Thursday, August 7, 2014

இயர் போனை கழற்றி விட்டீர்களா மிஸ்டர் மோடி

தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களின் கட்டுரையை கீழே தந்துள்ளேன். இயர் போனை கழட்டி சாமானியனின் குரலைக் கேளுங்கள் என்றுதான் அவர் முடித்திருப்பார். 

அப்படி இயர் போனைக் கழட்டி அவரது அரசின் மோசமான முடிவை மோடி மாற்றிக் கொள்வாரா?

யாராவது  மோடிக்கு ஓட்டு  கேட்ட, போட்ட புண்ணியவான்கள்  இருந்தால் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்

இன்சூரன்ஸ் அந்நிய முதலீடு :
 http://tamil.thehindu.com/multimedia/dynamic/02038/modi1_2038562h.jpg
இயர் போனைக் கழற்றுங்கள்
சாமானியன் குரல் கேட்கட்டும்!

.சுவாமிநாதன் 
(பொதுச் செயலாளர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு )

-------------------------------------------------------------------------------------------------------------


ஆசை அறுபது நாள் என்பார்கள். மத்தியில் பதவியேற்றுள்ள புதிய அரசு ஆட்சியில் அமர்ந்து 60 நாட்களுக்குள்ளாக இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உய ர்த்துகிற   சட்ட வரைவுக்கு காபினெட் ஒப்புதலைத் தந்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆகஸ்ட 4 - திங்கள் அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது. இது 2008 ல் நாடாளுமன்றத்தில் .சிதம்பரம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட சட்ட வரைவு. ஆறு ஆண்டுகளாக பி.ஜே.பி இதனை எதிர்த்தும் வந்திருக்கிறது. ஆனால் அறுபது நாளில் நிறைவேற்ற முனைகிற முரண்பாடு  ஏன்? அவசரம் ஏன்? நிர்ப்பந்தம் என்ன?

நாடாளுமன்ற மாநிலங்களவை விவாதப்பொருளில் இச்சட்ட வரைவு ஜூலை 31 அன்று இடம் பெற்றிருந்தது. அதே நாளில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியின் இந்திய வருகையும் அமைந்திருந்தது. செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்திக்கச் செல்வதற்கான தயாரிப்பு  இது. அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சிலில் தொடர்ந்து வைக்கப்படும் முக்கியக் கோரிக்கை இன்சூரன்ஸ் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பதே! ஜான் கெர்ரிக்கு இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கும்போது பூங்கொத்து கொடுப்பதற்குப் பதிலாக இச் சட்ட வரைவை தந்திருக்கிறார் அருண் ஜெட்லி.

மோடி அவர்களே! நீங்கள் செப்டம்பர் மாதம் ஒபாமாவைச் சந்திக்கும் போது  "உலகம் முழுவதும் எந்தத் தடைகளும் இல்லாமல் உங்கள் பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களும், வங்கிகளும் கடை விரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களே! ஆனால் 2008 ல் துவங்கிய உலக நிதி நெருக்கடியில் பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களும், 500 க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் உங்கள் நாட்டில் சீட்டுக் கட்டை சரிந்தது போல் திவாலாகி வீழ்ந்தது ஏன்?" என்ற   கேள்வியை கேட்பீர்களா! "எங்கள் நாட்டில் ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசிய மயமாக்கி 57 ஆண்டுகளாகவும், பொது இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கி 41 ஆண்டுகளாகவும் திவால் என்ற வார்த்தையே எங்கள் காதுகளில் விழவில்லையே! ஆனால் நாங்கள் இந்தியாவில் டாட்டாவோடு கைகோர்த்து இன்சூரன்ஸ் இணைவினை செய்ய அனுமதித்த உங்களின் பிரம்மாண்ட நிறுவனம் ..ஜி, நிதி நெருக்கடி சூறைக் காற்றில் தள்ளாடித்  தடுமாறிப் போனதே! இங்கே அரசுப் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனை பற்றி பேசுகிறோம். ஆனால் உங்கள் நாட்டிலோ ..ஜி யின் 80 சதவீதப் பங்குகளை அரசாங்கம் வாங்கி அல்லவா  நெருக்கடியில் இருந்து அதைக் காப்பாற்றினீர்கள்" என்று கேட்பீர்களா!

