Sunday, May 17, 2015

எண்ணெய் கத்திரிக்காய் - என் ஸ்டைலில்

சமையல் குறிப்பு  கொடுத்து நாளாகிவிட்டதல்லவா!

அதனால் இன்று எண்ணெய் கத்திரிக்காய் செய்வதற்கான குறிப்பை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த இணை உணவை தயாரிக்க ஏராளமான குறிப்புக்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன.

ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து எனது யோசனை ஒன்றையும் சேர்த்து இதோ உங்களுக்காக எண்ணெய் கத்திரிக்காய்.

வழக்கம் போல அதிகம் உழைப்பு தேவைப்படும் உணவு இது.

தேங்காய் துறுவல், மிளகாய் வற்றல், மல்லி, கசகசா, மிளகு எல்லாம் சேர்த்து எண்ணெயில் நன்றாக வறுத்து  வைத்துக் கொள்ளவும். வேர்கடலையை எண்ணெய் விடாமல் நன்கு  வறுத்து தோலை அகற்றவும்.  தேங்காய் கலவை மற்றும் வேர் கடலையை மிக்ஸியில் அறைத்து வைத்துக் கொள்ளவும்.

ஏழெட்டு தக்காளியை தனியாக சாறெடுத்து வைத்துக் கொள்ளவும்.



பிறகு கத்திரிக்காய்களை எடுத்து அவற்றை  நான்காகக் கீறி  அதற்குள்
இந்த தேங்காய் கலவையை அடைத்து  வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய்களை நன்றாக வேகும் வரை வதக்கவும். 

பிறகு குக்கர் பேனில் எண்ணெய் ஊற்றி முதலில் கடுகு வெடித்து பிறகு கடலைப் பருப்பை வதக்கி அதன் பின்பு சின்ன வெங்காயம், நறுக்கி வைத்த தக்காளியை வதக்கவும். தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி, மசாலா பொடி மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்,  இது கொதிக்கும் போது கத்திரிக்காயை போடவும். இதுவும் நன்றாக கொதிக்கும் போது தக்காளி சாறை ஊற்றி நன்றாக கொதித்த பின்பு  அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.





எல்லாவற்றுக்குமான இணை உணவாக இந்த எண்னெய் கத்திரிக்காய் அமையும் என்பதுதான் இதன் சிறப்பு.


பின் குறிப்பு 1 : சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிறன்று தயாரித்தாலும் பதிவிடுவதற்கான வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.

பின் குறிப்பு  2 : தக்காளி வதங்கிய பின்பு தண்ணீர் ஊற்றும் போது சமையலறை வந்த என் மகன் அதைப் பார்த்து "எண்ணெய் கத்திரிக்காய் என்று சொல்லி தண்ணீர் ஊற்றுகிறாயே, அப்ப இது தண்ணி கத்திரிக்காய்" என்று சொல்லி இதுவரை அந்த பெயரையே சொல்லி நக்கலடித்துக் கொண்டிருக்கிறான்.

 

2 comments:

  1. உங்கள் மகன் சொல்வது சரிதான். உங்கள் குறிப்பில் "தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய்களை நன்றாக வேகும் வரை வதக்கவும்" என்று உள்ளதே

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete