Friday, June 7, 2019

வலது திருப்பம் ஏன்?

வலதுசாரி சக்திகள் உலகின் பல நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழலில் அது ஏன் நிகழ்கிறது என்பது பற்றி பேராசிரியர் பிரபாத் பட்னாயக் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் இ.எம்.ஜோசப் தமிழில் அளித்துள்ளார்.

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான இக்கட்டுரையை அவசியம் படியுங்கள்






இன்று இந்தியாவில் மோடி தலைமையிலான வலதுசாரி பா.ஜ.க அரசு மீண்டும் பதவியில் அமர்ந்திருக்கிறது. இதனை இந்தியாவில் மட்டும் நிலவும் அரசியல் போக்காக பார்ப்பது சரி அல்ல என்றும், உலக முழுவதுமான இன்றைய அரசியல், வலதுசாரித் திசைக்கு மாறிச் செல்கிறது என்ற கணிப்பிற்கு உட்படுத்தியே இந்திய அரசியலைப் பார்க்க வேண்டும் என்றும் பேரா. பிரபாத் பட்நாயக் கூறுகிறார். உலக முழுவதும் இன்று தீவிர வலதுசாரிக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று வருவதனைச் சுட்டிக் காட்டும் அவர், அதற்கெதிராக இடதுசாரிகள் மட்டும் அல்ல, முதலாளித்துவ தாராளவாதிகள் கூட, ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பது குறித்தும், இதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அவர் விவாதிக்கிறார்.

பேரா. பட்நாயக் இதில் குறிப்பிட்டிருக்கும் வேலைப் பங்கேற்பு (Work Participation Rate) குறித்து இங்கு சற்று விளக்குதல் அவசியம். ஒரு நாட்டில், வேலையில் இருப்பவர்கள், உழைக்கும் வயதிலுள்ள வேலை தேடுவோர் என அனைவரும் சேர்ந்ததே உழைப்பாளர் படை (Work Force or Labour Force) எனப்படும். உழைக்கும் வயதில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்குள், வேலையில் இருப்பவரின் மொத்த எண்ணிக்கையே வேலைப் பங்கேற்பு (Work Participation Rate or Labour Force Participation Rate) விகிதம் எனப்படும். மீதியுள்ளோர் எண்ணிக்கை வேலையின்மை (Unemployment Rate) விகிதத்தில் வரும்.

பொருளாதார மந்த காலத்தில், வேலையின்மை விகிதம் சாதாரணமாக அதிகரிக்கும். அதே வேளையில், வேலை தேடும் பலர் விரக்தியின் விளைவாக வேலை தேடும் முயற்சியிலிருந்து வெளியேறி விடுவார்கள். அமெரிக்காவில் இன்று அது தான் நடக்கிறது. அப்படி அவர்கள் வெளியேறி விடுவதால் வேலையற்றோர் என்ற அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களுக்குள் அவர்கள் வர மாட்டார்கள். இதன் காரணமாக, ஒரு புறத்தில் வேலைப் பங்கேற்பு விகிதம் குறைந்தாலும், மறுபுறத்தில் வேலையின்மையும் குறைந்தது போன்றதொரு தோற்றப்பிழை உருவாகியிருக்கிறது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி ( 2, ஜூன் 2019) இதழில் வெளிவந்துள்ள அவரது கட்டுரையின் சாரம் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

*தொடரும் வலதுசாரி வெற்றிகள்!*


மோடி இங்கு வெற்றி பெற்றதற்கு முன்னும் பின்னுமான காலத்தில், உலகில் பல நாடுகளில் வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்று வரும் நிலைமை உள்ளது. நமது விவாதங்களில் நாம் இதனைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுகிறோம்.

இஸ்ரேலில் நேதான்யாஹு மீண்டும் தேர்வு. துருக்கியில் எர்டோகன் மீண்டும் தேர்வு. கண்டிப்பாக வராது என்ற கணிப்பின் பின்னணியில் ஆஸ்திரேலியாவில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி.

இடதுசாரிகளின் எழுச்சி என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வலதுசாரிகள் மீண்டு முன்னேறி வருகிறார்கள். பிரேசில் இதில் மிக மோசமான எடுத்துக்காட்டு. புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஜனாதிபதி ஜேயிர் போல்சனோரோ, பழைய இராணுவ ஆட்சியினைப் புகழ்ந்தது மட்டும் அல்லாமல், அந்த ராணுவம் மேலும் பலரை கொன்றிருக்க வேண்டும் எனவும் பேசியிருக்கிறார்.

அனைத்திற்கும் மகுடம் சூட்டுவது போல, ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல்களில் ஒரு மிகப் பெரிய வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல்களில், பிரான்சு நாட்டில் லே பென் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி, ஜனாதிபதி மேனுவல் மேக்ரோன் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, பிரான்சின் மிகப் பெரிய கட்சியாகவும், இத்தாலியின் துணைப் பிரதமர் மாட்டியோ சால்வினி-யின் தீவிர வலதுசாரிக் கட்சி இத்தாலியின் மிகப் பெரிய கட்சியாகவும் மாறியுள்ளன. ஜெர்மனியில் ஜனாதிபதி மெர்க்கெல் –லின் கட்சி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய வாக்குகளை ஒப்பிடும்போது ஒன்பது சதவீத வாக்குகளை இழந்திருக்கிறது. ஆல்டெர்னேடிவ் ஃபார் ஜெர்மனி என்ற வலதுசாரிக் கட்சியின் வாக்குகள் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹங்கேரியில் கூட விக்டர் ஓப்ரான் தலைமையிலான வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

*வலது திருப்பம் ஏன்?*

மோடியின் வெற்றி பெருமளவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாகவே எனினும், உலகளாவிய வலதுசாரித் திருப்பத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என அதைப் புறந்தள்ளி விடக்கூடாது. இப்படி வலது திசை நோக்கி ஒரு தீவிரமான போக்கு ஏன் என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும் அல்லவா? 

பூர்ஷ்வா தாராளவாதிகள், இந்தத் திருப்பத்தின் பின்னணியில் இருக்கும் கட்சிகள் இயக்கங்கள் ஆகியவற்றிற்குள் நிலவும் பொதுத் தன்மையினைப் பார்க்கத் தவறுகின்றனர். மாறாக, அவர்களை ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்கள், எதிரானவர்கள், குடியேற்றத்திற்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் எனத் தரம் பிரிக்கின்றனர். அதே போன்று இந்தியாவிலும் அதனை இந்துத்துவா தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றனர். ஐரோப்பாவின் தேர்தல் முடிவுகள், அமெரிக்காவில் வலுவாகிவரும் டோனால்டு டிரம்ப்பின் பிடி போன்ற உலக அரசியல் போக்குகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லாதது போன்றே அவர்கள் இதனை ஆய்வு செய்கின்றனர்.


மார்க்சிய ஆய்வினில் இதை எல்லாம் புறந்தள்ள முடியாது. இத்தகைய உலகப் போக்குகளுக்கு இடையில் உள்ள பொதுத்தன்மையினையும், வர்க்கக் கட்டமைப்பினையும் கணக்கில் கொள்ளாமல் அத்தகைய ஆய்வினைச் செய்ய முடியாது. அப்படியானால், இந்த வலதுசாரித் திருப்பம் ஏன்?

*மார்க்சிய ஆய்வு!*

2008ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பல்வேறு வெளிப்பாடுகள் தானே இவை? கொஞ்சம் மீள்வதும், மீண்டும் மூழ்குவதும் என இந்த நெருக்கடி தொடர்ந்து வருகிறது. பந்தைப் பூமியில் அடிக்கும் போது பந்து குதிக்கும், மீண்டும் தரை நோக்கிச் செல்லும். பந்து குதித்து எழும் போது, வளர்ச்சி என்று கூச்சலிடுவதும், மீண்டும் தரை நோக்கிச் செல்லும் போது வாயைப் பொத்திக் கொள்வது என்பதும் நடந்து வருகிறது. அது போன்றது தான் மாறி மாறி வரும் நெருக்கடியின் தன்மை.

கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் வேலையின்மை இன்று 4 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும் போது, இந்த வாதம் எப்படி எடுபடும் எனக் கேள்வி வரும். ஆனால், விஷயம் மிக எளிதானது. 2008ம் ஆண்டிற்கு முன்னர் இருந்த வேலையில் பங்கேற்போர் விகிதம் (Work Participation Rate) அதே அளவில் இருப்பதாக வைத்துக் கொண்டால், இன்று அந்நாட்டின் வேலையின்மை 8 சதவீதமாக இருக்குமே ஒழிய, இன்றைய அதன் அதிகாரபூர்வமான 4 சதவீதமாக இருக்காது.