நம்பிக்கைதானய்யா மூலதனம் 

இன்சூரன்ஸ் துறைக்கு மூலதனம் அதிகமாகத் தேவைப்படுகிறது, இன்சூரன்ஸ் துறையில் இணைவினைத்  தொழில் புரியும் இந்தியத் தனியார்கள் அந்நிய முதலீட்டு உயர்வைக் கோருகிறார்கள் என்பது அரசின் வாதம். ஆனால் இது மூலதனம் அதிகம் தேவைப்படுகிற துறை அல்ல; மாறாக மக்களின் நம்பிக்கையே இதற்கு அஸ்திவாரம் என இன்சூரன்ஸ் துறை நிபுணர்கள் பலரின் கருத்து. மூலதனம் அதிகம் தேவை என்ற வாதமே அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கான இசைவைப் பெறுகிற உத்திதான்

எல்..சி 57 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று திகழ்கிறது. ஆனால் இந்திய இன்சூரன்ஸ் துறை அந்நிய முதலீட்டிற்கு 26 சதவீதம் என்ற வரையறையோடு திறந்து விடப்பட்டு 13 ஆண்டுகளுக்குள்ளாக இங்கே வந்த அமெரிக்காவின் ..ஜி இணை வினையை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டது. ஆஸ்திரேலியாவின் .எம்.பி விருந்தாளி போல டாட்டா காட்டி விட்டு போய்விட்டது. ஆயுள் இன்சூரன்ஸ் என்பது பாலிசிதாரரோடு உருவாகிற நீண்ட கால  ஒப்பந்தம். 10 ஆண்டுகள் கூட நீடிக்காமல் நடையைக் கட்டுகிற இவர்களுக்கு எதற்காக, எந்த நம்பிக்கையில்  இன்னும் இன்னும் கதவுகளைத் திறக்க வேண்டும்

இந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழைந்துள்ள இந்தியத் தனியார்கள் எல்லாம் மிக மிகப் பெரிய தொழிலகங்கள். டாட்டா, பிர்லா, அம்பானி, பஜாஜ் போன்று அன்னியச்சந்தை நோக்கி தங்களின் முதலீட்டைத் திருப்பி விடுபவர்கள். உலக பகாசுர உருக்குக் கம்பெனியான "கோரஸ்" டாட்டாவால் சில ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கப்படவில்லையா! பிர்லா " நோவாலிசை" வாங்கவில்லையா! இந்தியாவில் இருந்து அந்நிய சந்தை நோக்கி இப்படி கடந்த ஆறு ஆண்டுகளில் (2006-13) பறந்துள்ள முதலீடுகள் ஆறு லட்சம் கோடிகளுக்கு மேல். ஆனால் 13 ஆண்டுகளில் இந்திய ஆயுள் இன்சூரன்ஸ் துறைக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ 6300 கோடிகள் மட்டுமே. எனவே இந்தியத் தனியார்கள் அந்நிய முதலீட்டை சார்ந்தே தொழில் நடத்த  வேண்டியுள்ளது என்பது 'திறமையான வழக்கறிஞர். அருண் ஜெட்லியின் ஒப்பேறாத வாதம்.

வற்றிப் போனது அங்கே!

இந்தியாவிற்குள் அந்நிய முதலீடுகள் வருவது " இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு" உதவும் என்பது அரசின் இன்னொரு வாதம். அந்நிய முதலீடுகள் ஏதோ தர்ம சிந்தனையோடு சமுகத்தின் கடைசி மனிதனுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பை தருவதற்கு வருகிறது என்பது அப்பாவித் தனமானது. உண்மையில் பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தாய் நாடுகளில் பெரும் நெருக்கடி. வட அமெரிக்காவில் சந்தை மைனஸ் 2.9 சதவீதம் என சுருங்கியுள்ளது. ஐரோப்பாவில் மைனஸ் 0.6 சதவீதச் சுருக்கம். இது புகழ் பெற்ற "சிக்மா" அறிக்கை தருகிற தகவல்கள்.அங்கே குளம் வற்றிப்போனதால் இங்கு இரை தேடி அவர்கள் வருகிறார்கள் என்பதே உண்மை

அந்நிய முதலீடு இந்தியச்  சந்தை அறுவடைக்கான முதிர்ச்சியை அடைந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னரே உள்ளே வர எத்தனித்தது என்பதும் உண்மை. 1990 களிலேயே, அதாவது தனியார், அந்நிய நிறுவனங்கள் இந்திய இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய 10 ஆண்டுகளிலேயே ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 19.5 சதவீதமாக இருந்தது. அதே விகிதத்தை 2013 வரை கணக்கிற் கொண்டால் மொத்தப்  பிரிமிய திரட்டல் 337000 கோடிகள் வருகிறது. இன்று எல்..சி மற்றும் ​​​ 23 தனியார்  நிறுவனங்களின் மொத்த  வணிகத்தை கூடினால் இவ்வளவு பிரிமியம்தான் வருகிறது. என்ன அர்த்தம்! இவர்கள் சந்தையை வளர்க்கவில்லை. இன்சூரன்ஸ் விழிப்புணர்வை பட்டி தொட்டியெங்கும் எல்..சி உருவாக்கிய பின்னர் வளர்கிற சந்தையை பங்கு போட்டிருக்கிறார்கள் என்பதே

