Sunday, March 19, 2017

வருந்துகிறேன் ராஜா





அன்புள்ள இளையராஜா அவர்களுக்கு,

இன்று காலை அச்செய்தியை படிக்கையில் மிகவும் அதிர்ந்து போனேன். 

உங்களின் வழக்கறிஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், சரண், சித்ரா உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பிய செய்திதான்.

நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்பது இந்த வலைப்பக்கத்திற்கு தொடர்ச்சியாக வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும். என் பயணங்கள் எல்லாமே இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இருந்ததில்லை. நேற்று சென்னைக்கு ஒரு வாடகை வாகனத்தில் சென்றிருந்தோம். அந்த வாகனத்தில் இருந்த தொலைக்காட்சியில் எல்லோரும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டு வந்தார்கள். படம் முடிந்து இளையராஜாவின் பாடல்கள் ஒலித்ததும் "இப்போதுதான் பயணம் செய்யும் உணர்வே வருகிறது" என்றேன். அந்த அளவிற்கு உங்கள் ரசிகன் நான்.

ஆனாலும் வேறு வழியில்லை. மனதில் உள்ளதை சொல்லித்தானே ஆக வேண்டும்.  நமக்கு பிடித்தவர் என்பதற்காக அமைதியாக இருந்தால் நாளை மோடியையோ அல்லது ஜெமோவையோ விமர்சிக்கும் தார்மீக உரிமை எனக்கு கிடையாது.

காபிரைட தொடர்பான சட்டரீதியாக விஷயங்களுக்கு நான் செல்லவில்லை.  உங்கள் பாடல்களை சட்டரீதியான கேஸட், சி.டி, டௌன்லோட் ஆகியவை மூலமே கேட்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அதற்கான உரிமை உங்களுக்கானதா அல்லது நீங்கள் அமைத்த இசைக்கு உங்களுக்கு ஊதியம் அளித்த தயாரிப்பாளருக்கானதா என்பதை யாராவது வழக்கறிஞர்கள் தெளிவு படுத்தினால் நல்லது. தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கான உரிமை யாருடையது என்பதிலும் தெளிவு வேண்டும்.  

நீங்கள் இசையமைத்த பாடலை திருடி தங்களுடையது என்று யாராவது சொன்னால் அது தவறு.  திருட்டு வி.சி.டி போல திருட்டு கேஸட்டும் தவறுதான் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உங்கள் பாடலை மேடையில் பாட வேண்டுமென்றாலும் அதற்கு ராயல்டி தர வேண்டும் என்பதுதான் உதைக்கிறது. 

காபிரைட், காபிரைட் என்று சொல்வதால்தான் சில கேள்விகள் எழுகிறது. 

இசை என்பது ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம். அந்த ஏழு ஸ்வரங்களைத்தான் மாற்றி மாற்றி போட்டு ஏமாற்றி வருகிறோம் என்று நீங்களே பல முறை சொல்லியுள்ளீர்கள். அந்த ஏழு ஸ்வரங்களை கண்டுபிடித்தவர்கள் யார்? அவர்கள் அதற்கு காபிரைட் பெற்றுள்ளார்களா? இல்லை அவர்களுக்கு நீங்கள் ராயல்டி தருகிறீர்களா? 

கண்டிப்பாக கிடையாது.

எல்லாமே ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம் எனும் போது யாருக்கு யார் ராயல்டி தருவது?

கவரிமான் படத்தில் "ப்ரொவபாரமா" சிந்துபைரவி படத்தில் "மரிமரி நின்னே" என்ற தியாகையர் பாடல்கள், சிந்து பைரவி படத்திலேயே முத்துசாமி தீட்சிதரின் "மஹா கணபதி" , எண்ணற்ற பாரதி பாடல்கள் என்று பலவற்றை பயன்படுத்தியுள்ள நீங்கள், அவற்றுக்கெல்லாம் ராயல்டி கொடுத்திருந்தால் அந்த விபரத்தை சொல்வது நலம்.

நாட்டுப்புற பாட்டுக்களை பரவச் செய்த பெருமை நிச்சயமாக உங்களுடையதுதான். ஆனால் ஏற்கனவே காலம் காலமாக கிராமப் புறங்களில் இருந்தவற்றைத்தானே நீங்கள் பயன்படுத்தினீர்கள். மெருகேற்றினீர்கள்?
 

அடுத்த சந்தேகம்.

ஒரு பாடலை உருவாக்கும் குழுவின் தலைவர் கண்டிப்பாக இசையமைப்பாளர்தான். இயக்குனர், கதாசிரியர், கவிஞர், பாடகர்கள், இசைக்கலைஞர்கள், ஒலிப்பதிவாளர் என அனைவரும் தங்கள் பணியை சரியாக செய்தால்தானே அந்த கற்பனைக்கு வடிவம் கிடைக்கும்! அந்த பாடலின் உருவாக்கத்தில் பங்கேற்ற ஒருவருக்கு அப்பாடலில் உரிமை கிடையாதா? அவர் ஊதியம் வாங்கி பாடினார் என்றால் நீங்கள்????

இன்றைக்கு ஏராளமான தொலைக்காட்சிகள் உள்ளன. ஃஎப்.எம் வானொலிகள், இணைய தளங்கள் என்று ஏராளமான ஊடகங்கள் வந்து விட்டன. ஆனால் உங்கள் பாடல்களை பிரபலமாக்கியது, உங்கள் புகழை மக்களுக்கு  கொண்டு சென்றது எல்லாமே கிராமத்து திருவிழாக்கள் தொடங்கி நகரத்து திருமணங்கள் வரை நடைபெற்றுக் கொண்டிருந்த மெல்லிசை மேடைக் கச்சேரிகள்தானே!  இன்று மேடைக் கச்சேரிகள் என்பதும் நலிந்து கொண்டிருக்கிறது. எங்கள் பாட்டை பாடினால் காசு தர வேண்டும் என்று ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தால் அந்த பாரம்பரியம் முற்றிலுமாக அழிந்து விடும்.

உங்கள் இசைக்கு நல்ல ஊதியம் கிடைக்க வேண்டும். உங்கள் பாடலுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். இதில் எல்லாம் எனக்கு மாற்றுக் கருத்து கிடையவே கிடையாது. 

ஆனால்  உங்கள் பாடல் ஒவ்வொரு முறை எங்காவது, எந்த மூலையிலாவது, எப்படியாவது ஒலிக்கும் போதெல்லாம் உங்களுக்கு பணம் வந்து விழுந்து கொண்டே இருக்க  வேண்டும்  என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது. 
 

இது கார்ப்பரேட் நடைமுறை என்றால் அது நாசமாகப் போகட்ட்டும்.
 

 

 

27 comments:

  1. சரியான கேள்விகள் தோழர்...

    ReplyDelete
  2. மிகவும் சரியான கருத்துக்கள். ஞானி என்பதால் பட்டும் படாமலும்தான் இருப்பார் போலும் ! விரைவில் கிடைக்குமா விடை?

    ReplyDelete
  3. இராசா சொன்னதை சரியாக உள்வாங்கிய பிறகுதான் இந்தப் பதிவை எழுதினீர்களா???

    ReplyDelete
  4. எனக்கு வேறு விதமா சொல்ல வருது, ஆனால் என் கோபத்தை கொட்டும்., இடம் இதுவல்ல என்பதால் அதிக பட்ச நாகரீகத்துடன் ராசையா வுக்கு 1 கேள்வி உம்மை இசை ஞானி என்றும இசை கடவுள் என்றும், கொண்டாடிய மக்களிடம் தாங்கள் கட்டை வி(கு)ரலை கேட்டு பெறுவது தான் மரி யாதையா.

    ReplyDelete
  5. தவறாக புரிந்து கொண்டு எழுதப்பட்ட அபத்த கட்டுரை

    ReplyDelete
    Replies
    1. அபத்தமாக புரிந்து கொண்டு தவறாக எழுதப்பட்ட பின்னூட்டம்

      Delete
    2. I do not think SBP has gone to US to sing for charity. He is minting money in crores Boss.As per the agreement with the Producer ,he is having the rights. Do you know how much money Airtel/Vodafone and other providers are making on rightone ... They are getting it free and charging us ...Is it correct? If Raja sir has to give it for free ,are not we get the ringtone free ...Think about it ..