*நெருக்கடியும், வேலையின்மையும்*…

இவ்வாறு நெருக்கடியும் வேலையின்மையும் நிறைந்த சூழலில் தான் உலகம் முழுவதும் வலதுசாரித் திருப்பம் நடைபெற்று வருகிறது. முதலாளித்துவ தாராளவாதிகள் , இந்த நெருக்கடி அது உருவாக்கியிருக்கும் வேலையின்மை இரண்டும் இருப்பதாகவே ஏற்றுக் கொள்வதில்லை. வலதுசாரிகள் வேலையின்மை ஏற்படுத்தி இருக்கும் இன்னல்களையாவது குறைந்த பட்சம் ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் அந்தக் கேடுகளுக்கு சமூக பொருளாதார அமைப்பு தான் காரணம் என்பதை ஏற்பதில்லை. குடியேறிய வெளி நாட்டினர் தான் காரணம் என்று சொல்லி குடியேற்றத்தினைத் தடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மக்கள் எந்த நாட்டிற்கும் போய் வர முடியும் என்ற நிலையில், சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தினையே எதிர்க்கின்றனர்.

முதலாளித்துவ தாராளவாதிகள் நெருக்கடி இருப்பதையே ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் முன்பு மாற்றுத் திட்டத்தை வைப்பதில் இடதுசாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர். இதைப் பயன்படுத்தும் வலதுசாரிகள் குடியேற்றத்திற்கு எதிரான திட்டத்துடன் மக்களைத் தங்கள் பின் திரட்டுகின்றனர். வலதுசாரிகளின் வளர்ச்சி இந்த அடிப்படையிலானதே ஆகும்.

*இந்தியாவில்* …..

2014ல் மோடி ஆட்சிக்கு வந்த போது “வளர்ச்சி” குறித்து பேசித்தான் வந்தார். அந்த சமயம் ஐ.மு.கூ 2 ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி குறைந்திருந்தது. அனைவரின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்று கூறிய நவீன தாராளவாதத்தின் வாக்குறுதிகள் நிறமற்று வெளுத்துப் போகத் தொடங்கிய நேரம் அது. ஆனால், மோடி தனது பதவிக் காலத்தில் “வளர்ச்சி” , “முன்னேற்றம்” குறித்து ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதனால் தான் இந்தத் தேர்தல் பரப்புரையில் அவை குறித்து அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. “பயங்கரவாதத்தை ஒழிப்பது”, “தேசத்தின் பாதுகாப்பைப் உறுதி செய்வது” , “பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிப்பது”, “இந்துத்துவாவினை நிறுவுவது” என்றே அவரது பரப்புரை முழுவதும் அமைந்தது. இப்படியே பேசினால், அவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி என்னவாயிற்று என்பது போன்ற சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டாம் அல்லவா?

நவீன தாராளவாதத்தின் இந்தத் தோல்வி, அதிகாரம் காங்கிரஸ் என்ற நவீன தாராளவாதக் கட்சியிடமிருந்து ஒரு வலதுசாரிக் கட்சிக்கு மாறிச் செல்வதற்கு துணை புரிந்தது. நவீன தாராளவாதம் “வளர்ச்சியினை” உருவாக்கும் என்று சொல்லும் திறனை காங்கிரஸ் கட்சி இழந்தது. ஆட்சியின் தொடக்க காலம் தவிர அதன் பின்னர் பா.ஜ.க “வளர்ச்சி” குறித்து பேசவே இல்லை. கார்ப்பரேட் – நிதி முதலாளிகளை திருப்தி செய்யும் வகையில் தனது உத்திகளை மாற்றிக் கொண்டது. ( எக்சிட் போல் கருத்துக் கணிப்பு வந்தவுடன், சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தது இதனால் தானே? )

ஆனால், இந்த மாற்றங்கள் எல்லாம் நிரந்தரமானவை அல்ல. நவீன தாராளவாதம் உருவாக்கும் நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிகள் குறித்தோ, கோடிக்கணக்கில் வேலையின்றித் தவிக்கும் இளைஞர்களுக்கு வேலைகளை உருவாக்குவது குறித்தோ பா.ஜ.க விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதுவும் தெரியாது.