அந்நிய முதலீடு இன்சூரன்ஸ் பயன் இல்லாதவர்களுக்கெல்லாம் இப்பயனை கொண்டு சேர்க்கும் என்று பேசுகிறார்கள். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விற்றுள்ள பாலிசிகளின் ஆண்டு சராசரி பிரிமியம் எவ்வளவு தெரியமா !  ரூ 30000. எல்..சியின் சராசரி பிரிமியம் ரூ 12000. மோடிக்கு ஆலோசனை கூறுகிற நிபுணர்கள் இதையெல்லாம் குறிப்புகளில் எழுதவில்லையா? எழுதியும் எடுக்கப்பட்ட முடிவா இது? இக்கணக்கு உணர்த்துகிற உண்மை என்ன? மாதம் ரூபாய்  ஆயிரத்துக்கும் குறைவாக இன்சூரன்சுக்காக சிறுக சிறுகச் சேமிக்க முடிகிற வியர்வைத் துளிகளோடு வயல் வரப்புகளில் நிற்கிற விவசாயிகளும், அடித்தள மக்களும், சேரிமனிதர்களும் இன்சூரன்ஸ் பாதுகாப்பிற்காக எல்..சியின் கதவுகளைத் தான் தட்டமுடியும் என்பதுதானே       



கசக்கும் சிற்றூர்கள்  

இந்தியாவில் 10000 பேருக்கும் கீழே வசிக்கும் சிற்றூர்களில் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் திறக்கப்டும் என 2013 பட்ஜெட்டில் அப்போதைய அரசு அறிவித்தது. யாரை நம்பி இந்த அறிவிப்பு? எந்தத் தனியார்களாவது இச் சிற்றூர்களுக்கு  போயிருக்கிறார்களா! முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொந்த கிராமம் கண்டனூரில் கூட எல்..சிதானே மினி அலுவலகத்தை திறந்துள்ளது. பிரதமர் மோடியின் குஜராத்தில் எப்படி? அருண் ஜெட்லியின் பஞ்சாப் மாநிலத்தின் நிலவரம் என்ன! தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில், வட கிழக்கு மாநிலங்களில், சட்டிஸ்கரில் எல்லாம் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை போகச் சொல்லித் தானே அரசு வற்புறுத்துகிறது. எனவே இந்திய இன்சூரன்ஸ் துறையை வெறும் வியாபாரம், லாபம் என்று பார்க்கக்  கூடாது. அதற்கு மேல் தேச ஒற்றுமை, பொது நீரோட்டத்தில் விளிம்பு நிலை மக்களை இணைத்தல் என்கிற உன்னத இலக்குகள் உள்ளன.
ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் லாபம் சற்று குறைந்தாலே தனியார் நிறுவனங்கள் மூடியுள்ள கிளைகள் ஆயிரக் கணக்கானவை

இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஆதார தொழில்களுக்கு நிதி திரட்டலுக்கு அந்நிய முதலீடுகள் உதவும் என்பது மற்றுமோர் வாதம். ஜெட்லி அவர்களே! உங்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆண்டு ஆய்வறிக்கைகளை புரட்டிப்  பாருங்கள்! கடந்த 13 ஆண்டுகளில் 26 சதவீத வரையறையோடுஅந்நிய முதலீடு அனுமதிக்கபட்டுள்ளதே!
எவ்வளவு நிதி, ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு வந்தது? எல்..சி 11 வது ஐந்தாண்டு திட்டதிற்கு திரட்டித் தந்துள்ள தொகை ரூ 704000 கோடி. 13 ஆண்டுகளில் வந்துள்ள மொத்த இன்சூரன்ஸ் அந்நிய முதலீடே ரூ 6300 கோடிதான். மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம். ஆனால் மடுவின் மீது ஏறி நின்று அதுதான் பெரிது என்று ஆட்சியாளர்கள் கூவுகிறார்கள். உண்மையில் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நிதி வேண்டுமானால் அவர்கள் எல்..சியை பலப்படுத்த வேண்டும். தலை கீழாகப் பேசுகிறார்கள்.

ஹீரோவுக்கே அந்த கதி!