      Delete
  6. இரா பற்றி பொதுவாக சொல்லப்படும் கருத்து ;" எனக்கு அவர் இசை பிடிக்கும். அவரைப் பிடிக்காது" என்பது. அதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே வருகிறார். பரிதாபம்.

    ReplyDelete
  7. இளையராஜாவுக்கு சடடரீதியான உரிமை உண்டு . திரைப்பட பாடல்கள் விடயத்தில் இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் உரிமை உண்டு என்று இந்திய அளவில் சட் ட ஒழுங்கை ஏற்கனவே செய்து விட் டார்கள்
    ஆரம்ப காலத்தில் தயாரிப்பாளர்கள் வசம் மட்டுமே இருந்தது. பின் விழித்து கொண்ட ஹிந்தி இசை அமைப்பாளர்கள் இந்த ஒழுங்கை செய்து கொண்டார்கள் .
    படம் இசையமைக்க முன் அக்ரீமண்ட் இல் இரண்டு தரப்பும் ஒத்து கொள்வார்கள்
    உலக ளவில் கூட இதுதான் நடைமுறை என்று நினைக்கின்றேன்
    .
    .
    ஆனால் ராஜா இப்படி நண்பர்கள் விடயத்தில் கூட கறாராக இருப்பது சின்ன பிள்ளைத்தனத்தை விட கேவலமானது

    ReplyDelete
  8. Very important and critical questions!! Raja Sir is totally misguided and I am sure this will be seen by him......

    ReplyDelete
  9. சிலர் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு இளையராஜா பாரதியார் பாடல்கள், தியாகராஜ கீர்த்தனைகள், திருவாசகம் பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்தாரா என்று உளறுகிறார்கள். பாரதியார் படைப்புகள்தான் உலகத்திலேயே நாட்டுடமை ஆக்கப்பட்ட முதல் படைப்பாக இருக்கவேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் வேங்கடாசலபதி கூறுகிறார். 1949 ஆம் ஆண்டு பாரதியாரின் உறவினர்களுக்கு மதராஸ் மாகாண அரசு சன்மானம் வழங்கி இதைச் செய்தது. பதிவுரிமை வைத்திருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அதை அப்போதைய மாகாண பிரதமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கேட்டுக் கொண்டதால் பல போராட்டங்களுக்குப் பிறகு உரிமைத்தொகை ஏதும் கோராமல் விட்டுக் கொடுத்தார். சில உரிமைகள் பாரதியாரின் சகோதர விஸ்வநாத ஐயரிடம் இருந்தது. நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை யார் வேண்டுமானாலும் உரிமைத்தொகை கொடுக்காமல் பயன்படுத்தலாம்.

    அடுத்தது நூல்கள், இசை, பாடல்கள் போன்றவற்றுக்கான பதிவுரிமை அதன் ஆசிரியர், இசையமைப்பாளர் போன்றோரின் காலத்திற்குப்பின் அறுபது ஆண்டுகள் வரை மட்டுமே. அதன் பின் அது தானாகவே நாட்டுடைமையாகி விடும். வாரிசுகள் யாராவது உரிமை கோரினால் அரசாங்கம் அதற்கான சன்மானம் அளிக்க வேண்டும். இதன்படிப் பார்த்தால் தியாகராஜர், மாணிக்கவாசகர் போன்றவர்களின் படைப்புகள் அறிவிக்கப்படாமலே நாட்டுடைமையாகி விட்டது. அவர்கள் வாரிசு என்று யாராவது உரிமை கோரினால் அரசாங்கத்திடம்தான் உரிமை கோர வேண்டும்.

