மோடி அரசு பதவியேற்றதிலிருந்து உருப்படியாக எதுவும் செய்யவில்லை. எதுவும் செய்யப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம். ஆனால் முதல் நாள் முதலே சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது.
கறை படிந்தவர்களுக்கு அமைச்சர் பதவி தரவேண்டாமே என்ற உச்சநீதிமன்ற அறிவுரை பற்றி நாளை விரிவாக பார்ப்போம். இப்போது புதிய சர்ச்சையான மகன்கள் பற்றி பார்ப்போம்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் மகந்த்சிங் பற்றிய செய்திகள் தவறு, வதந்திகள் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும் பிரதமர் அலுவலகமும் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளனர். அப்படி என்ன தவறான செய்திகள் வந்துள்ளது என்று தேடி தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.
பொதுவெளியில் அப்படி எந்த செய்தியும் பரவாத போது மறுப்பறிக்கை வர வேண்டிய அவசியம் என்ன? அல்லது பிரதமருக்கும் பாஜக தலைவருக்கும் ஏதாவது குற்றச்சாட்டு சென்று அதற்கு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்களா? இல்லை அது ராஜ்நாத் சிங்கிற்கு "ஒழுங்காக இரு, இல்லையென்றால் உனது மகன் பற்றிய செய்திகள் வெளி வந்து விடும்" என்று ஏதாவது மிரட்டலா?
விஷயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
அடுத்தது ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா மகன் கார்த்திக் கௌடா தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் கொடுமை செய்து ஏமாற்றி விட்டார் என்று நடிகை மைத்ரேயி கொடுத்துள்ள புகார்.
அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கை என்று அமைச்சர் சொன்னாலும் பாஜக அறிக்கையோ சட்டப்படி எல்லாம் நடக்கட்டும் என்று சொல்கிறது. எனக்கு அந்தப் பெண்ணை தெரியவே தெரியாது என்று மகன் சொன்னாலும் அது முழுச் சோற்றில் மறைக்கப்பட்ட பூசணிக்காய் என்பது புகைப்படங்களைப் பார்க்கும் போது தெரிகிறது.
இந்த விஷயம் எது வரை போகப் போகிறதோ?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
ராஜ்நாத் சிங்கும் சதானந்த கௌடாவும் பதவியில் நீடிப்பது அவர்களது மகன்கள் கையில்தான் இருக்கிறது.
இனி மற்ற அமைச்சர்களாவது தங்கள் வாரிசுகளை அடக்க ஒடுக்கமாக இருக்கச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா? இல்லை அப்பா அமைச்சராக இருக்கும் போது ஆட்டம் போடாமல் வேறு எப்போது ஆட்டம் போடுவது என்று இருக்கப் போகிறார்களா?
No comments:
Post a Comment