Wednesday, May 20, 2015

தார்ச்சட்டிக்காரர்களே, இதுதான் நிஜமான இந்தியா


இன்று காலை செய்தித்தாளில் படித்த செய்தி கோபத்தை உருவாக்கியது. புதுடெல்லி மாநகரத்தில் காவிக் கூட்ட காலிகள் கையில் தார் டப்பாவை எடுத்துக் கொண்டு முஸ்லீம் மன்னர்கள் பெயரில் அமைந்துள்ள சாலைகளின் பெயர்ப் பலகைளை அழித்து வருகின்றார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்து கொல்லப்பட்ட வீதி நாடகக் கலைஞன் சப்தர் ஹஷ்மியின் பெயரில் அமைந்துள்ள சாலையும் கூட இந்த தார் அழிப்பிற்கு தப்பவில்லை.

எப்படியாவது சிறுபான்மை மக்களை கொதிப்படைய வைத்து இன்னொரு குஜராத் கலவரத்திற்கு அடித்தளம் அமைப்பது என்ற நோக்கோடு காவிக் கூட்டம் ஒரு வருடமாக முயன்று கொண்டிருக்கிறது. வெறியூட்டும் பேச்சுக்களுக்கு எந்த எதிர் வினையும் இல்லாததால் இப்போது தார்ச்சட்டியை கையிலேந்தி கலவரத்தை தூண்ட முடியுமா என்று ரத்த ருசி பார்க்க பிணம் திண்ணிக் கழுகுகள் காத்திருக்கின்றன.

ஆனால் அதே நேரம் கண்ணில் பட்ட இன்னொரு காட்சி மனதிற்கு தைரியம் அளித்தது.

மதிய உணவு இடைவேளையில் கமிசரி பஜார் என்ற ஒரு கடை வீதிக்குச் சென்றேன். போன வேளை முடிந்து வாகனத்தை கிளப்பும் வேளையில் ஒரு சின்ன கோயில் கண்ணில் பட்டது. அதை கோயில் என்று சொல்வது கூட தவறு. ஒரு ஐந்து அடி உயர அமைப்பில் கோபுரம் போல செய்யப்பட்டது. உள்ளே சின்னதாக ஒரு பிள்ளையார் சிலை. வினாயகர் சதுர்த்தி நேரத்தில் வீட்டில் வழிபடப்படும் களி மண் பிள்ளையார் சைசில் உள்ளே அந்த சிலை இருந்தது.


இதிலே என்ன சிறப்பு என்றால் அந்த குட்டி வினாயகர் கோயிலுக்கு வெளியே “பெயிண்டிங் உபயம்” என்று ஒரு துணிக்கடையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அது ஒரு முஸ்லீம் முதலாளியின் நிறுவனம். இந்து கடவுளின் கோயிலுக்கு முஸ்லீம் உபயம் செய்வது என்பது புதிததல்ல. திப்பு சுல்தான் தொடங்கி வரலாறு முழுதும் பல உதாரணங்கள் உண்டு.

இந்த மத ஒற்றுமையும் மத நல்லிணக்கமும்தான் இந்தியா.
தார்சட்டி கொண்டு இந்த ஒற்றுமையை சிதைத்து விட முடியாது.

3 comments:

  1. மிகவும் பாராட்டுக்குரிய பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வருத்தம் தரும் நிகழ்வு..
    இவர்களை விட நல்லாட்சி தந்தவர்கள் அந்த முஸ்லீம் மன்னர்கள்.

    ReplyDelete
  3. ஒரு தனிப்பட்ட தகவல் கேட்டு இந்தப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும் தோழரே!-
    தங்களின் செல்பேசி எண் வேண்டும். வரும் 06-06-2015அன்று வேலூரில் நமது நண்பர் விசுவின் புத்தகவெளியீடு மற்றும் பதிவர் சந்திப்புக்கு வரும்போது உங்களையும் சந்திக்க ஆவல். நீங்களும் வருவதாக டிடி பதிவில் இட்டிருந்தீர்கள் மகிழ்ச்சி. உங்களுக்கு எனது நூல்களைத் தரவேண்டும். செல்பேசி எண்ணைப் பொதுவில் தரவேண்டாம் என்று நினைத்தால் எனது செல்பேசியில் அழையுங்கள் 9443193293 (பின்னர் இந்தப் பின்னூட்டத்தை அழித்துவிடுங்கள்)

    ReplyDelete