    ReplyDelete
  10. இளையராஜா எஸ்.பி.பி மேடைக் கச்சேரிகளுக்கு தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்றதும் சிலர் இதுதான் சாக்கு என்று இளையராஜாவின் ஆணவத்தைப் பார்த்தீர்களா என்று தங்கள் வன்மத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டனர். சிலர் புத்திசாலித்தனமாக இளையராஜா சம்பளம் வாங்கிக் கொண்டுதானே இசையமைத்தார், அதற்கு மேல் அவருக்கு என்ன உரிமை என்கின்றனர். இவற்றைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும்.

    பொதுவாக அறிவுசார் சொத்துரிமை மூன்று வகைப்படும். முதல் வகை பேடண்ட்(காப்புரிமை). இது அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. இரண்டாவது காப்பிரைட் (பதிவுரிமை ). இது கலைப்படைப்புகளுக்கான பயன்படுத்தும் உரிமை. மூன்றாவது டிரேட்மார்க் (வணிக முத்திரை ).இது வணிகரீதியாக வெற்றிபெற்ற பொருட்களின் முத்திரை, பெயரைப் பாதுகாப்பதற்கற்காக.

    இளையராஜா சம்பளம் வாங்கியது படைப்பை உருவாக்க அவர் செலவிட்ட நேரத்திற்கான கூலி.ஆனால் அவரின் படைப்புத்திறனுக்கான பொருளாதார அங்கீகாரம்தான் காப்பிரைட் உரிமையின் கீழ் அவர் கேட்கும் ராயல்டி.பொதுவாக அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களின்படி இசைக்கான காப்பிரைட்டில் முதல் போட்ட தயாரிப்பாளர், படைப்புத் திறனைக் காட்டிய இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கே உரிமையுண்டு. பாடகர்கள் தங்கள் குரல்வளத்தைப் பயன்படுத்துகிறார்களே தவிர கற்பனையிலிருந்து புதிதாக ஒன்றை உருவாக்குவதில்லை. ஆகவே அவர்களுக்குச் சம்பளம் மட்டும்தான்.

    சில இசையமைப்பாளர்கள் தங்கள் காப்பிரைட்
    உரிமையைத் தயாரிப்பாளரிடமே விற்று விடுவார்கள். இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு தன் பெரும்பாலான பாடல்களின் காப்பிரைட்டில் தனக்கும் பங்கு உள்ளது என்று அறிவித்தார். ஆகவே வணிகரீதியாக தன் பாடல்களை யார் பயன்படுத்தினாலும் அதற்குத் தனக்கான ராயல்டியை கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் வரும் ராயல்டியில் தயாரிப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் உரிய பங்கை அளிப்பேன் என்றார். ரஹ்மான் ஒருமுறை இளையராஜா தன் காப்பிரைட் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் சில தீவுகளை வாங்கியிருப்பார் என்றார்.

    உடனே சிலர் ராஜா கூட மற்ற இசையமைப்பாளர்கள் சிலரின் மெட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா என்கிறார்கள். அது வேறு வழக்கு. அது போன்ற பாடல்களின் இசையமைப்பாளர்கள் தங்கள் பாடலுக்கும், பிரதி எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாடலுக்கும் குறைந்தபட்சம் 50% ஒற்றுமை இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.

    ReplyDelete
  11. ''தவறாக புரிந்து கொண்டு எழுதப்பட்ட அபத்த கட்டுரை''
    CORRECT


    ReplyDelete
  12. ''தவறாக புரிந்து கொண்டு எழுதப்பட்ட அபத்த கட்டுரை''


    ''அபத்தமாக புரிந்து கொண்டு தவறாக எழுதப்பட்ட பின்னூட்டம்''
    WRONG

    ReplyDelete
  13. இவரும் பணம் வாங்கி கொண்டு தானே இசை அமைத்தார். பாட்டு எழுதியவர் பணம் வாங்கி போய்விட்டார்கள். ஆக உரிமை பணம் கொடுத்து அதனை கொண்டு வந்த தயாரிப்பாளர் ஏமாளியா? முழு உரிமையும் அவருக்கே போவதே நியாயம்.

