புவனேஸ்வரில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று நேற்று இரவு இல்லம் திரும்பினேன். ஒரு சிறப்பான கூட்டத்தில் கலந்து கொண்ட நிறைவோடும் அக்கூட்ட முடிவுகளை எங்கள் கோட்டத்தில் அமலாக்க வேண்டிய பொறுப்போடும் உள்ளேன்.
புவ்னேஸ்வர் பயணம் காரணமாக வலைப்பக்கத்திற்கு ஒரு வார விடுமுறை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
பகிர்ந்து கொள்ள வேண்டிய பல கருத்துக்கள், அனுபவங்கள் என நிறைய இருக்கிறது. ஆனாலும் இந்த தோழர் பற்றி முதலில் பதிவிட வேண்டும் என்றே புவனேஸ்வர் செல்ல எக்மோர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த நொடி முதல் ஒரு வாரமாக மனது சொல்லிக் கொண்டிருக்கிறது.
பதினோரு வருடங்களுக்குப் பிறகு அன்றுதான் மீண்டும் எக்மோர் ரயில் நிலையம் வந்திருந்தேன். அதற்கு முன்பு வந்த போதுதான் அந்த சோகமான செய்தியும் பின்னே என்னை துரத்திக் கொண்டு வந்திருந்தது.
தோழர் ஆர்.சிவகுமார் - ஒரு அற்புதமான தோழர், நிஜமான செயல் வீரர்.
வேலூர் மண்ணின் மைந்தர். 1989 ல் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்தவர். இரண்டு வருடங்களிலேயே பதிவு எழுத்தராக பதவி உயர்வும் பெற்றார். சங்கத்தின் மீது உண்மையான பற்று கொண்டவர், எந்த பணி கொடுத்தாலும் அதை திறம்பட செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர். யாராக இருந்தாலும் முகத்திற்கு நேரே பேசக் கூடியவர்.
சி.எம்.சி மருத்துவமனையில் அவருக்கு இருந்த தொடர்புகள் அபாரமானது. எந்த ஒரு மருத்துவரையும் மிக எளிதில் அணுகி விடுவார். பெரும்பாலான மருத்துவர்கள் இவரது நல்ல நண்பர்கள். நாடு முழுதிலும் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வரும் தோழர்களை உரிய மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது, ஆலோசனைகள் வழங்குவது போன்ற பணிகளை அவர் பணியில் சேர்ந்த நாள் முதல் செய்து வந்தார். மேற்கு வங்கத்திலிருந்து வரும் பல தோழர்கள் அலுவலகத்திற்குள் நுழையும் போதே "காம்ரேட் சிவகுமார் இருக்கிறாரா?" என்று கேட்டுக் கொண்டே வருமளவிற்கு பிரபலமானவர்.
ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட்டேயாக வேண்டும்.
ஒரு தோழருக்கு Aplastic Anemia என்ற நோய். எங்கள் மருத்துவ முன் பணத் திட்டத்தின் படி அந்த நோய் பட்டியலில் இல்லை. ஆனாலும் சிகிச்சைக்கு பணம் கட்ட வேண்டிய அவசியம். Bone marrow transplantation என்ற சிகிச்சை முறையை பரிந்துரைத்திருந்தார்கள். என்ன செய்வது என்று புரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்த போது தோழர் சிவகுமார் என்னை அழைத்துக் கொண்டு "வா தோழா, சாண்டியை பார்ப்போம்" என்று அழைத்துக் கொண்டு போனார்.
டாக்டர் மாமேன் சாண்டி - உலகின் தலைசிறந்த Haematologist களில் ஒருவர். முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மரணத்தை ஆய்வு செய்ய மத்தியரசு நியமித்த நிபுணர் குழுவின் தலைவர் அவர் என்றால் அந்த மருத்துவரின் முக்கியத்துவம் தெரியும். அந்த மருத்துவரின் அறைக்குள் சகஜமாக நுழைந்து என்னை அறிமுகம் செய்ய நான் பிரச்சினையை விளக்க, இந்த நோய்க்கு முன் பணம் அளியுங்கள் என்று எல்.ஐ.சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த ஒரு கடிதத்தை அவர் தயாரித்து அவரே கையெழுத்திட்டு அளித்தார். பல வாரங்கள் காத்திருந்து முன்பதிவு செய்து பார்க்க வேண்டிய ஒரு மருத்துவர் கூட மிக இயல்பாக நண்பரைப் போல தோழர் சிவகுமாரிடம் பழகியது அவருடைய சிறப்பு.
அவருடனான பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை அகமதாபாத், ராய்ப்பூர் என்று இரண்டு அகில இந்திய மாநாட்டுக்களுக்கான நீண்ட தூர பயணங்கள் ஒரு நிமிடம் கூட அலுப்பு தெரியாமல் இருந்ததென்றால் அது தோழர் சிவகுமாரால் மட்டும்தான் என்று அடித்துச் சொல்ல முடியும்.
அவருடைய கடுமையான உழைப்பால் அவர் கோட்டச் சங்கத்தின் இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சி.எம்.சி மருத்துவ மனையில் எண்ணற்ற தோழர்களுக்கு சேவை செய்த தோழர் சிவகுமாரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் வந்தது ஒரு பெரும் துயரம். அதே மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
ஒரு குடும்ப விழாவிற்கு மன்னார்குடி செல்ல எக்மோரிலிருந்து புறப்படும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். காலை மருத்துவமனை சென்ற போது சிகிச்சைக்கு அவரது உடல் அங்கங்கள் இப்போதுதான் ஒத்துழைப்பு கொடுக்க துவங்கியுள்ளதாக சொன்னார்கள். மாலை சென்னை வந்து எதிரில் இருந்த உணவகத்தில் உணவை முடித்து விட்டு
மனைவி, மகனோடு எங்களது வண்டிக்கான நடைமேடைக்கு சென்று கொண்டிருக்கும் போதுதான் அலைபேசியில் இடி போல அந்த செய்தி வந்தது.
மனைவி, மகனோடு எங்களது வண்டிக்கான நடைமேடைக்கு சென்று கொண்டிருக்கும் போதுதான் அலைபேசியில் இடி போல அந்த செய்தி வந்தது.
"தோழர் சிவகுமார் இறந்து விட்டார்"
உடனடியாக பயணத்தை ரத்து செய்து விட்டு வேலூர் திரும்பினோம், உற்ற தோழருக்கு இறுதி அஞ்சலி செலுத்த.
எக்மோர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போது இதயத்தில் ஏற்பட்ட சுமையை உங்களிடம் மடை மாற்றியுள்ளேன்.
மேலே உள்ள புகைப்படத்தில் வட்டத்திற்குள் தாடியுடன் உள்ளவர் தோழர் சிவகுமார்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
ReplyDeleteooh so sad
ReplyDeletesooooooo sad thozhar. may his soul rest in peace
ReplyDeleteso you ppl performing all the personal and extra work instead of doing work in LIC. shame shame.
ReplyDeleteஅலுவலக நேரத்தில் செய்கிறோம் என்று எப்படி ஐயா கண்டுபிடித்தீர். அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு ஏனய்யா வெட்கப்பட வேண்டும்? ஒரு நல்ல மனிதரைப் பற்றிய பதிவில் இப்படி பின்னூட்டம் எழுதியதற்கு நீர்தானய்யா வெட்கப்பட வேண்டும்?
Deleteயாராவது நல்ல தோழரை பாராட்டி எழுதினால் வயிற்றெரிச்சல் படுகிற சில அற்பப் பேர்வழிகள் இருக்கிறார்கள். அந்த புத்திதான் உமக்கும்
எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDelete