Saturday, May 9, 2015

புவனேஸ்வரில், அந்த நள்ளிரவில்

 http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d6/Dhauli-Giri-Shanti-Stupa-Bhubaneswar-Orissa.jpg

புவனேஸ்வர் - இந்த நகரின் பெயரைக் கேட்டால் எப்போதும் மனதில் அந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்தான் நினைவுக்கு வரும். 

பதினான்கு வருடங்களுக்கு முன்பாக ஒரிசா மற்றும் கொல்கத்தாவிற்கு விடுமுறை பயணச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு சென்றோம். முன்பே நன்றாக திட்டமிட்டு எல்.ஐ.சி விருந்தினர் விடுதி, ரயில் முன்பதிவு எல்லாம் செய்து கொண்டு புறப்பட்டோம்.

கிளம்புவதற்கு முன்பாக புதிதாக ஒரு அலைபேசி வாங்கி, ஒரிசா, மேற்கு வங்க மாநிலத்தில் எல்லாம் சேவை உண்டா என்று பல முறை கேட்டு பி.பி.எல் சிம்கார்ட் (அப்போது பி.எஸ்.என்.எல் சேவை தமிழகத்தைத் தாண்டி வரவில்லை)  வாங்கிக் கொண்டு புறப்பட்டோம்.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இரவு புறப்படும் ஹௌரா மெயில் மறுநாள் இரவு ஏழரை மணிக்கு புவனேஸ்வர் செல்ல வேண்டும். ஆனால் நான்கு மணி நேர தாமதத்தால் இரவு பதினோரு மணிக்கு மேல்தான் புவனேஸ்வர் சென்றது.

எல்.ஐ.சி அலுவலகத்திற்கு பின்பாக என்று கடிதத்தில் விலாசம் எழுதியிருந்தார்கள். டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு கெஸ்ட் ஹவுஸ் சென்றால் அந்த எல்.ஐ.சி அலுவலகம் பூட்டியிருந்தது. அந்த பகுதியில் மனித நடமாட்டமே இல்லை. சொல்லப் போனால் மனிதர்களின் உறக்கத்தை குரைத்து கலைக்க நாய்கள் நடமாட்டம் கூட இல்லை. 

ஆந்திர எல்லையை கடந்ததுமே பி.பி.எல் அலைபேசி தன் மூச்சை நிறுத்தியிருந்தது. (வேலூர் திரும்பி அந்த கடையில் சண்டை போட்டு காசை திரும்பி வாங்கியது தனிக்கதை). சரி ஏதாவது ஹோட்டலில் இரவு பொழுது தங்கலாம் என்று போனால் ஒரு விடுதியிலும் அறை கிடைக்கவில்லை. மருத்துவர்கள் மாநாடு ஒன்று அங்கே அப்போது நடந்து கொண்டிருந்தது.

டாக்ஸி டிரைவரும் பொறுமை இழந்து கொண்டிருந்தார். கடைசியா ஒரிசா சுற்றுலாத்துறை விடுதிக்கு செல்வோம். அங்கேயும் ரூம் இல்லையென்றால் நீங்கள் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் விடுங்கள் என்றார். 

அங்கேயும் அறை இல்லை. புவனேஸ்வரில் ஒரு உறவினர் இருந்தார். வேறு வழியில்லாமல் அவரை ஒரிஸா டூரிஸம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள, அவர் தனது வீட்டிற்கு  உடனே புறப்பட்டு  வரச்சொல்லி வழியை டூரிஸம் அதிகாரி (உதவி மேலாளர், அவரது பெயர் பெஹரா) சொல்லி அவர் டாக்ஸி டிரைவருக்கு சொல்லி, அவரது ஓட்டுனர் உரிமத்தையும் வாங்கி வைத்துக் கொண்டார். 

ஒரு அட்டை ஒன்றை என்னிடம் கொடுத்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு போனதும் இதில் கையெழுத்திட்டு கொடுத்து விடுங்கள். பிறகு ஓட்டுனர் உரிமத்தை வாங்கிச் செல்லுமாறும் சொன்னார். ஏன் என்று கேட்ட போது 

"நீங்கள் செல்லும் வழியில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வெறும் சவுக்குக் காடுதான். நீங்கள் எங்கள் மாநிலத்தின் விருந்தினர்கள். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பை ஓட்டுனருக்கு உணர்த்தவும்தான் இந்த ஏற்பாடு" என்றார் அவர்.

அந்த அக்கறையில் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைத்தது.

மறுநாள் காலை விருந்தினர் வீட்டில் உணவருந்தி விட்டு மீண்டும் கெஸ்ட் ஹவுஸ் சென்றால், அது எல்.ஐ.சி அலுவலகத்திற்கு பின்னால் இருந்த சாலையில் உள்ள ஊழியர் குடியிருப்பில் இருந்தது. சுற்றுச்சுவருக்கு உள்ளே இருந்த அந்த அறிவிப்புப் பலகை முந்தைய நாள் இரவில் கண்ணில் தென்படவில்லை.

 

3 comments:

  1. //சொல்லப் போனால் மனிதர்களின் உறக்கத்தை குரைத்து கலைக்க நாய்கள் நடமாட்டம் கூட இல்லை.//
    :)
    படத்தில் கட்டடத்தில் உள்ளது புத்தர் சிலையா?

    ReplyDelete
  2. உறவினர் பாராட்டிற்கு உரியவர்

    ReplyDelete
  3. பீகார் சென்று வந்த நண்பர்கள் சிலர் சொன்ன அனுபவம் வேறுவிதமாக இருந்தது. தங்களின் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. உறவினருக்கு கூட உறவினர் என்ற ஒரு இணைப்பு உதவுவதற்கு காரணமாக இருந்திருக்கும். ஆனால், அந்த சுற்றுலாதுறை அதிகாரியின் பொறுப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. மோசமான மாநிலத்தில் கூட நல்லவர்கள் உண்டு என்று காட்டுகிறது.

    மிக நல்ல பதிவு!

    ReplyDelete