    ReplyDelete
  14. the below is Wrongly understood and wrritten ji

    coz. IR meant to say for big events orgnized for business

    -by small brother.

    இன்றைக்கு ஏராளமான தொலைக்காட்சிகள் உள்ளன. ஃஎப்.எம் வானொலிகள், இணைய தளங்கள் என்று ஏராளமான ஊடகங்கள் வந்து விட்டன. ஆனால் உங்கள் பாடல்களை பிரபலமாக்கியது, உங்கள் புகழை மக்களுக்கு கொண்டு சென்றது எல்லாமே கிராமத்து திருவிழாக்கள் தொடங்கி நகரத்து திருமணங்கள் வரை நடைபெற்றுக் கொண்டிருந்த மெல்லிசை மேடைக் கச்சேரிகள்தானே! இன்று மேடைக் கச்சேரிகள் என்பதும் நலிந்து கொண்டிருக்கிறது. எங்கள் பாட்டை பாடினால் காசு தர வேண்டும் என்று ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தால் அந்த பாரம்பரியம் முற்றிலுமாக அழிந்து விடும்.

    ReplyDelete
  15. நான் உங்களின் பல கட்டுரைகளோடு ஒத்துப் போகிறேன். ஆனால் இது அதில் வரவில்லை. அவரிடம் உரிமை இல்லாமல் அவர் பேசவில்லை.
    அவர் அனைவரின் உரிமைக்காகவும் தான் இதை கேட்கிரார். 30 ரூபாய்க்கு திருட்டு டி.வி.டி வாங்கும் , திருட்டு சாஃப்ட்வேர் உபயோகிக்கும் சமூகத்தில் ராயல்டி கெட்ட வார்த்தைதான்.
    Pugazhendhi M

    ReplyDelete
    Replies
    1. Excellent Reply.. எல்லாமே இலவசமாக அனுபவித்து வந்து விட்ட ஒரு சமூகத்திற்கு இது கஷ்டமாகத்தான் இருக்கும்.. குறை சொல்பவர்கள் சட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள். S.P.B மேடையில் சும்மா பாடுவாரா?

      Delete
  16. முக நூலில் இதை குறித்து Vvbala Bala எழுதியதையும் ஒரு முறை வாசிக்கவும்

    ReplyDelete
  17. கர்னாடக இசைக் கீர்த்தனைகளுக்கு அடிப்படையான தியாகையர் உஞ்சவிருத்தி (அன்றாடம் தெருக்களில் பஜனை பாடி, அதில் கிடைக்கும் அரிசியை வைத்து) நடத்தி வாழ்க்கையை நடத்தினார்.

    தியாகையரை போற்றுவதாகச் சொல்லும் இளையராஜாவும் எஸ்.பி.பி யும் அவர் பாடிய "நிதி சால சுகமா?" கீர்த்தனையைப் பாடி இச்சர்ச்சையை முடிக்கட்டும்.

    இளையராஜாவை பிடிக்காததால் இந்த பதிவை எழுதவில்லை. வெறித்தனமாக பிடிக்கும் என்பதால் எழுதப்பட்டது.

    இது எஸ்.பி.பி யோடு மட்டும் முடியக்கூடிய பிரச்சினையாக இருந்தாலும் எழுதியிருக்க மாட்டேன். நாளை மேடைக்கச்சேரிகளை தங்களின் பிழைப்பிற்காக நம்பியிருக்கும் எண்ணற்ற கலைஞர்களையும் தாக்கும் என்ற ஆதங்கம்தான் காரணம்.

    ஹேமநாத பாகவதர்கள் திருவிளையாடலோடு முடிந்து போகட்டும்

    ReplyDelete
  18. Ilayaraja is not correct. Today, we are singing songs of Legend Thyagaraja, Muthuswamy Dikshidhar, MS Subbalakshmi ete. Sometimes lot of artistes deliver cinema Dialogues like the yesteryear actors. As far as copyright is concerned, when his songs are coming in the form of CD or Casette, the Company which produces the CD, Casette is bound to give royalty to the singer on the sales of the CDs/Casette, provided such agreement exists. As far as I know, for old KL Saigal songs CD, Gramaphone records KL Saigals descendts are getting royalty. If the position taken by Ilaya Raja is correct, nobody can speak the cinema dialogues in a stage as dialogue writer can claim royalty. For remake of a film from Hindi to Tamil, royalty is to be given to the Hindi Producer and Vice-Versa. I am confident, Ilaya Raja is stretching the law too far. He can stretch a song, but not the law. I hope,good sense will prevail upon Ilaya Raja. I appeal to him as his ardent fan.

