நேற்று முகநூலில் ஒரு தோழர் தன்னுடைய ஞாபக மறதி அனுபவங்களை ஞாபகமாக பகிர்ந்து கொண்டிருந்தார். அதைப் படித்ததும் ஞாபக மறதியின் விளைவால் நடந்த ஒரு நிகழ்வு ஞாபகத்துக்கு வந்து விட்டது.
நான் நெய்வேலியில் பணியில் சேர்ந்த காலம். ஒரு சக ஊழியர் டீக்கடைக்குச் செல்ல என்னுடைய சைக்கிளை வாங்கிச் சென்றார். டீ குடித்து விட்டு வந்து சைக்கிள் சாவியை ஞாபகமாக கொடுத்து விட்டே அவரது இருக்கைக்குச் சென்றார்.
மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்ப வாசலுக்கு வந்தால் சைக்கிளைக் காணவில்லை. அலுவலகத்தின் நான்கு புறங்களைத் தேடியும் கிடைக்கவில்லை.
போலீசில் புகார் கொடுக்கலாம், கொடுத்தால் பயனிருக்காது, சைக்கிள் அட்வாஸ் போட்டு புதிய சைக்கிள் வாங்கலாம் என்று ஆலோசனை மழையில் நனைந்து கொண்டிருந்தேன்.
அப்போது வெளியிலிருந்து உள்ளே நுழைந்த இன்னொரு ஊழியர், "ஜி.ஹெச் எதிரில் உள்ள டீக்கடையில் உன் சைக்கிள் உள்ளது" என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். அவசரம் அவசரமாக போய் சைக்கிளை எடுத்துக் கொண்டேன்.
சைக்கிளில் டீக்கடைக்குச் சென்றவர் அதை மறந்து நடந்து திரும்பி வந்தவர், சாவியை மட்டும் ஞாபகமாக கொடுத்து விட்டார்.
என்னுடைய வரமும் சாபமும் ஞாபக சக்திதான்.
ஒரு தொழிற்ச்சங்கப் பொறுப்பாளராக ஞாபக சக்தி மிகப் பெரிய வரம். அதுவும் மாறுதல்கள் போன்றவை எந்தெந்த காலத்தில் எந்த சூழலில் நடந்தது என்பதெல்லாம் நினைவுகளின் அடுக்கில் இருப்பது எப்போதுமே ஊழியர்களுக்கு பலன்களை பெற்றுத்தர உதவிகரமாக இருக்கும். சங்கத்தின் வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் உதவும்.
சமீபத்தில் இரண்டு நூல்களை கொண்டு வந்தோம். ஐம்பதாண்டுகள் முன்பு நடந்த லாக் அவுட் போராட்டம் குறித்து ஒரு நூல், எங்கள் கோட்டத்து மகளிர் இயக்க நடவடிக்கைகள் குறித்து இன்னொரு நூல். இரண்டு நூல்களை தொகுக்கவும் ஞாபக சக்திதான் கை கொடுத்தது.
அந்த வகையில் ஞாபக சக்தி வரமே . . .
அதே நேரம் சில நிகழ்வுகள் நினைவில் நிற்பது சாபமே. அது பிரச்சினையில்லை. நாகரீகம் கருதி போலித்தனங்களை பேச முடியாது வாயை மூடிக்கொண்டிருக்கும் சூழல்தான் சாபம்.
நான் சிலவற்றை, சிலரை மன்னித்து விடுவேன். ஆனால் எந்நாளும் மறக்க மாட்டேன்.
No comments:
Post a Comment