Sunday, February 12, 2023

அந்த திரைப்படங்கள் போலவே . . .

 


ஹைதராபாத்திலிருந்து  70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற வெங்கட்பூர் எனும் கிராமம். ஜனவரி 9 ம் தேதி காலை வழக்கம் போல பணிக்கு வருகிற துப்புறவுத் தொழிலாளர்கள் ஒரு கார் எரிந்து போயும் அதில் ஒரு ஆண் கால்கள் தவிர கருகிய நிலையில் இருப்பதையும் பார்க்கிறார்.

தகவல் பறக்கிறது. ஊரார் வருகின்றனர். போலீசும் வருகிறது. எரிந்த காருக்குப் பக்கத்தில் ஒரு பையில் ஒருவரின் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், ஊழியர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்கள்.

அவர் தெலுங்கானா தலைமைச்செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். ஆசிரியராக வேலை பார்த்தவருக்கு அரசு அதிகாரியாக வேலை கிடைக்கிறது.

அவருடைய கார்தான் என்று ஊரே சொல்கிது. இறந்த்து என் கணவர்தான் என்று மனைவி அடையாளம் காட்ட தகனமும் முடிந்தது.

ஆனாலும் போலீசுக்கு கொஞ்சம் நெருடல்.

 காரில் எரிந்த உடலின் கால்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது. ஆனால் இறந்து போனவரின் புகைப்படமோ, அவர் சிவப்பு நிறம் என்று சொன்னது. போதாக்குறைக்கு எரிந்த காருக்கு பக்கத்தில் இரண்டு லிட்டர் பெட்ரோல் பாட்டில் வேறு.

 போலீஸ் விசாரிக்கிறது. ஒரு விபத்தில் அடிபட்டதால் காலில் தழும்புகள் உருவானது. அதனால் அவை சிவப்பாக இல்லை என்று மனைவி சொல்கிறார். அவரை கொலை செய்ய் எந்த முகாந்திரமும் யாருக்கும் கிடையாது என்று ஊர் மக்கள் சொல்கிறது.

 இறந்தவரின் தொலைபேசியை ஆராய்கிறது. ஸ்ரீனிவாஸ், பாபு என்ற இருவருடன் நிறைய பேசியதாக தொலைபேசி ஆவணங்கள் சொன்னது. அவர்களை விசாரித்த போது சந்தேகப்படும் படி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 தொலைபேசி எண்களை நன்கு ஆராயும் போது ஜனவரி மாதம் 7 ம் தேதி மட்டும் ஒரே ஒரு தொலைபேசி ஒரு புதிய எண்ணிலிருந்து வந்துள்ளது. அந்த எண்ணை கண்டுபிடித்தால் அது விபத்து நடந்த ஊரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஊரில் உள்ள ஒரு டீக்கடை முதலாளியின் எண். போலீஸ் நேரில் விசாரித்த போது, ஒரு வாடிக்கையாளர், தன் போனில் பணம் இல்லாததால்  என் போனை வாங்கி பேசினார் என்றும். அந்த நபரை இன்னொரு முறை பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று சொல்ல, போலீஸ் அந்த அரசு ஊழியர் மற்றும் அவரது உறவினர்களின் புகைப்படங்களை காண்பிக்க தொலைபேசி செய்த அந்த நபர் ஸ்ரீனிவாஸ்.

 போலீஸ் மீண்டும் விசாரிக்க ஸ்ரீனிவாஸ் சொன்ன உண்மை அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

 தன் மாமாவான அரசு ஊழியரை தானும் கொல்லவில்லை என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை, அவரே இறந்து போகவில்லை என்பதையும் சொல்ல போலீஸின் கவனிப்பில் மற்ற உண்மைகளும் வெளி வந்து விட்டது.

 ஆசிரியராக வேலை பார்த்து  அரசு அதிகாரியாக மாறிய பிறகு கடன் வாங்கி ஆடம்பரமாக வீடு கட்டுகிறார். வட்டி கட்ட முடியவில்லை. சிட்பண்டுகளில் கட்டியிருந்த சீட்டுப் பணத்தை எடுக்கிறார். சீட்டு தவணைகளை கட்ட முடியவில்லை. பங்குச்சந்தைக்குப் போகிறார். அங்கும் நல்ல அடி.  நிலைமையை சமாளிக்க கிரிமினல்தனமாக யோசிக்கிறார்.

 வெவ்வேறு மாதங்களில் எட்டு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்கிறார். ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்குகிறார்.

 வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும் என்று தேடுகிறார். வலையில் இரை சிக்குகிறது. ஊருக்கு அழைத்து போவதாக சொல்கிறார். அந்த மனிதன் நிறைய மது அருந்தியிருந்ததால் திட்டத்தை கை விடுகிறார். இறந்து போகும் மனிதன் வயிற்றில்  ம்து இருப்பது போஸ்ட் மார்ட்டத்தில் தெரிய வந்து அதன் மூலம் டெத் க்ளெய்ம் நிராகரிக்கப்படுமா என்ற  அச்சமே காரணம்.

 மறு நாள் இன்னொரு இரை சிக்குகிறது. இவரும் இவர் உறவினர் ஸ்ரீனிவாசும் அந்த இரைக்கு கள் வாங்கிக் கொடுத்து (போஸ்ட்மார்ட்டம் பற்றிய கவலையை  மறந்து விட்டார்கள் போல) தலையில் தட்டி கொன்று விட்டனர். காரின் ட்ரைவர் சீட்டில் உட்கார வைத்து ஒரு பள்ளத்தில் தள்ளி விட்டார்கள். காரின் மீது பெட்ரோலை  ஊற்றி கொளுத்தி விட்டார்கள். விபத்து போல காட்சியளிக்க வேண்டுமென்பதுதான் திட்டம்.

 கடைசியில் எரியாத கால்களும் இரண்டு லிட்டர் பெட்ரோல் பாட்டிலும் பேலன்ஸ் தீர்ந்து போன போனும் காட்டிக் கொடுத்து விட்டது. அவரும் ஸ்ரீனிவாசும் மட்டுமல்ல, கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் மனைவியுமே இப்போது சிறையில் உள்ளனர்.

 நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த “பலே பாண்டியா”  நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்த “கை நிறைய காசு” அகிய இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான். தன்னைப் போலவே இருக்கும் நபரை கொலை செய்து தான் காப்பீடு செய்திருக்கிற தொகையை பெறுவது என்பதுதான்.

 உருவ ஒற்றுமை இல்லாத போதும் வேறு ஒருவரைக் கொன்று தான் இறந்து போனதாக நாடகமாடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மோசடி செய்தவர்கள் இப்போது சிறையில் தவிக்கிறார்கள்.

 முக்கியமான விஷயத்தை சொல்லவில்லையே!

 அந்த மோசடிப்    பேர்வழியின் பெயர்

 தர்மா

1 comment:

  1. தர்மா"வின் வாழ்வு தன்னை சூது கவ்வியது.

    ReplyDelete