    ReplyDelete
  19. இந்தத்தர்க்கம் பொருத்தமாகவே இல்லை. அனைத்து கதைகளும், பாடல் வரிகளும் 247 தமிழ் எழுத்துக்கள் மூலமாகத்தான் வருகின்றன என்பதால் நூல்கள், பாடல் வரிகள், அனைத்தும் எல்லோருக்கும் சொந்தமாகுமா?

    பாடல் ஒலிப்பதற்கும், இலவசமாக பாடுவதற்கும் பணம் கேட்கவில்லை. அதை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும்போதுதான் கேட்ட்கப்படுகின்றது.

    ReplyDelete
  20. என்ன ஒரு தமிழகம் இது?
    இராமன் அவர்கள் பாரூக் மதவெறியர்களால் படு கொலை செய்யபட்டதை கண்டித்தும் ஒரு பதிவு போட்டிருந்தார். அன்பே சிவத்தை தவிர இங்கே வந்தவங்க யாருமே அங்கே வந்து அந்த மதவெறி படுகொலையை கண்டிக்கவில்லை.
    ஆனால் இளையராஜா கண்டிக்க போட்டு தாக்க இங்கே எத்தனை தமிழர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்?

    ReplyDelete
  21. Well said by Mr.Jayadev Das.
    Srini

    ReplyDelete
  22. சில நாட்களுக்கு முன்னர் இந்த பதிவை படித்த போது எனக்கு அதில் அதிக மாறுபாடு இல்லை. வழக்கமாக பின்னூட்டங்களையும் படித்து விடுவேன் என்றாலும் அன்று படிக்க வில்லை.எனவே ஜெயதேவ் தாஸ் அவர்களின் கருத்தையும் கவனிக்க தவறி விட்டேன்.அதற்கு பின்னர் தான் பல்வேறு செய்திகளையும் தரவுகளையும் படித்தும் கேட்டும் உள்வாங்கிக் கொண்ட போது நான் இளையராஜாவின் செயலில் குறைகாண முடியவில்லை.எனக்கே சற்று சங்கடமாகி விட்டது.ஒருவரின் நியாயத்தை புரிந்து கொள்ளுமுன் தீர்ப்பு வழங்கும் நிலை எனக்கும் ஏற்பட்டு விட்டது.இதை நான் ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் உங்களுக்கும் இப்படியான தெளிவு கிடைத்திருக்க கூடும்.அப்படியானால் அதனை நீங்களும் பதிவு செய்ய முன்வரலாம் என்பதற்கே.

    மற்றபடி நீங்கள் எழுதிய ஒரு மறுமொழி எனக்கு ஆச்சர்யம் தந்தது.
    //”கர்னாடக இசைக் கீர்த்தனைகளுக்கு அடிப்படையான தியாகையர் உஞ்சவிருத்தி (அன்றாடம் தெருக்களில் பஜனை பாடி, அதில் கிடைக்கும் அரிசியை வைத்து) நடத்தி வாழ்க்கையை நடத்தினார்”//
    கர்னாடக இசை ஒரு களவாடிய இசை என்பதை ஆபிரகாம் பண்டிதர் போல அந்த காலத்திலேயே பிட்டு பிட்டு வைத்திருக்கும் போது இன்னும் நீங்களெல்லாம் இதனை தியாகையர்,தியகராஜர் கீர்த்தனை என்று பேசிவருவது வியப்பு. அதுபோகட்டும்.அது வேறு விவாதம்.(என்றாலும் இளையராஜா கர்னாடக இசையை மட்டுமே அடிப்படையாக கொண்டு கச்சேரி நிகழ்த்திய பாகவதரும் அல்ல)

