தென்
மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன்
அவர்கள் 31.07.2023 அன்று எல்.ஐ.சி பணியை நிறைவு செய்துள்ளார்.
இந்த வலைப்பக்கத்தின் வாசகர்களுக்கு அவர் நன்கு அறிமுகமானவர்தான். அவருடைய பல சிறப்பான கட்டுரைகளை இப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அவருடைய பணி நிறைவை ஒட்டி எங்கள் வேலூர் கோட்டச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சுற்றறிக்கையையும்
தாண்டி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குத்தான் இந்த
பதிவு.
தோழர்
சுவாமிநாதனை எப்போது முதல் முறையாக பார்த்தேன்?
1990
ல் கட்டாக்கில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 14 வது பொது மாநாடு. அம்மாநாட்டில்
தமிழகத்தின் ஒரு மூத்த தலைவர், இன்னமும் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் உள்ளவர், பேசுகிற
போது அவர்கள் கோட்டத்தில் செய்யப்பட்ட பல பணிகள்,
இயக்கங்கள் ஆகியவற்றைப் பற்ற் புள்ளி விபரங்களாக அடுக்கி கரவொலியை அள்ளிக் கொண்டிருந்தார்.
மறு நாள் காலை உணவு நேரத்தில் தட்டுக்களை ஏந்தி சென்று கொண்டிருந்த போது அந்த தலைவரை
ஒருவர் “our மதுரை சிட்டி இஸ் ஹேவிங் அ பாபுலேஷன் ஆப் டென் லேக்ஸ்” என்று சொன்னால்
கூட கை தட்டுவார்கள் என்று சொல்லி கலாய்த்துக் கொண்டிருந்தார். அவர்தான் தோழர் சுவாமிநாதன்.
தோழர்களுக்குள் தலைவர், உறுப்பினர் என்று எந்த இடைவெளியும் இல்லாத அமைப்பு அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பதை உணர வைத்த சம்பவம். அப்பொது மனதில் ஒட்டிக் கொண்டவர்
தோழர் சுவாமிநாதன்.
தூரத்தில்
நின்றே பார்த்துக் கொண்டிருந்த அவரின் ஆளுமையை, சிறந்த அமைப்பாளராக, மதுரைக் கோட்டச்சங்கத்தின்
தலைவராக இருந்த தோழர் தண்டபாணி அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவின் போதுதான்
பார்த்தேன்.
தென்
மண்டல செயற்குழுக் கூட்டங்கள் இரண்டு நாட்கள் நடக்கும் வேளையில் எல்.ஐ.சி பாண்டி பஜார்
விருந்தினர் இல்லத்தில் முதல் நாள் இரவு தூங்குவதற்கு நள்ளிரவுக்கு மேல் ஆகி விடும்.
அவ்வளவு நேரமும் பேச்சு, பேச்சு, பேச்சுதான். அது ஒரு அழகிய நிலாக்காலம். அவரும் மற்றவர்களை
கலாய்ப்பார். மற்றவர்களும் அவரை தயவு தாட்சண்யமின்றி கலாய்க்கலாம். திருவனந்தபுரம்
தென் மண்டல மாநாட்டின் போது அதிகாலையில் வந்து சேர்ந்த அவரின் ஜோல்னா பையிலிருந்து
எலி தப்பித்துப் போன கதையை எல்லாம் இப்போதும் சொல்லி சிரிக்க முடியும்.
தென்
மண்டலப் பொறுப்பாளரான பின்பே அவருடனான நெருக்கம் அதிகமானது.
காதல்
திருமணம் செய்து கொண்ட அவர் எங்களிடம் “உங்க டிவிஷனில் காதன் போன்ற உணர்வுகளே கிடையாதா?”
என்று வேறு கேட்பார். அதற்கு திரேதா யுகத்திலும்
துவாபர யுகத்திலும் நடந்த சம்பவங்களையெல்லாம் நினைவு படுத்தி பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
இயக்கங்கள்
சிறப்பாக நடந்தால் மனமாற பாராடுவது, அதுவே இயக்கங்களில் பலவீனம் இருந்தால் மனம் நோகாமல்
விமர்சிப்பது என்று இரண்டுமே அவரிடம் உண்டு. புதிய புதிய வடிவங்களைப் பற்றி சிந்தித்துக்
கொண்டே இருப்பவர், செயல் வடிவமும் கொடுப்பவர்.