நவீன தாரளவாதப் பாதையில் தொடர்வது குறித்து சிரமங்களை காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் உணர்ந்திருப்பது தெரிகிறது. அதனால் தான் அடித்தட்டு மக்களுக்கு மாதம் ரூ.6,000 என்ற திட்டத்தை காங்கிரஸ் அறிவிக்க வேண்டி வந்தது. ஆனால் அதற்கான பணம் எங்கிருந்து வரும் என அவர்களால் சொல்ல முடியவில்லை. சொல்லியிருந்தால் அதற்கு ஒரு ஏற்பு இருந்திருக்கும். இல்லை என்றால், அதை யார் நம்புவார்கள். அது வெறும் தேர்தல் வாக்குறுதி என்றே மக்கள் கடந்து சென்று விட்டனர்.
காங்கிரசுக்கு எப்படி இதுவெல்லாம் தெரியாதோ, அதே போன்று பா.ஜ.கவிற்கும் பொருளாதாரத்தினை முன்னெடுத்துச் செல்லும் உத்திகள் எதுவும் தெரியாது. அது முன்வைக்கும் தேசியம் அதிக காலம் செல்லுபடியாகாது. பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு என்று தினசரி மந்திரமாக மக்களிடம் அதைச் சொல்லிக் கொண்டே தொடர்ந்து செல்ல முடியாது. மக்கள் வேலையின்றி பசியும் பட்டினியுமாக நிற்கும் போது அது எப்படி சாத்தியம்?

மோடி பொருளாதாரம் குறித்து ஒன்றும் செய்யப் போவதில்லை என்றாலும், பொருளாதாரம் அவரை சும்மா விடாது. தொழில் மந்தமும், பரிவர்த்தனைச் சமன்பாட்டுப் பிரச்சினைகளும் அதிகரித்து வரும் நிலையில், நெருக்கடி முற்றியே தீரும். அப்போது மோடியின் கைகளில் தீர்வுகள் இருக்காது. (அந்தக் கட்டத்தில், பொருளாதாரத்தினை காப்பது மேலும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும்.)

*அடிப்படை உண்மைகளை மாற்ற முடியாது!*

பற்றி எரியும் மக்கள் பிரச்சினைகளுக்கு நவீன தாராளவாதக் கட்சிகளால் தீர்வு காண முடியாத போது, இடதுசாரிகள் மட்டுமே நவீன தாராளவாத முதலாளித்துவத்தினைக் கடந்து செல்ல முடியும். அது தான் நெருக்கடியிலிருந்து மீள வழி வகுக்கும். அந்தப் பாதை இறுதியில் முதலாளித்துவத்தையும் கடந்து செல்வதாக இருக்கும். இது இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்துகின்ற ஒன்று.

சுருங்கக் கூறின், நாம் வரலாற்று ரீதியான நிகழ்ச்சிகளின் இணைவினைப் பார்க்கிறோம். பொய்யான மற்றும் பிளவுபடுத்தும் உத்திகளின் மூலம் மக்களை வசப்படுத்துவதில் வெற்றி பெறும் வலதுசாரி சக்திகள், ஒரு குறுகிய காலத்திற்கு வலுவாகத் தோன்றக் கூடும். ஆனால் , வேலையின்மை மற்றும் பிற அவலங்களிலிருந்து மக்களை அவர்களால் மீட்க முடியாது. 
இருக்கும் அமைப்பு நிலைத்தும் நீடித்தும் இருப்பது போல வரலாற்றில் பல தருணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், புதிய தருணங்கள் வரும் போது இவை அனைத்தும் பழைய நிலையில் நீடிக்க முடியாது. இது இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கே பொருந்தும். வலதுசாரிகள் இங்கேயும், வேறு நாடுகளிலும் தேர்தல் வெற்றி பெற்று நிற்கின்றனர். ஆனால், அதன் மூலம் அடிப்படை உண்மைகளை மாற்றி அமைத்து விட முடியாது. 




#தீக்கதிர் #07.#06.#2019 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete