுமை. ஏழை மக்களின் பணத்தைக் கொட்டி அழலாமா?” என்று உபதேசித்தார். மார்க்ரெட் தாட்சரைப் போல “வியாபாரம் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல” என்று அவரும் சொன்னார். இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டதாக ஊடகங்கள் முரசறைந்தன. அப்போது, பாஜக அதை எதிர்த்தது. தொழிலாளர்களும் இடதுசாரிகளும் அது தவறென்று வீதிக்கு வந்து போராடினார்கள். தொழிலாளர்கள் தேசத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகப் போராடுவதாய்க் குற்றம் சுமத்தினார்கள்.


 
முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பின்னர், லாபத்தில் இயங்கினாலும் முக்கியத்துவம் அல்லாத தொழில் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். அது சரிதான் என்று ஒரு ஒப்புதலை உருவாக்கினார்கள். ‘நஷ்டத்தில் இயங்குகிற தொழில்களைத் தனியார் நடத்தினால் மட்டும் எப்படி லாபம் வரும்?’ என்ற கேள்விக்கு “உயர் தொழில்நுட்பத்தோடு அந்த நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு இயங்கும்” என்று அவர்களே தட்டிக்கொடுத்துக்கொண்டார்கள். அப்படிச் சொல்லித்தான் சென்னை கிண்டியில் இருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் விற்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் பிரம் மாண்டமான குடியிருப்புக் கட்டிடங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. ஒருவேளை, தொழிற்சாலைகளை ரியல் எஸ்டேட்டாக மாற்றும் உயர்ந்த தொழில் நுட்பம்பற்றித்தான் பேசினார்களோ என்னவோ? 

விற்றாலும் வாங்கினாலும்
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். ஆட்சியாளர்கள் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கினாலும், ஹெலிகாப்டர் வாங்கினாலும் பல நூறு கோடிகள் அரசுக்கு நஷ்டம். அலைக்கற்றையை விற்றாலும், நிலக்கரிப் படுகையை விற்றாலும் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டம். இதில் முறைகேடு ஏதும் இல்லை, சந்தையின் விதி என்று அவர்கள் சான்றிதழ் கொடுத்தார்கள்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் “மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு பொதுத் துறைகள் பலப்படுத்தப்படும்” என்று சொன்னது. தற்போது அருண் ஜேட்லி, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறார். அதற்கு முன்னர், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம், இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ‘நஷ்டத்தில் இயங்குவது’, ‘விற்கப்படுகிறது’ என்ற இரண்டையும் லாவகமாக இணைத்து, ‘நஷ்டத்தில் இயங்குவது விற்கப்படுகிறது’என்ற பொதுப்புத்தியை அவர்கள் கட்டமைத்துவிட்டார்கள். இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் தவிர, இதர நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றனவா? 

பொன்முட்டையிடும் வாத்தை…
 
நிறுவனங்களின் 2013-14 ஆண்டறிக்கைகளின் பட்டியலில் மூன்று பெரிய தனியார் நிறுவனங் களின் ஒட்டுமொத்த லாப வீதம் அவற்றின் வருவாயில் 5.21% மட்டுமே. இது பொதுத் துறையில் 5.12%. இதில் பெரிய வேறுபாடு எதுவுமில்லை. அரசுக்குச் செலுத்திய தொகையை ஒப்பிட்டால், ரூ. 10.82 லட்சம் கோடி வருவாய் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களும் அரசு கஜானாவுக்கு ரூ. 68,474 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஆனால், 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருவாயுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் மூன்றும் சேர்ந்து ரூ.1,38,299 கோடியை அரசு கஜனாவுக்கு வழங்கியுள்ளன. இதே நிலைதான் கடந்த பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. பொன்முட்டை இடும் வாத்தாய், அமுதசுரபியாய், வற்றாத நீரூற்றாய், பொய்க்காத பெருமழையாய் விளங்கும் இந்த நிறுவனங்களைத்தான் தனியாருக்கு பாஜக அரசாங்கம் விற்கப்போகிறது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பிலாய் ஆலை மட்டும் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந் திருக்கிறது. அதன் குடியிருப்புகள் 9,013 ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இதில் பணிபுரிகிறார்கள். 

1956-ல் அரசு, காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தது வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே. கடந்த 5 ஆண்டுத் திட்டத்துக்கு இந்திய ஆயுள் காப் பீட்டுக் கழகம் அரசுக்கு ரூ. 7.25 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்த 5 ஆண்டுத் திட்டக் காலத்தில் இதுவரையிலும் அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்தக் காப்பீட்டுத் துறையில் தனியாரும் அந்நிய மூலதனமும் அனுமதிக்கப்பட்டி ருக்கிறது. அதை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. 

இழப்பு யாருக்கு? 
 
