சந்திரனுக்குப் பாய்ந்தது ஒரு விண்கலம்,
செவ்வாய்க்கும் கூட
விரைவில் செல்லுமாம்.
ஒரு ராக்கெட்டில் ஒரே நேரத்தில்
நூற்றுக்கும் மேல் செயற்கைக் கோள்கள்
விண்ணில் சீறிப் பறந்து
வட்டப்பாதையில் நிலை கொண்டதும்
இந்தியாவின் தலை நிமிர்ந்ததாம்.
கசங்கிப் போகும் ரூபாயைத் தவிர்க்க
கணிப்பொறியில்தான் இனி பரிமாற்றமாம்.
காகிதப் பயன்பாடே இல்லாமல்
மின்னஞ்சலில்தான் எல்லாமே.
ஆதார் அட்டையைத் தேய்த்தால்தான்
கழிவறைக் கதவும் திறக்குமாம்.
மூச்சு விடுவதும் முனகுவதும் கூட
அரசு கண்காணிப்பில் வருமாம்.
டிஜிட்டலில் இந்தியாவில்
எல்லாமே மாறுமாம்.
இந்தியா வேகமாய்
முன்னேறவும் செய்யுமாம்.
கழிவை சுத்தம் செய்ய
சாக்கடைக் குழியில் இறங்கி
மரணிப்பது மட்டும் மாறாதாம்.
எது எதற்கோ இயந்திரம் வந்தாலும்
இதற்கு மட்டும் வாராதாம்.
போங்கடா,
நீங்களும் உங்க டெக்னாலஜியும்.
(கடலூர் சம்பவத்தின் போது எழுதியது)
No comments:
Post a Comment