தீவிர வாதத்தை ஒடுக்குவது பற்றி அதிகம் பேசுகிற அரசு இது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான தீவிர வாதத் தாக்குதல் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அதில் தனது உயிரையே விலையாகக் கொடுத்தவர் தீவிர வாத எதிர்ப்பு அதிரடிப் படைத் தளபதி ஹேமந்த் கர்கரே. அவரின் பாலிசி உரிமத்தை அவர் இறந்த 48 மணி நேரத்திற்குள்ளாக வீடு தேடிச் சென்று கதவைத் தட்டித்  தந்தது எல்..சி. ஆனால் அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். அந் நிறுவனமோ "எங்கள் பாலிசி விதிமுறைகளில் தீவிர வாதம் உள்ளடங்கவில்லை" " அவர்  உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே அச் செயலில் ஈடுபட்டார் " என்றெல்லாம் கூறி உரிமத் தொகையை வழங்க மறுத்தது. தேசம் போற்றிய ஹீரோவுக்கே இதுதான் கதி  என்றால் 'ஜீரோக்களாக" உள்ள சாதாரண மக்களின் கதி என்ன

எல்..சியின் உரிமப் பட்டுவாடா விகிதம் 99.5 சதவீதம். உலகத்தில் எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும் செய்யாத சாதனை. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உரிமபட்டுவாடா விகிதமோ 89 சதவீதம். சில தனியார் நிறுவனங்களில் நிலுவையாகவுள்ள உரிமங்கள் 50 சதவீதம் வரை கூட உள்ளன. தொழிலின் நோக்கத்தையே காப்பாற்ற முடியாதவர்களை அரசு எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறது! இந்த 13 ஆண்டுகளில் எந்த புதிய சரக்கையும் இவர்களால் வாடிக்கையாளர்களுக்கு தர முடியவில்லை. பாரம்பரிய இன்சூரன்சை பின்னுக்குத் தள்ளி பங்குச் சந்தை சூதாட்டத் திட்டங்களை ஊக்குவித்ததுதான் இவர்களின் புதுமை. அதிலும் இழப்பு அப்பாவி பாலிசிதாரர்களுக்குதான்.

2012 ல் நாடாளுமன்ற மாநிலங்களவை விவாதம் ஒன்றில் முன்னாள்  மும்பை பல்கலைக் கழக துணை வேந்தரும், நியமன உறுப்பினருமான பால சந்திர முங்கேகர் கூறினார் " நான் எல்..சி யின் பாலிசிதாரர் கவுன்சில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். நான் சந்தித்த நூற்றுக் கணக்கான பாலிசிதாரர்களிடம் நீங்கள் எப்போதாவது எல்..சி யில் கையூட்டு தரவேண்டி வந்துள்ளதா! என்று கேட்டிருக்கிறேன். ஒருவர் கூட ஒரு ருபாய் கூட தந்ததாகச்  சொன்னதில்லை". ஆனால்  1956 க்கு முன்பு எப்படி இருந்தது!  அன்று நாடாளுமன்றத்தில் பெரோஸ் காந்தி " அர்த்த சாஸ்திரத்தில் கௌடில்யர் 42 வகை மோசடிகளையே பட்டியல் இட்டிருந்தார். ஆனால் இந்திய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கௌடில்யர் பட்டியலையே விஞ்சிவிட்டன" என்றார்

இயர் போனை கழற்றுங்கள்!

6 ஆண்டுகளாக உங்கள் கட்சி எதிர்த்த மசோதாதான் இது. உங்களின் யஸ்வந்த் சின்கா தலைவராக இருந்த நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக் குழுவின் 35 உறுப்பினர்களும் கட்சி சார்பின்றி ஒரே குரலில் அந்நிய முதலீட்டு அதிகரிப்பை நிராகரித்துள்ளார்கள். .சி..சி. - லோம்பார்ட் போன்ற தனியார் நிறுவனங்களே கூட நிலைக் குழுவின் முன்பு  அந்நிய முதலீட்டு உயர்வுக்கு அவசரப்பட வேண்டாம் என சாட்சியம் அளித்துள்ளனர். ஏனெனில் குடுமி அந்நியர் கைகளுக்கு போய்விடும் என்ற அச்சம்தான்.

இந்திய இன்சூரன்ஸ் துறை, வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வெள்ளையருக்கு ஒரு பிரிமியம்: தரம் குறைந்த உயிர்கள் என இந்தியர்களுக்கு ஒரு பிரிமியம் என இருந்த வேறுபாட்டிற்கு எதிராக திலகர் போன்றோர் வெகுண்டெழுந்து சுதேசி நிறுவனங்களை உருவாக்கிய வரலாறு இதற்கு உண்டு.

மோடி அவர்களே! ஹை- டெக் பிரதமர் நீங்கள்!  கார்பரேட் ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்களுக்கு தடல் புடல் வரவேற்பை அளிக்கலாம்.  ஆனால் உங்கள் காதுகளில் உள்ள இயர் போனைக் கழற்றுங்கள்! அதன் பேரிரைச்சலில் இன்சூரன்ஸ் பயனுக்காக ஏங்கும் ஒரு சாமானிய மனிதனின் குரல் கேட்காமல் போய்விடக் கூடாது.   


No comments:

Post a Comment