எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் துணைத்தலைவரும் தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் தலைவருமான தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி இன்று எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
முப்பத்தி ஒன்பது ஆண்டு காலம் எல்.ஐ.சி நிறுவனத்திலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திலும் பணியாற்றிய அறுபது வயது இளைஞர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி அவர்களின் பணி ஓய்வுக் காலம் அமைதியாய், ஆரோக்கியமாய், சமூகத்திற்கு பயனுள்ளதாய் அமைய வேலூர் கோட்டத்தின் அனைத்துத் தோழர்களின் சார்பிலும் இனிய நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
கிட்டத்தட்ட இருபத்தி ஏழு ஆண்டு கால தோழமை அவரோடு உண்டு. எங்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு. இருவரின் மனைவியும் குடந்தையைச் சேர்ந்தவர்கள். அவரது மனைவி என் மாமனாரின் மாணவியும் கூட.
தஞ்சைக் கோட்டம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அளித்த தலைவர்களின் பட்டியல் நீண்டது. தோழர்கள் ஆர்.கோவிந்தராஜன், என்.ஸ்ரீனிவாசன், கே.லட்சுமணன். எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற பட்டியலில் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்டு இணைந்தவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர். அனைத்து பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்களோடும் நெருக்கமானவர், ஆனால் எந்த ஒரு நேரத்திலும் ஊழியர்கள் நலனிலோ, சங்கத்தின் நலனிலோ சமரசம் செய்து கொள்ளாதவர்.
சங்கப்பணிகள் தாண்டி அவரது எல்லைகள் மிகவும் விரிவானது. தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் சமூக நீதிக்கான இயக்கங்களிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழகத்தின் பல கோட்டங்களுக்கு முன்னோடியாக தஞ்சைக் கோட்டம் இருப்பதற்கான அடித்தளம் இவர்.
தகவல்களின் களஞ்சியம் இவர். சில நேரங்களில் செய்திகளை முந்திக் கொடுப்பவரும் கூட. மனிதர்களைப் பற்றிய கணிப்பும் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும். அது எனக்கு மிகவும் உதவிகரமாகவும் இருந்துள்ளது.
துல்லியமான திட்டமிடல் ஒரு சிறப்பம்சம். தனக்குள்ள தொடர்புகளை சங்கத்திற்காகவும் மக்களுக்காகவும் பயன்படுத்துவதை சுனாமியின் போதும் கஜா புயலின் போதும் நேரில் பார்த்துள்ளேன்.
வெடிச்சிறப்பும் உரத்த குரலும் அவரது அடையாளம். தென் மண்டல செயற்குழுக் கூட்டங்களின் உணவு இடைவேளை நேரம் அவரது சிரிப்புக்களால் நிறைந்திருக்கும்.
ஓய்வு பெறும் வயது அறுபது என்று நிர்ணயிக்கப்பட்டதால் அவர் இன்று எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
ஆனால் இன்றைய அரசியல், சமூக சூழல் அவருக்கு ஓய்வளிக்காது. சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேரமும் இனி உழைக்கும் மக்களுக்கானது என்பது மகிழ்ச்சியே
நீண்ட ஆயுளோடும் புகழோடும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழர் புண்ணியமூர்த்தி . . .
பிகு: ஆரணியில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்க மாநாட்டு ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த போது எடுத்த படம்
தோழரே அது புகைம்படக் கண்காட்சி அல்ல ஓவிய பண்காட்சி என மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteசரி செய்து விட்டேன் தோழர்
Delete