அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக பிரதமருக்கும் மாநில
முதல்வர்களுக்கும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அறிவுரையை பார்க்கையில் நிஜத்தில்
எனக்கு சிரிப்புதான் வந்தது.
முதலில் இந்த அறிவுரையெல்லாம் மோடிஜிக்கு
பொருந்தாது. தீர்ப்பு கொடுத்தாலே அதை ஒதுக்கி வைத்து விட்டு தனது இஷ்டத்திற்கு
கவர்னர்களை பந்தாடிக் கொண்டு இருப்பவருக்குப் போய் அறிவுரையா? அதிலும் அமைச்சர்களை
நியமிக்கும் உரிமை பிரதமருடையது என்று சொன்ன பின் “எங்களுக்கு எதுக்கு அறிவுரை?
நாங்க கறை படிஞ்சவங்களுக்கும் மந்திரி பதவி கொடுப்போம். அமைச்சர் பதவி கொடுத்துட்டு
கறை படிஞ்சவங்களா மாத்துவோம்” என்றல்லவா அவர் செயல்படுவார்!
சரி பிரதமர்தான் நிஜமாகவே அமைச்சர்களை முடிவு
செய்கிறாரா?
கடந்தகால அனுபவங்கள் அப்படியெல்லாம் கிடையாது என்றெல்லவா
சொல்கிறது…
நிதியமைச்சராக யார் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க
முதலாளிகள்தான் முடிவு செய்வார்கள் என்பதை யஷ்வந்த் சின்ஹா, ப.சிதம்பரம் ஆகியோரின்
கடந்த கால நியமனமும் தோற்றுப் போனாலும் அருண் ஜெய்ட்லி இரண்டு முக்கிய துறைகளில்
அமைச்சராக இருப்பதும் சொல்கிறது. இவர்கள் அனைவருமே நிதித்துறை சீர்திருத்தம் என்ற
பெயரில் பன்னாட்டு கம்பெனிகளின் நலனுக்காக வங்கி, பென்ஷன் மற்றும்
காப்பீட்டுத்துறையை திறந்து விடத் துடிப்பவர்கள்.
வர்த்தக அமைச்சராக ஆனந்த் ஷர்மா நமக்கு சரிப்பட்டு
வருவாரா என்று ஹில்லாரி கிளிண்டன் கேட்டது விக்கி லீக்கில் அம்பலமானதை மறக்க
முடியுமா?
கூட்டணியில் யார் அமைச்சராக வேண்டும் என்பதை அந்த
கட்சியின் தலைவர்தான் முடிவு செய்ய முடியுமே தவிர பிரதமர் அல்லவே. டி.ஆர்.பாலுவை
நியமிக்க மன்மோகன்சிங்கிற்கு விருப்பமில்லை என்ற தகவலும் நினைவுக்கு வருகிறதே!
ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியை
ராஜினாமா செய்ய வைத்து மறுநாள் வேறு ஒருவரை மம்தா ரயில்வே அமைச்சராக அழகு
பார்த்ததும் நினைவிற்கு வந்து தொலைக்கிறதே!
வி.பி.சிங் காலத்தில் கூட அவர் வைகோவை அமைச்சராக்க
விரும்பினார் என்றும் கலைஞர் முரசொலி மாறனை முன்னிறுத்திய காரணத்தால் “நகர்ப்புற
அபிவிருத்தி” என்ற டம்மி அமைச்சகத்தை அவருக்கு ஒதுக்கினார் என்ற தகவல் பல காலம்
உலவி வந்ததே!
பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், கூட்டணிக்
கட்சிகளின் தலைவர்கள் பாஜக என்றால் கூடுதலாக ஆர்.எஸ்.எஸ் இவர்கள்தான் அமைச்சர்
யார் என்பதை முடிவு செய்யக் கூடியவர்களே தவிர பிரதமர் அல்ல என்பது யதார்த்தம், அது
வலிமை மிக்கவராக சொல்லப்படும் மோடியாக இருந்தால் கூட.
மேலே சொன்னதை விட இன்னும் முக்கியமானவர்களும் உண்டு.
உண்மையில் சொல்லப் போனால் அவர்கள்தான் சக்தி மிக்கவர்கள். ஆம் நீரா ராடியா போன்ற
தரகர்கள்தான்.
இப்படிப்பட்ட சூழலில் கறைபடிந்துள்ளவர்களை எல்லாம்
அமைச்சராக்கக் கூடாது என்று அறிவுரை சொல்லும் நீதிபதிகள் எவ்வளவு அப்பாவிகள்!!!!!!