Friday, May 8, 2015

சல்மான்கான் - நீதிமன்றம் - அவமதிப்பு வழக்கு - எச்சரிக்கை



சல்மான்கான், சஞ்சய் தத்  - சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சல்மான் கானுக்கு நேற்று இரண்டே மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்டதையும் இன்று தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதையும் கண்டித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம், அவர்கள் இந்திய நீதி பரிபாலனம் பற்றி அதீத நம்பிக்கை உடையவர்களாகையால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

சஞ்சய் தத்திற்கு அதிக நாட்கள் காவல் விடுப்பு (பரோல்) வழங்கப்பட்ட போதும் அப்படித்தான் திகைத்தார்கள்.

அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் தண்டனை பெற?

ஆண்டுகள் பல ஆனாலும் இன்னும் பிணை கிடைக்காத மாருதி சுசுகி நிறுவன தொழிலாளர்களா அவர்கள்? பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக உரிமைக்காக போராடிய குற்றத்தையா செய்தார்கள் அவர்கள்?

பன்னாட்டு பாக்ஸ்கான் கம்பெனிக்கு எதிராக போராடியதால் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டது. அப்படிப்பட்ட குற்றம் எதையும் இழைத்து விடவில்லையே அவர்கள்?

ஓடிப் போன நோக்கியா கம்பெனிக்கு எதிராக போராடிய குற்றம் புரிந்திருந்தால் வேண்டுமானால் அவர்களை காராகிரகத்தில் அடைக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இருக்கலாம்.

நிலத்திற்காக, உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிற அற்பப் பிறவிகளா அவர்கள்?

திரையில் தோன்றி சண்டையிட்டு, வசனம் பேசி, நடனமாடி, பொய்யாய் கண்ணீரும் சிந்தி உங்களை மகிழ்வூட்டும் நட்சத்திரங்கள் அவர்கள். பணக்காரர்களின் பிரதிநிதிகள். அவர்களின் பிம்பங்களைக் கண்டு சிலிர்த்து போகிற சாமானிய மக்களுக்குத்தான் சட்டம் மற்றும் பிற இழவுகள் எல்லாம்.

திரை வானில் ஜொலிக்கும் தாரகைகள் எப்போதுமே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தான்.அவர்களின் ஜிகினா பிரகாசத்தில் நீதி தேவதையின் கண்கள் கூசாதா என்ன?

சினம் கொண்ட சினிமா சிங்கங்களை சிறையிலடைத்தால் அவர்கள் சிறையையே சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

மீண்டும் சிறையை கட்டுகிற வீண் செலவு அரசுக்குக் கூடாது என்பதற்காக அவர்கள் வெளியே இருக்க வேண்டும் என்று புத்திசாலித் தனமாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ள நீதிமான்களை கண்டனம் செய்து யாரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாகாதீர்கள். ஜாக்கிரதை.

4 comments:

  1. பிணையில் வெளியில் வந்தால் கட்டாயம் சாட்சிகளை மிரட்டும் வல்லமையும் அல்லது ஓடி ஒளிந்துக்கொள்ள கூடியவர்களுக்கு எல்லாம் பிணை தொகையை கட்டி விட்டு வெளியில் செல்ல விடுவதும். விட்டால் வீட்டிற்கு கூட போக வழி இல்லை என்று இருப்பவனை வருட கணக்காக சிறையில் வைத்து இருப்பது இந்தியா என்று இல்லை உலகின் உள்ள அத்தனை நாடுகளிலும் நடக்கும் ஒன்று தான். அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.....சொல்ல போனால் அமெரிக்காவின் நீதிமன்றங்கள் இன்னமும் ஒரு படி மோசம் என்றும் கூட சொல்லலாம்.

    ReplyDelete
  2. இந்தக் காணொளியைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    இல்லையேல் அவசியம் பார்க்கவும். இரண்டு பாகங்கள் உள்ளன.


    https://www.youtube.com/watch?v=3rkEEJhCJSY

    ReplyDelete
  3. இந்திய அவமானம்.

    ReplyDelete