    இதில் முக்கியமானது உஞ்சவிருத்தியோ வேறெப்படியோ ஒரு மனிதன் வாழ்க்கை முறையாக கொண்டு இருப்பதை பாராட்ட முடியுமென்றால் ஊர் வேலை செய்து இரவில் வீட்டிற்கு வீடு சோறும் குழம்பும் வாங்கித்தின்ற தொழிலாளர்களின் மேன்மையையும் பாராட்டி விட வேண்டியது தான்.முதலாளித்துவம் மோசமானது தான் ஆனால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையென்பது அளவிலும் தன்மையிலும் அதனினும் பன்மடங்கு கொடியது.போராடும் ஆசிரியர்களுக்கு இது போல கடந்த நூற்றாண்டு வரை ஆசிரியர்களுக்கு குருகுல முறையில் வழங்கப்பட்ட ‘தட்சிணை’ பற்றி அறிவுரை சொல்ல இயலுமா? முதலாளித்துவம் அதன் தன்மையில் இப்போது கொண்டிருக்கிற நெகிழ்வும் கூட அதற்காக பாட்டாளி வர்க்கம் இடையறாது நிகழ்த்திய போராட்டங்களின் காரணமாக தோன்றியவை தான்.இன்றைக்கு பணிக்காலத்தில் ஊதியமாகவும் பல்வேறு படிகளாகவும், பணி ஓய்வுக்கு பின்னர் பணிக்கொடை முதல ஓய்வூதியம் வரை கடந்த 19ம் நூற்றாண்டில் நமது நாட்டில் அறிந்திராத வார்த்தைகள் தாம்.இதைப்போல எல்லா உரிமையும் படைப்பாளிகளுக்கும் வேண்டுமல்லவா? அதனை நாம் அங்கீகரிக்க முன்னிற்க வேண்டுமல்லவா? இளையராஜா தனது பாடல்கள் என்று சொல்வதில் ஏதாவது உரிமை பிரச்சினை இருந்தால் அதில் பங்கு கேட்டு பாடலாசிரியர்களும் பாடகர்களும் கோரட்டும்.அதில் சட்டத்தின் நிலை பற்றி நீதிமன்றம் முடிவெடுக்கும்.அறிவுசார் சொத்துரிமை என்பதில் இசையமைப்பிற்கு மட்டுமே இடம் இருக்கிறதா அல்லது யாருக்கெல்லாம் இடமிருக்கிறது என்பதும் விவாதிக்க வேண்டியதே.ஆனால் ஒரு பெரிய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயில் பாடுவதாக ஒப்புக் கொண்ட ஒரு பாடகர் சட்டத்தின் நிலையை சொல்லி ஒரு விளக்கம் கோரினால் நான் இனிமேல் ”அந்த பாடல்களை” பாட மட்டேன் என்று சொல்வது என்ன வகையான நியாயம்.அப்படியானால் இலவசமாக அதாவது உரிமை கோரி வராதவர்களின் பாடல்களை மட்டும் பாடுவாராம்? இங்கே கவனிக்க வேண்டியது இளையராஜா காசு கேட்கவில்லை உரிமை கோருகிறார்.அதாவது என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்.இதனை அவர் 1 வருடத்திற்கு முன்னரே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அவருக்கான உரிமையை நிலை நாட்டிய தீர்ப்பின் நகலை காட்டி எல்லோருக்கும் சொல்லியுமிருக்கிறார்.இதனை எஸ்பிபி கவனிக்க தவறியிருக்கலாம் தான்.ஆனால் அவருடைய நிகழ்ச்சியின் ஸ்பான்சர் நிச்சயமாக அறிந்திருப்பார்.ஏனெனில் இங்கேயுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்திலேயே இசை நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் மன்ற நிர்வாகிகள் இசையமைப்பாளர்களிடம் அனுமதி வாங்க சொல்லும் போது அமெரிக்காவில் சொல்லியிருக்க மாட்டார்களா?

    ReplyDelete