கோபத்தை
அவரிடம் கொட்டி விட முடியும். அதை அவர் இதயத்துக்கு எடுத்துச் செல்ல மாட்டார். சமீபத்தில்
ஒரு பிரச்சினை நடந்த போது திருச்சியில் ஒரு நிகழ்வில் இருந்தோம். திருச்சியிலிருந்து
நான் வேலூருக்கு காரில் திரும்ப, சென்னைக்கு பேருந்து பிடிக்க அவர் உளுந்தூர்பேட்டை
வரை உடன் வந்தார். வழி முழுதும் மட்டுமல்லாது உளுந்தூர்பேட்டையில் அவர் இறங்கிய பின்பும்
கூட நானும் இறங்கி கோபத்தில் சில வார்த்தைகளை வீசினேன். ஆனால் அவர் டென்ஷனாகவே இல்லை.
அதன் பின்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றித்தான் பேசினார். தீர்வுக்காக முயல்கிறார்.
எப்போது
எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வருவார். அது எத்தனை பேருக்கானது என்று பார்க்க மாட்டார்.
கோட்டச் சங்கப் பொறுப்பாளர்களுக்கான ஒரு வகுப்பிற்காக ஒரு முறை அவர் வேலூர் வந்தார்.
கோட்ட அலுவலகம் வாசலில் இரு சக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்த அவர் மீது இன்னொரு
இரு சக்கர வாகனம் மோத அவர் குதிகாலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. உடனே ஒரு மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றோம். அங்கே தையல் போட்டு ஓய்வெடுக்கச் சொன்னார்கள். மதியம் வகுப்பை
எடுக்க வேண்டிய தோழரும் வந்து விட்டதால் அந்த ஒரு வகுப்போடு நிறுத்திக் கொள்வோம். உங்களை
சென்னையில் கொண்டு விட்டு விடுகிறோம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அடிபட்ட காலை ஒரு
ஸ்டூலில் வைத்துக் கொண்டே அந்த வகுப்பை எடுத்து விட்டார். அடுத்த வகுப்பும் முடியட்டும்,
அதன் பின்பு புறப்படுகிறோம் என்றார். நாங்கள் அதற்கு உடன்படவில்லை. நான் உங்களோடு வருகிறேன்
என்பதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் பிடிவாதமாக இருந்து நானும் அவரோடு
சென்னை சென்றேன். எடுத்துக் கொண்ட பணியை முடிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பிற்கு
இது ஒரு உதாரணம்.
வேலூர்
கோட்டத்தின் சார்பாக நாங்கள் வெளியிட்ட இரண்டு நூல்களையும் கச்சிதமாக எடிட் செய்து
கொடுத்தது மட்டுமல்லாமல் அழகான அணிந்துரையும் எழுதிக் கொடுத்தார்.
“முற்றுகை”
நாவலை எழுதி முடித்ததும் அவரிடம்தான் கொடுத்தேன். அதற்கும் அவர்தான் மெருகேற்றும் வேலையைச்
செய்தார். அது மட்டுமல்ல பாரதி புத்தகாலயத்தோடு பேசி அதனை வெளியிட வைத்ததோடு மெய்ப்பும்
பார்த்தார். அட்டையை இறுதிப்படுத்தும் வேலையை செய்தது அவர்தான். அத்தோடு நிற்கவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள கோட்டங்களோடு பேசி நூலையும் வாங்க வைத்தார். விசாகப்பட்டிணம் அகில
இந்திய மாநாட்டிற்கு முன்பு அச்சிட்டு வருவதை உறுதி செய்தார். முற்றுகை வெளியீட்டின் பின்னணியாய் திகழ்ந்த தோழர்
சுவாமிநாதன், அந்நூலை வெளியிடும் போதும் பின் வரிசையில்தான் நின்றிருந்தார்.
தமிழ்நாடு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று அவர் தீவிரமாக பணியாற்றுவதற்றுவதற்கான தளங்கள் காத்திருக்கின்றன.
ஆனாலும் நாங்கள் அவரை அவ்வளவு சுலபமாக விடுவதாக இல்லை.
ஆமாம்.
எங்கள்
கோட்டத்தின் சார்பில் வரும் 17 ஆகஸ்ட் 2023 அன்று வேலூரில் சுதந்திர தின சிறப்புக்கருத்தரங்கில்
உரையாற்ற வரவுள்ளார்.
A very respectable comrade
ReplyDelete