அவர்கள் முதலில் நஷ்டத்தில் இயங்குவதை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பிறகு, முக்கியமற்ற துறைகளை விற்கப்போவதாகச் சொன்னார்கள். இப்போது லாபத்தில் இயங்கும் முக்கியமான துறைகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ஏலமிட்டது காங்கிரஸ். இப்போது ஏலமிட்டுக்கொண் டிருப்பது பாஜக. இரண்டு பேர் காலத்திலும் விற்கப்பட்ட 2-ஜியையும், நிலக்கரிப் படுகையையும் நீதிமன்றம் தலையிட்டு, ஒட்டுமொத்தமாக ரத்து செய்யும் அளவுக்கு மிகவும் நேர்மையாக இவர்கள் நடந்துகொண்டார்கள். அவையெல்லாம் பொதுப்புத்தியில் நியாயம் என்று கட்டமைக்கப்பட்டே எதிர்ப்பின்றி விற்கப்பட்டன. 

மேலே சொன்ன பொதுத் துறைகளிலிருந்து அரசு கஜானாவுக்குச் சென்ற வரிகளும் லாபப் பங்குகளும் இந்திய மக்களுக்குச் சாலைகளாகவும் கல்வியாகவும் மருத்துவ வசதிகளாகவும், பொது விநியோகத் துறை மானியமாகவும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் அரசாங் கத்துக்குக் கொடுத்த தொகை மட்டும் 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய். இவை நிறுத்தப்பட்டால், மக்கள் நலத்திட்டங்களும் மானியங்களும் வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படும் என்பது உறுதி. 

- க. கனகராஜ்,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ (எம்) 

நன்றி தமிழ் ஹிந்து 24.11.2014
 

Monday, November 24, 2014

பாரதீய ஜனதாவின் டுபாக்கூர் வாக்குறுதிகள்



http://s1.firstpost.in/wp-content/uploads/2013/08/1INS_Vikrant_PTI.jpg

http://www.livemint.com/rf/Image-621x414/LiveMint/Period1/2012/10/09/Photos/Dabhol%5B1%5D621--621x414.jpg
கொடுத்த வாக்குறுதிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் சம்பந்தமே இருக்காது போல.

இந்தியாவின் பெருமை மிகு போர்க்கப்பல் ஐ.என்.எஸ் விக்ரந்த். அதனை இப்போது காயலான்கடை பொருளாக உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு கண்காட்சியகமாக மாற்றும் முயற்சி வெற்றிபெறவில்லை. அதை தொடர்ந்து பராமரிப்பது என்பது சாத்தியமில்லாமல் கூட இருக்கலாம்.

ஆனால் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில்   ஐ.என்.எஸ் விக்ரந்த் போர்க்கப்பலை பாதுகாப்போம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல முந்தைய அரசு மீது பழியைப் போட்டு விட்டு கப்பலை உடைக்க துவங்கி விட்டார்கள். வாக்குறுதி கொடுக்கும் முன்பு அதை சாத்தியமா என்று ஆராய மாட்டார்கள் போல. வாய்க்கு வந்ததை அடித்து விட்டார்கள் போல.

இதற்கு முன்பு இப்படித்தான் இன்னொரு வாக்குறுதி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகாராஷ்டிர மாநிலம் டாபோலில் உள்ள என்ரான் மின் நிலையத்தை அரபிக் கடலில் தூக்கி எறிவோம் என்று தேர்தல் வாக்குறுதி சொன்னார்கள்.

ஆனால் வாஜ்பாயுடைய பதிமூன்று ஆட்சிக்காலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் ராஜினாமா செய்வதற்கு முன்பாக என்ரான் மின் நிலையத்திற்கு மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இழப்பீடு அளிக்கிற Counter Guarantee Agreement ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் வாஜ்பாய்.

என்ரான் பின்பு மூடப்பட்டதும் என்ரானுக்கு கடன் கொடுத்த ஸ்டேட் வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் தவித்ததும் வரலாறு. ராஜினாமா செய்வதற்கு சில நிமிடங்கள் முன்பாக தேசத்தை பாதிக்கும் ஒரு கோப்பில் கையெழுத்து போட்டது என்பது எப்படிப்பட்ட நெரிமுறையற்ற செயல். அரபிக்கடலில் வீசியெறிவோம் என்று தேர்தலின்போது மக்களுக்கு உறுதிமொழி அளித்து விட்டு அதே நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதுதான் வாஜ்பாயின் சாதனை. 

விக்ரந்தை பாதுகாப்பதாகச் சொல்லி உடைக்கிறார்கள்.

என்ரானை அரபிக்கடலில் வீசுவதாகச் சொல்லி பாதுகாத்தார்கள்,
இந்தியாவை பழி வாங்கினார்கள்.

ஆக மக்களே, இவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்காக மட்டுமே. நம்பாதீங்க, உஷாரா இருங்க.